Friday, 8 March 2013

உங்களில் ஒருவன்

by Vijay Kumar on Wednesday, November 24, 2010 at 11:05pm ·
எழுதியவர் சகோ.விஜய் (http://vijay76.wordpress.com)

கொலேசே சபையில் முதன்மையானவவர்களுள் ஒருவராக இருந்தவர் பிலேமோன். அவரது வீட்டில்தான் கொலேசே சபை கூடி வந்திருக்கலாம் என்ற கருத்து நிலவுகிறது. பிலேமோன் என்பதற்கு ”அன்புள்ளவர்” என்று அர்த்தம். பெரும் செல்வந்தரான இவரது வீட்டில் அக்கால வழக்கப்படி நிறைய அடிமைகள் இருந்தனர் அவர்களில் ஒருவர் பெயர் ஒநேசிமு. அவர் ஒருநாள் தன் எஜமானரை விட்டுத் தப்பி ஓடுகிறார். தப்பி ஓடியவர் தெய்வாதீனமாக பவுலைச் சந்திக்கிறார். பவுலைச் சந்தித்து விட்டு பரமனை சந்தியாமல் போகமுடியுமா? ஒநேசிமு ஆண்டவராகிய இயேசுவை அறிந்து கொள்ளுகிறார். ஆனாலும் ரோமானிய சட்டப்படி ஒநேசிமு தனது எஜமானருக்கு துரோகம் செய்து விட்டுத் தப்பி ஓடியது குற்றம். ஆகவே அதற்கு பரிகாரம் செய்ய மனதாய் பவுல் அவரது கையில் ஒரு கடிதம் கொடுத்து அவரை சகோதரனாக ஏற்றுக் கொள்ளும்படி பிலேமோனை அறிவுறுத்துகிறார்.

இந்த அருமையான நிகழ்வின் பின்னணியில் பவுல் கொலேசே சபைக்கு ஒநேசிமுவை அறிமுகப்படுத்துகிறார். அவர்களுக்கு ஒநேசிமு ஒன்றும் புதியவர் அல்ல. முன்பு அவர் அதே மக்கள் மத்தியில் அடிமையாக அறியப்பட்டவர்தான். இப்பொழுதோ அவரும் பரலோகக் குடும்பத்தில் பிறந்துவிட்டார். பரலோக ராஜாவின் புதல்வனாகிவிட்டார். இனி அவர் அடிமையாக நடத்தப்பட வேண்டியவர் அல்ல. பரலோக ராஜாவின் இளவரசர்களுள் அவரும் ஒருவர். அவரை பவுல் கொலேசே சபையாருக்கு அறிமுகப்படுத்தும் விதம் அருமையோ அருமை.

“தீகிக்குவையும், உங்களிலொருவனாயிருக்கிற உண்மையும் பிரியமுமுள்ள சகோதரனாகிய ஒநேசிமு என்பவனையும், உங்களிடத்தில் அனுப்பியிருக்கிறேன்; அவர்கள் இவ்விடத்துச் செய்திகளையெல்லாம் உங்களுக்கு அறிவிப்பார்கள்” (கொலோ 4:9)

ஆம், ஒருவன் இரட்சிக்கப்பட்டுவிட்டால் அவன் எந்தப் பின்னனியிலிருந்து வந்தாலும் நம்மில் ஒருவன்தான். ஒரே ஒரு அதிகாரமுள்ள இந்தப் பிலேமோன் நிருபத்தை கர்த்தர் இந்தியத் திருச்சபைகளுக்காகவே தந்திருக்கிறார் என்று விசுவாசிக்கிறேன்.

தீண்டாமை ஒரு பாவச்செயல்
தீண்டாமை ஒரு பெருங்குற்றம்
தீண்டாமை ஒரு மனிதத்தன்மையற்ற செயல்

என்று எல்லாப் பாடப் புத்தகங்களின் பின்புறமும் எழுதப்பட்டிருப்பதை அனுதினமும் பார்த்தும் புத்தகத்தை பரீட்சை எழுதுவதற்காக மட்டுமே படிக்கும் இந்திய சமூகம் இன்னும் தனது பிடறியைக் கடினப்படுத்திக் கொண்டே இருக்கிறது. இயேசுவை அறியாதவர்களை விட்டுத் தள்ளுங்கள்.மறுபடியும் பிறந்தவர்கள், மனந்திரும்பியவர்கள், புது சிருஷ்டி என்றெல்லாம் தங்களை பிரகடனப்படுத்திக் கொள்ளும் கிறிஸ்தவர்களின் நிலை என்ன?

