Friday 8 March 2013

பரலோக ராஜ்யமும் பலவந்தமும்.

by Vijay Kumar on Tuesday, October 11, 2011 at 12:39am ·
உம் அரசு வருக - பாகம் 3

ஆக்கியோன்:வாட்ச்மென்

முந்தைய பாகத்தை வாசிக்க: http://www.facebook.com/note.php?note_id=286437124702522
தொடரின் முதல் பாகத்தை வாசிக்க: http://www.facebook.com/note.php?note_id=283419298337638

ஒரு கரை புரண்டோடும் காட்டாறு. யானைகளையும் இழுத்துச் செல்லும் மூர்க்கமான நீரோட்டம், அதில் மாட்டிக்கொண்ட ஒரு பறவையின் இறகு என்னவாகும்? அதுதான் உலகம், மாமிசம், பிசாசு என்ற முப்பெரும் எதிரியிடம் சிக்கிக்கொண்ட பெலவீன மனிதனின் நிலை. அலேக்காக இழுத்துச்செல்லப்படுவதைத் தவிர வேறு வழியே இல்லை. எதிர்நீச்சல் என்பதைக் கற்பனை செய்துகூடப்பார்க்க முடியாது. இச்சூழலில் பரிசுத்த ஆவி என்கிற மாபெரும் வல்லமை அந்தப் பறவையின் இறகுக்குள் இறங்க அது திரும்பி நீரோட்டத்தை எதிர்த்து ஆக்ரோஷமாக எதிர்திசையில் நீந்திச் செல்லுகிறது என வைத்துக் கொள்ளுங்கள், ஒருபக்கம் யானைகளும், காட்டெருமைகளும் நீரோட்டவேகத்தில் அடித்துச் செல்லப்படுகிறது அதன் எதிர்த்திசையில் நீரோட்டத்தைக் கிழித்து ஒரு அற்பப் பறவையின் இறகு நீந்திச்செல்லுகிறது. இதுதான் கிறிஸ்தவ ஜீவியம்.


நாம் அந்தப் பறவையின் இறகாக இருக்கிறோமா? ஏனெனில் கிறிஸ்தவ வாழ்க்கை என்பது இலகுவான பாதை கிடையாது.


யோவான்ஸ்நானன் காலமுதல் இதுவரைக்கும் பரலோகராஜ்யம் பலவந்தம் பண்ணப்படுகிறது; பலவந்தம் பண்ணுகிறவர்கள் அதைப் பிடித்துக்கொள்ளுகிறார்கள். (மத்தேயு 11:12).


இந்நாட்களில் கிறிஸ்தவனாக மாற ஒரு சின்ன ஜெபத்தைக் கிளிப்பிள்ளை போல திரும்பச் சொல்லி, ஒரு அட்டையில் கையெழுத்திட்டு, என்னவென்றே தெரியாமல் ஒரு ஞானஸ்நானத்தைப் பெற்றுக்கொண்டு, சபை என்ற பெயரில் இயங்கும் ஒரு கார்ப்பொரேட் நிறுவனத்தில் (எல்லா சபைகளும் அல்ல) தன்னை இணைத்துக்கொண்டால் ஜீவபுஸ்தகத்தில் தன் பெயர் எழுதப்பட்டாயிற்று என்று ஒரு பேதைச்சந்ததி தன்னை ஏமாற்றிக்கொண்டிருக்கிறது. அந்தோ பரிதாபம்! அது இவ்வளவு எளிதாக இருந்திருந்தால் லூக்கா 14:30-இல் ”முதலில் உட்காந்து செல்லுஞ்செலவைக் கணக்குப் பார்த்துவிட்டு பின்னர் முடிவெடு” என்று கர்த்தர் சொல்லியிருக்கமாட்டார். உங்களைச் சோர்வுக்குள்ளாக்க நான் இதைச் சொல்லவில்லை. ஆனால் நம் நிர்விசாரத்தை உடைத்தெறிய, நித்திரையிலிருந்து உலுப்பிவிட இது தேவையாயிருக்கிறது.