இன்றைய இந்திய கிறிஸ்தவமும் ஜாதியும் பிரிக்கமுடியாத ஒன்றாகிவிட்டது. வேதத்தைக் கையிலும் ஜாதியை மனதிலும் சுமந்து கொண்டு லட்சக்கணக்கான இந்திய விசுவாசிகள் இன்று நரகத்தை நோக்கி நடைபோட்டுக் கொண்டிருக்கிறார்கள். தன் சக கிறிஸ்தவனை புழுவாகப் பூச்சியாகப் பார்த்தவர்கள் புழுக்களைப் படுக்கையாகவும் பூச்சிகளைப் போர்வையாகவும் தரப்போகும் நித்தியப்படுக்கையில் (ஏசா 14:11) சயனிக்க விரைந்து கொண்டிருக்கிறார்கள். இந்த ஜாதிப் பிரச்சனையை அக்குவேறு ஆணிவேறாகப் பிய்த்து சபையின் கடையாந்திரமட்டும் முட்டித் துரத்தும் புதிய தலைமுறை விசுவாசிகளை எழுப்புவதுதான் இந்தக் கட்டுரையின் நோக்கம். இந்தக் கட்டுரை உங்கள் மனதைப் புண்படுத்துமானால் அதற்காகக் கர்த்தரை ஸ்தோத்தரிக்கிறேன். ஒருவேளை அதிகமாகப் புண்படுத்திவிடுமானால் அதற்காக அதிகமாகக் கர்த்தரை ஸ்தோத்தரிக்கிறேன். ஏனெனில் விசுவாசிகளுக்குப் பிடித்துள்ள இந்த ஜாதி வியாதிக்குத் தேவை சீர்திருத்தும் மருந்தல்ல  சீழ்பிதுக்கும் ரணசிகிச்சையே.

தாழ்த்தப்பட்டவர்களாகக் கருதப்படும் சகோதரர்களை ஒநேசிமுவுடன் ஒப்பிடுவதால் அவர்களை அடிமைகளாக உருவகப்படுத்துவதாக எண்ண வேண்டாம்.இல்லை, இல்லவே இல்லை. பிறப்பால் யாரும் யாருக்கும் அடிமையல்ல. அது இந்துவாக இருந்தாலும், கிறிஸ்தவனாக இருந்தாலும் பௌத்தனாக இருந்தாலும், இஸ்லாமியனாக இருந்தாலும். பிறப்பு ஒரு மனிதனை உயர்ந்தவனாகவோ தாழ்ந்தவனாகவோ ஆக்க முடியாது. இங்கு ஒநேசிமுவைச் சொல்லக்காரணம் எஜமான் அடிமை என்ற சமூகச் சூழல் இருந்த காலத்திலேயே சபைக்குள் எப்படியாக சமத்துவம் கடைப்பிடிக்கப் பட்டது என்பதைக் காட்டத்தான்.

பிரியமானவர்களே! இந்த ஜாதி என்கிற கொடூர சமூகக் கட்டமைப்பை சபைக்குள் கொண்டுவருவதால் உங்களது சமூக கௌரவம் பாதுகாக்கப் படுவதாக நீங்கள் நினைத்தால் நிச்சயமாக ஏமாந்து போவீர்கள். காரணம் என்ன தெரியுமா? இந்த ஜாதி உங்கள் இரட்சிப்பு, மணவாட்டி ஸ்தானம் இரண்டையுமே கேள்விக்குறியாக்குகிறது. இதன் மூலம் பிசாசு உங்கள் நித்தியத்துக்கு பெரிய்ய்ய்ய்ய்ய்ய்ய ஆப்பு வைக்கிறான்.நீங்களோ ஜாதி தரும் பொய்யான போதையில் மிதந்து கொண்டே நித்தியத்துக்கு எப்படியும் கரையேறிவிடலாம் என்று கனவு கண்டு கொண்டிருக்கிறீர்கள்.

இந்தக்கட்டுரை இந்திய சமுதாயத்தில் இருக்கும் ஜாதி அமைப்பப் பற்றியதல்ல, கிறிஸ்தவ சபைகளுக்குள்ளும் தொடரும் ஜாதி அமைப்பைப் பற்றியது. இந்தக்கட்டுரை யாருக்கும் சாதகமாகவோ பாதகமாகவோ எழுதப்பட்டதல்ல. திருச்சபைக்குள் தீண்டாமையை மாத்திரமல்ல கிறிஸ்தவத்துக்குள் ஜாதி உணர்வையே வேரறுக்கும் வாஞ்சையோடு எழுதப்பட்டது. இதற்குள் சகலரும் அடங்குவர். தீண்டாமை மாத்திரமல்ல ஜாதி உணர்வோடு ஒரு விசுவாசி வாழ்வதே பாவமாகும்.

”ஜாதி” மல்லியோடு சேர்த்து தலையில் வைத்துக் கொள்ள இரட்சிப்பு ஒன்றும் பிச்சிப்பூ அல்ல:

பாரத தேசம் பெற்றடுத்த பிள்ளைகள் ஒவ்வொருவருடைய நெற்றியிலும் ஒரு ஜாதியின் பெயர் பொறிக்கப்பட்டிருக்கிறது. இந்த ஜாதியின் ரிஷிமூலம் நதிமூலம்  என்ன என்று ஆராய்ந்து பார்த்தால் அது இந்துமதமாகும்.  பிராமணன், சத்திரியன், வைசியன், சூத்திரன் என்று அடையாளப்படுத்துவதும் நாடார், வன்னியர், தேவர், பள்ளர், பறையர் என்று வைராக்கியம் பாராட்டுவதும்  இந்து மதத்தில் வருணாசிரமக் கோட்பாட்டை நம்புபவர்களுக்கே உரியது.  நமது முதல் பிறப்பானதும் கூட ஒரு  தாய் தகப்பனுக்கு இந்த பூமியில் பிறந்தோம். அதில் ஏதோவொரு ஜாதி அடையாளத்தோடுதான் பிறந்தோம், வளர்ந்தோம் உண்மைதான்.

ஆனால்....மறுபிறப்பு என்றழைக்கப்படும் இரட்சிப்பு பற்றி என்ன? இரட்சிப்பை தெளிவாக விளங்கிக் கொண்டால்தான் இந்த ஜாதிக்குப் பின்னால் உள்ள சூழ்ச்சியை அடையாளம் காண முடியும்.

பரலோக சட்டத்தின்படி ஒருவன் இரட்சிக்கப்படவேண்டுமானால் ஒரு மரணத்தைக் கண்டிப்பாகக் கடந்து வரவேண்டும். அந்த மரணத்தோடு அவனது பழைய வாழ்க்கை, பழைய வழிபாடுகள் யாவும் முற்றுப்பெறவேண்டும் (கொலோ 2:20). அந்த மரணமானது சரீரப் பிரகாரமான மரணமல்ல, பழைய மனிதனாகிய மாம்சம் கிறிஸ்துவுடனே கூட மரிக்கும் மரணம் (ரோமர் 6:6). கிறிஸ்துவுடனே கூட நமது பழைய மனிதன் மரிக்கிறான். மெய்யான நீதியிலும் பரிசுத்தத்திலும் தேவனுடைய சாயலாக சிருஷ்டிக்கப்பட்ட புதிய மனுஷன் கிறிஸ்துவுடனே சேர்ந்து உயிர்ப்பிக்கப்படுகிறான் (எபே 4:24). முந்தினவைகள் ஒழிந்து போயின எல்லாம் புதிதாயின (2கொரி 5:17). கிறிஸ்துவுடனே கூட சிலுவையில் அறையப்பட்டோம், இனி நாமல்ல கிறிஸ்துவே நமக்குள் பிழைத்திருக்கிறார் (கலா2:20).

இப்படி பழைய மாம்ச மனிதன் மரித்து, புதிய மனிதன் பிறக்கும் நிகழ்வே இரட்சிப்பாகும். இந்த அனுபவத்தைக் கடந்து வந்தவனே பரலோக ராஜ்ஜியத்துக்குள் நுழைய முடியும்.