பரலோக ராஜ்ஜியத்தில் சோம்பேறிகளுக்கு இடமில்லை, நிர்விசாரிகள் அதைக் குறித்து கனவுகூடக் காணக்கூடாது. பரலோகராஜ்யத்தின் நுழைவுச்சீட்டு இலவசமாயிருக்கலாம், ஆனால் அது மாபெரும் விலை கொடுத்து நமக்காக வாங்கப்பட்டது. உள்ளே நுழைந்தபின்னர் நாடும் துறைமுகம் போய்ச் சேரும்வரை எல்லாம் பலவந்தம், பலவந்தம், பலவந்தமே!!! ஓட்டப்பந்தையம் எளிதா? மல்யுத்தம் எளிதா? நெருக்கமான வழிப்பயணம் எளிதா? மலைப் பிரசங்கத்தை வாழ்வது எளிதா? சபை ஐக்கியம் (ஆதிச்சபை மாதிரி) எளிதா? உபத்திரவங்கள் எளிதா? சரீரத்தை பலிபீடமேற்றுதல் எளிதா? தன்னைத்தான் வெறுப்பது எளிதா? சிலுவை சுமப்பது எளிதா? இரத்த சாட்சியாய் மரிப்பது எளிதா? பிரியமானவர்களே! இதுதான் கிறிஸ்தவ வாழ்க்கை! ஆவியானவரின் பெலனின்றி நம்மால் அணுவையும் அசைக்க முடியாது. காட்டாற்று வெள்ளத்தில் சிறு இறகின் எதிர்நீச்சல்!! உன்னத ஆவியின் பெலத்தால் அது சாத்தியம்!


பரிசுத்த ஆவி உங்களிடத்தில் வரும்போது நீங்கள் பெலனடைந்து, எருசலேமிலும், யூதேயா முழுவதிலும், சமாரியாவிலும், பூமியின் கடைசிபரியந்தமும், எனக்குச் சாட்சிகளாயிருப்பீர்கள் (அப் 1:8).


உலக இச்சை எனும் வெள்ளத்தில், மாம்சத்தின் ஆளுகைக்குள் உள்ள எப்பேற்பட்ட மனிதனும் அடித்துச் செல்லப்படுகிறான். ஆற்றில் விடப்பட்ட பிரேதம் ஆற்றோடு அடித்துச் செல்லப்படும், ஜீவனுள்ளவனோ அலைவேகத்துக்கு எதிராகப் போராடுவான்,. பலவந்தம் பண்ணுவான், கரை சேருவான்.


இன்றைய நாளில் நம்மை இழுத்துச்செல்ல முயன்ற வெள்ளங்களுடன் பலவந்தம் பண்ணினோமா பிரியமானவர்களே!


பாவத்திற்கு விரோதமாய்ப் போராடுகிறதில் இரத்தஞ்சிந்தப்படத்தக்கதாக நீங்கள் இன்னும் எதிர்த்துநிற்கவில்லையே (எபிரெயர் 12:4).


நம்மை இச்சைக்குள்ளாகத் தள்ளுகிற ஈர்ப்பு விசையோடு நாள்தோறும் யுத்தம் பண்ணுகிறோமா? கிறிஸ்துவின் அன்பை விட்டு என்னைப் பிரிப்பவன் யார் என்று நம்மால் நெஞ்சை நிமிர்த்திச் சொல்ல முடியுமா? ஜெபத்தில், உபவாசத்தில் பலவந்தமாய் போராடுகிறோமா? அன்று யாப்போக்கு நதிக்கரையில் யாக்கோபு என்னும் ஒரு மனிதன் தேவனோடு போராடினான். அந்த அனுபவம் நமக்கு உண்டா?