 ”இயேசு அவனுக்குப் பிரதியுத்தரமாக: ஒருவன் மறுபடியும் பிறவாவிட்டால் தேவனுடைய ராஜ்யத்தைக் காணமாட்டான் என்று மெய்யாகவே மெய்யாகவே உனக்குச் சொல்லுகிறேன் என்றார் (யோவான் 3:3).”

பழைய பாவ மனிதனோடு அவனது ஜாதி, மதம்,இனம் போன்ற எல்லாக் குப்பைகளையும் போட்டு புதைத்துவிட்டுத்தான் தேவசாயலாகப் படைக்கப்பட்ட புதியமனிதன் பிறக்க வேண்டும். எபேசியர் 4:24 சொல்லும் “தேவசாயலான புதிய மனிதன்” என்ற வார்த்தையை சற்று தியானித்துப் பாருங்கள். இந்த தேவசாயலான புதிய மனிதனில் உங்கள் ஜாதியை எங்கே ஒட்டவைப்பீர்கள்??

இரட்சிப்பு என்பது ஒரு ஆவிக்குரிய நிகழ்வுதானே? ஆனால் அந்த ஆவிக்குரிய நிகழ்வு நடக்கும் சரீரக்கூடு அப்படியேதானே இருக்கிறது? அந்த சரீரக் கூடுதானே ஜாதி அடையாளத்தை சுமந்து கொண்டிருக்கிறது? நான் இரட்சிக்கப்பட்ட பின்பும் நான் இந்தியன், தமிழன் என்ற அடையாளம் எப்படி மாறவில்லையோ அப்படிதானே ஜாதியும் என்ற கேள்வி எழலாம். இந்தியன் என்பது நமது தேசிய அடையாளம். தமிழன் என்பது நமது மொழி அடையாளம்.ஆனால் இந்த ஜாதி என்பது எங்கிருந்து வந்தது? எனது பழைய வழிபாடுகளிலிருந்து என்பதைத்தவிர வேறு எந்த பதிலும் இருக்க முடியாது. அப்படியானால் உங்கள் பழைய வாழ்க்கைக்கு கொலோசெயர் 2:20 படி இன்னும் மரிக்கவில்லையா? என்பதே எனது கேள்வி. இந்து வருணாசிரமப்படி, பிரம்மனின் தலையிலிருந்து பிராமணனும், தோளிலிருந்து சத்திரியனும், வயிற்றிலிருந்து வைசியனும் காலிலிருந்து சூத்திரனும் பிறந்ததாக இந்துக்களின் வேதம் கூறுகிறது இந்த நான்கு வருணங்களிலிருந்துதான் பல உபஜாதிகள் பிரிந்தன. நான் இன்ன ஜாதிக்காரன் என்று சொல்லுவதும் நம்புவதுமே கர்த்தர் மனிதனைப் படைத்தார் என்ற ஆதியாகமம் 2:7-இல் கூறப்பட்டுள்ளதை மறுதலிப்பதாகும்.

நீங்கள் மறுபடியும் பிறந்து கிறிஸ்துவின் சாயலால் புதிதாக்கப் பட்டிருப்பீர்களானால் இனி உங்களுக்கு பழைய ஜாதி அடையாளம் இல்லை, நீங்கள் இன்னும் ஜாதியில் வாழ்ந்து கொண்டிருப்பீர்களானால் இன்னும் மறுபிறப்பு அடையவில்லை.ஜாதி உணர்வு உங்கள் மறுபிறப்பை மறுதலிக்கச் செய்கிறது. மறுஜென்ம முழுக்கினாலே புதிதாய்ப் பிறந்தவன் செத்துபோன பழைய ஆசாமியின் ஜாதியைத் தூக்கிப்பிடிக்க மாட்டான். அப்படிச் செய்தால் எங்கோ ஏதோ தவறு இருக்கிறது என்று அர்த்தம்.ஜாதியின் வஞ்சகத்துக்கு எச்சரிக்கையாயிருங்கள்! சமூக அடையாளம் கொடுப்பதாக நினைத்து நீங்கள் போர்த்துக் கொண்டிருக்கும் ஜாதிப்போர்வை உங்களுக்குக் காப்பு அல்ல, ஆப்பு!

சபைக்குள் வியாதியோடு வரலாம் ஆனால் ஜாதியோடு வராதே!

ஜீவனும் மரணமும் நாவின் அதிகாரத்திலுள்ளது என்று பூர்வத்தாருக்கு உரைக்கப்பட்டதைக் கேட்டிருப்பீர்கள்(நீதி 18:21). ஆனால் தேவகுமாரன் மார்பில் சாய்ந்திருந்த உயிர் நண்பன் சொல்லுகிறான் ”ஜீவனும் மரணமும் சகோதர சிநேகத்திலுள்ளது”. 1யோவான் 3:14-ஐ வாசித்துப் பாருங்கள்

”நாம் சகோதரரிடத்தில் அன்புகூருகிறபடியால், மரணத்தைவிட்டு நீங்கி ஜீவனுக்குட்பட்டிருக்கிறோமென்று அறிந்திருக்கிறோம். சகோதரனிடத்தில் அன்புகூராதவன் மரணத்தில் நிலைகொண்டிருக்கிறான்.”

சபை என்னும் வண்டி ”கிறிஸ்துவின் அன்பு” என்ற அச்சாணி கொண்டு சுழல்கிறது. அச்சாணியைக் கழற்றி வண்டியைக் குடைசாய்க்க சத்துரு இந்திய சபைகளுக்கென்று பிரத்தியோகமாக நியமித்த ஏஜெண்டுதான் இந்த ஜாதி.

சபைக்கு கிறிஸ்து தலை (கொலோ 1:18). நாம்  கிறிஸ்துவின் சரீரமாயும், தனித்தனியே அவயவங்களாயுமிருக்கிறோம் (1கொரி 12:27). ஜாதியின் நிமித்தம் ஒருவரையொருவர் ஏற்றுக்கொள்ளாத நிலை காணப்படுமானால் அது ஒருவன் தன்னைத்தானே காயப்படுத்திக் கொள்வதற்குச் சமம். உதாரணத்துக்கு எனது கையானது கால் மீது வெறுப்பு கொண்டு அது வேண்டாமென்று பிடுங்கி எறிந்துவிடுமானால் நான் ஊனமாகிவிடுவேன். நாமும் ஒருவரை ஒருவர் ஏற்றுக்கொள்ளாமல் இப்படித்தான் கிறிஸ்துவின் சரீரத்தை அங்கஹீனமாக்கி வைத்திருக்கிறோம்.

தாழ்த்தப்பட்டவர்களாகக் கருதப்படும் சகோதரர்கள் திருமணத்துக்கு தங்கள் (பழைய) ஜாதிக்குள்ளேயே பெண்ணைத் தேடும் நிலை உள்ளது. அவர்களை தங்கள் வீட்டில் ஏற்றுக்கொள்ள வேறு விசுவாசிகள் யாரும் தயாராக இல்லை. இதுதான் கிறிஸ்தவ அன்போ?? அதே வேளையில் தாழ்த்தப்பட்டவர்களாகக் கருதப்படும் சகோதரர்கள் அவர்களை விட கீழ்ஜாதிகளாகக் கருதப்படும் சகோதரர் வீட்டில் பெண்கொள்ளவும் பெண்கொடுக்கவும் தயங்குகிறார்கள். இது கொடுமையிலும் கொடுமை!! சபைக்குள் திருமண உறவுகள் ஏற்படுவதற்கு ஜாதி தடையாயிருக்குமானால் அத்தகைய இடறலை ஏற்படுத்துகிறவனின்/ஏற்படுத்துகிறவளின் கழுத்தில் எந்திரக்கல்லைக் கட்டி அவனை/அவளை சமுத்திரத்தின் ஆ........ழத்தில் அமிழ்த்துகிறது அவனுக்கு/அவளுக்கு நலமாயிருக்கும். ஏனெனில் இத்தகைய அசிங்கங்களைச் செய்கிற யாரையும் கர்த்தர் மடியில் வைத்துக் கொஞ்சமாட்டார்.

சகோதரனே சகோதரியே! சபையின் ஆணிவேரே சகோதர ஐக்கியம் என்று இருக்கும்போது உனது சுயநலத்துக்காக ஜாதி என்ற தேவன் வெறுக்கும், சகோதரரைப் பிரிக்கும் சத்துருவை சபைக்குள் கூட்டி வருவாயானால் உனக்காக நான் பரிதபிக்கிறேன். கிறிஸ்துவின் அங்கத்தோடு விளையாடிப்பார்க்கும் உனது மரண விளையாட்டு விபரீதமானது. நீ பிறவாதிருந்தாயானால் உனக்கு நலமாயிருந்திருக்கும்.