பிரியமானவர்களே! தேவனுக்கு பிரியமான வாழ இயலவில்லையே என்று இரவுகளில் கண்னீரால் தலையணையை நனைத்த அனுபவங்கள் நமக்கு உண்டா? கிறிஸ்தவ வாழ்க்கையை மிக எளிதாக எடுத்துக்கொண்டு வாழ்ந்து கொண்டிருக்கிறோமே! நமக்குப்பெயர் விசுவாசியா? நிர்விசாரியா?


சோம்பேறியின் வயலும் நிர்விசாரியின் கிறிஸ்தவ ஜீவியமும் ஒன்று! சோம்பேறியின் வயலையும், மதியீனனுடைய திராட்சத்தோட்டத்தையும் கடந்துபோனேன். இதோ, அதெல்லாம் முள்ளுக்காடாயிருந்தது; நிலத்தின் முகத்தைக் காஞ்சொறி மூடினது; அதின் கற்சுவர் இடிந்து கிடந்தது. அதைக் கண்டு சிந்தனைபண்ணினேன்; அதை நோக்கிப் புத்தியடைந்தேன். (நீதி 24:30-32)


லியானார்ட் ரேவன்ஹில் என்ற தேவமனிதர் சொன்ன ஒரு வார்த்தை நினைவுக்கு வருகிறது: நாம் உலக வேலையில் காட்டும் ஆர்வத்தையும் அர்ப்பணிப்பையும் ஆவிக்குரிய காரியங்களில் காட்டியிருப்போமானால் இந்நேரம் எழுப்புதல் வந்திருக்கும். அதேவேளையில் ஆவிக்குரிய வாழ்வில் காட்டும் நிர்விசாரத்தை உலகவேலையில் காட்டியிருந்தால் இந்நேரம் ஓட்டாண்டி ஆகியிருந்திருப்போம்.


உலகத்துக்குரிய வெற்றிகளைச் சுதந்தரிக்க நாம் எவ்வளவு போராடுகிறோம். எவ்வளவு மணிநேரம் அதற்க்காகச் செலவிடுகிறோம். எத்தனை பயிற்சிகள் செய்கிறோம். ஆனால் பரலோக ராஜ்யம்???? அது அத்தனை மலிவானதா? அதன் விலை என்ன தெரியுமா பிரியமானவர்களே!


அன்றியும், பரலோகராஜ்யம் நிலத்தில் புதைந்திருக்கிற பொக்கிஷத்துக்கு ஒப்பாயிருக்கிறது; அதை ஒரு மனுஷன் கண்டு, மறைத்து, அதைப் பற்றிய சந்தோஷத்தினாலே போய், தனக்கு உண்டான எல்லாவற்றையும் விற்று, அந்த நிலத்தைக் கொள்ளுகிறான். (மத்தேயு 13:44) இன்றைய கார்ப்பொரேட் கிறிஸ்தவத்துக்கு பரலோக ராஜ்யத்தின் மேன்மை தெரியுமா?


கிறிஸ்தவர்கள் என்று சொல்லிக்கொள்ளும் நாம் பூலோகக் காரியங்களுக்கு அதிக முக்கியத்துவமும், பரத்துக்குரிய காரியங்களுக்கோ சொற்ப முக்கியத்துவமும் கொடுக்கிறோம். இதிலிருந்து என்ன தெரிகிறது? நாம் அந்தப் பொக்கிஷத்தைக் காணவுமில்லை, அதைத் தேடவுமில்லை அப்படி ஒன்று இருப்பதை அறியவுமில்லை. ஆவிக்குரிய குருட்டுத்தனம்!. நம் பொக்கிஷம் பூமியில்தான் இருக்கிறது, எனவேதான் நம் இருதயமும் இங்கே ஒட்டிக் கொண்டிருக்கிறது. நாமும் கிறிஸ்தவர்கள் என்று சொன்னால் அதை பூமி நம்பும், பரலோகம் நம்புமா?


நாம் செய்யவேண்டியது என்ன?