ஏன் இவ்வளவு கடினமான வார்த்தையைப் பயன்படுத்துகிறீர் என்று யாராகிலும் கேட்டால். சகோதர ஐக்கியம் என்பது விளையாட்டல்ல. ஆதித்திருச்சபைக்குள் தாங்கள் யூதர் என்ற பெருமைகொண்டு விருத்தசேதனத்தைக் மீண்டும் சபைக்குள் கொண்டுவர முயன்று குழப்பம் விளைவித்தவர்கள் மீது அன்பே உருவான அப்போஸ்தலன் கோபாக்கினையைக் கொட்டுகிறான். “ உங்களைக் கலக்குகிறவர்கள் தறிப்புண்டுபோனால் நலமாயிருக்கும் (கலா 5:12)”. என்று கொதிக்கிறான். இன்றைய பிரசங்கிகள் சொல்லும் கார்ப்பொரேட் கிறிஸ்துவையும், கிச்சுக்கிச்சு மூட்டும் வேறொரு ஆவியானவரையுமே பார்த்துப்பார்த்துப் பழகிப்போன நமக்கு.உண்மையான இயேசுவும் ஆவியானவரும் எப்படிப்பட்டவர்கள் என்று தெரியவில்லை. உண்மையான ஆவியானவர் எப்படிப்பட்டவர் என்று அனனியா, சப்பீராளைக் கேட்டுப்பாருங்கள் (அப் 5).

உனது சகவிசுவாசி தாழ்ந்தவன் என்று சொல்லி அவனை நீ பகைத்தால் உன்னிடத்தில் அன்பில்லை, மனத்தாழ்மையில்லை. இவன் என்னைத் தாழ்ந்த குலத்தவன் என்று சொல்லிவிட்டானே என்று சொல்லி நீ கோபத்தில் கொந்தளிப்பாயானால் நீ கிறிஸ்துவின் மன்னிக்கும் சிந்தையற்றவன். ஒருவரையொருவர் பகைக்கும் இவ்விருவருமே 1யோவான்3:15 படி மனுஷ கொலை பாதகர்கள். இருவருக்குள்ளுமே நித்தியஜீவன் இல்லை. இதை நான் சொல்லவில்லை. 1 யோவான் 3:15 சொல்லுகிறது.

திருவிருந்தில் உனது பக்கத்தில் முழந்தாளிட்டிருக்கும் சகோதரன் எந்தப் பின்னணியிலிருந்து வந்தவனாயிருந்தாலும் அவன் தாழ்ந்தவன் என்று தள்ளாதே! அல்லது ஆதிக்க ஜாதிக்காரன் என்று வெறுக்காதே!அவன் உனது சகோதரன், உயிருக்கு உயிரானவன்.  கிறிஸ்துவின் மணவாட்டி, அவருக்கு பங்காளி, அவரோடு அரசாளப்போகும் ராஜா, தேவதூதரையும் நியாயந்தீர்க்கப்போகும் நீதிபதி, அவனிடத்தில் நீ கடன் பட்டிருக்கிறாய், ஆம் அன்பு செலுத்தும் கடன் பட்டிருக்கிறாய் (ரோமர் 13:8). உன்னைக் காட்டிலும் அவனை மேன்மையாக எண்ணவேண்டும்(பிலி2:3). அவனிடத்தில் அன்பு கூர்ந்தால் உனக்கு நித்திய வாழ்வு, அன்புகூராவிட்டால் நித்திய சாவு (1யோவா3:14). நீ அவனது கால்களைக் கழுவ வேண்டும் (யோவா13:14). தேவைப்பட்டால் அவனுக்காக ஜீவனைக் கொடுக்கவும் நீயும் நானும் கடனாளிகள் என்று 1யோவான் 3:16 சொல்லுகிறது.

பிரியமானவனே! நீ விசுவாசியாகிவிட்ட பின்னர் உனது வாழ்க்கைக்காக கர்த்தர் ஒருவரையே நம்பு. உன்னை தேவபிள்ளை இல்லை என்று மறுதலித்து எந்த சலுகையையும் பெற வாஞ்சியாதே. ஒருவேளை உனது பெற்றோர் செய்த தவறுக்கு நீ காரணமாக மாட்டாய். ஆனால் நீ உன் மனமறிந்து அதைச் செய்யாதே! பிழைப்புக்காக நிலத்தை அடகு வைக்கலாம். நித்தியத்தை அடகு வைக்கலாமா? மனையை அடகு வைக்கலாம் மணவாட்டி ஸ்தானத்தை அடகு வைக்கலாமா? பயற்றங்கூழுக்காக சேஷ்டபுத்திர பாகத்தை ஒருவன் விற்றுப்போட்டானாம். பின்னால் பாடுபட்டுத் தேடினாலும் புத்திரபாகம் திரும்பக் கிடைக்காது.

பல கிறிஸ்தவ சபைகளில் இன்று (மறைமுகமாக)ஜாதி அடிப்படையில் தேர்தல் நடத்தி அன்னா, காய்பாக்கள் தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள். அரசியல் தேர்தல் எப்படி நடக்குமோ அப்படியே இதுவும் நடக்கிறது. அரசியல்வாதிகளுக்குத் தெரிந்த எல்லா வித்தைகளையும் இவர்களுக்கும் கற்றுவைத்திருக்கிறார்கள். அவர்களோடு உறவும் வைத்திருக்கிறார்கள். இவர்கள் எல்லோருக்கும் ஒன்று மட்டும் தெரியவில்லை ”அந்த நாளில்” பர்வதங்களையும் குன்றுகளையும் கெஞ்சிக்கேட்டால் கூட அவைகள் செவிகொடுக்காதாம் (வெளி 6:14-17) .

பிரியமானவர்களே! இந்தக் கட்டுரை கடினமாக வார்த்தைகளைக் கொண்டதாக இருக்கலாம் ஆனால் கிறிஸ்துவின் அன்பினால் ஏவப்பட்டு எழுதப்பட்டது. சபைக்குள் ஜாதிப்பேய் ஆட்டம்போடுவதை கண்சாடையாய் விடும் மேய்ப்பன் தானும் அழிந்து தன் மந்தையையும் அழிவுகுள்ளாக்குகிறான். ஆனால் கண்டித்து உணர்த்தும் மேய்ப்பனோ உலகத் தகப்பனை விட மேலானவன். சிநேகிதன் அடிக்கும் அடிகள் உண்மையானவைகள். சத்துரு இடும் முத்தமோ வஞ்சனையுள்ளது. (நீதி 27:6)

ஒருவரையும் பாதிக்காத, ஒன்றும் சாதிக்காத மூடி மறைத்து பூசி மழுப்பி செய்யும் நூறாயிரம் பிரசங்கங்களை விட. ஆவியில் நிறைந்து சத்தியத்தை சத்தியத்தை சத்தியமாகச் சொல்லி குளிருமற்ற அனலுமற்ற சபையைப் பிடித்து உலுக்கும் ஒரே ஒரு பிரசங்கத்தைச் செய்து  விட்டு பாபிலோன் வேசியால் கொல்லப்பட்டு இரத்த சாட்சியாக மரிப்பது நலம் என்பது அடிமையின் தாழ்மையான கருத்து

நமக்குள் ஜாதி இல்லை. நாம் ஒரே உடலின் அங்கங்கள் எனவே வசனத்தினாலும், நாவினாலுமல்ல, கிரியையினாலும் உண்மையினாலும் அன்புகூரக்கடவோம். நாம் ஒருவரிடத்தில் ஒருவர் அன்புகூர்ந்தால் தேவன் நமக்குள் நிலைத்திருக்கிறார்(1யோவா 4:12). அவர் தேவனுக்கு சமமாயிருந்தும் பாழும் இந்த உலகத்துக்கு மனிதப்பிறவி எடுத்து வந்தாரே! அவர் அவ்வளவாய் நம்மை நேசித்திருக்க அவரது கற்பனைப்படி நாம் ஒருவரிலொருவர் எவ்வளவாய் அன்புகூறக் கடனாளிகளாயிருக்கிறோம் (1யோவா 3:23).

கர்த்தராகிய இயேசுவின் நாமமே மகிமைப்படுவதாக!!!

No comments:

Post a Comment