ஞானத்தை வா என்று கூப்பிட்டு, புத்தியைச் சத்தமிட்டு அழைத்து, அதை வெள்ளியைப்போல் நாடி, புதையல்களைத் தேடுகிறதுபோல் தேடுவாயாகில், அப்பொழுது கர்த்தருக்குப் பயப்படுதல் இன்னதென்று நீ உணர்ந்து, தேவனை அறியும் அறிவைக் கண்டடைவாய். (நீதி 2: 3-5)


தேவனையும் அவரது ராஜ்யத்தையும் வெள்ளியைப் போல நாடி அதைப் புதையல்களைத் தேடுவது போல தேடுகிறவனே பரலோக ராஜ்யத்தின் குடிமகன். உலகஆசிகளுக்காக தேவனைத் தேடுகிறவர்களும் அப்படிப்பட்ட கிறிஸ்தவத்தை அறிவிக்கிறவர்களும் கொடிய ஆவிக்குரிய புற்றுநோயைப் பரப்பிக்கொண்டிருக்கிறார்கள். அதை ஊழியம் என்றும் தம்மட்டம் அடித்துக்கொள்ளுகிறார்கள்.


பலவந்தம் பன்ணுகிறவர்களே பரலோக ராஜ்யத்தில் பிரவேசிப்பார்கள் என்று வேதம் திட்டவட்டமாகக் கூறுகிறது, பலவந்தம் என்றவுடன் அநேகருக்கு ஊக்கமான ஜெபம் என்பதுதான் நினைவுக்கு வரும். அது மாத்திரமல்ல! இச்சைக்கு நேராய் கண்கள் இழுக்கப்படும்போது அதை எதிர்த்துப் போராடி கண்களை கர்த்தருக்கு ஒப்புக்கொடுப்பது பலவந்தம். கைகளை மாம்சத்துக்கு விட்டுக்கொடுக்காமல் ஆவியானவருக்கு அடிமையாக்குவது பலவந்தம். கட்டற்ற அருவிபோலயும், முரட்டுக் குதிரை போலவும் பாய்ந்தோடும் அடங்காத எண்ணங்களை கிறிஸ்து இயேசுவுக்குள்ளாகச் சிறைப்படுத்துவது பலவந்தம். பெருமை எனும் போதை தலைக்கேறும் போது உடனடியாக தாழ்மையின் சிந்தை அணியப் பழகுவது பலவந்தம்.

உன் வலது கண் உனக்கு இடறலுண்டாக்கினால், அதைப் பிடுங்கி எறிந்து போடு; உன் சரீரம் முழுவதும் நரகத்தில் தள்ளப்படுவதைப்பார்க்கிலும், உன் அவயவங்களில் ஒன்று கெட்டுப்போவது உனக்கு நலமாயிருக்கும்.


உன் வலது கை உனக்கு இடறலுண்டாக்கினால், அதைத் தறித்து எறிந்து போடு; உன் சரீரம் முழுவதும் நரகத்தில் தள்ளப்படுவதைப்பார்க்கிலும், உன் அவயவங்களில் ஒன்று கெட்டுப்போவது உனக்கு நலமாயிருக்கும். (மத் 5: 28,29)


பழைய ஏற்பாடு மனித எதிரிகளான ஏவியர், அமலேக்கியர், எபூசியர், பெலிஸ்தியர் போன்றோரை பலவந்தம் பன்ணி மேற்கொள்வது, ஆனால் புதிய ஏற்ப்பாடு என்பது இச்சை, பெருமை, பொறாமை, கோபம் போன்ற மாம்சத்தின் கிரியைகளோடு பலவந்தம் பண்ணி போராடி மேற்க்கொள்வது. பலவந்தமின்றி பரலோக ராஜ்யம் இல்லை, இல்லை, இல்லவே இல்லை. இந்தப் போராட்டத்தில் உங்களைப் போலவே போராடும் சக போராளியான என்னையும் இணைத்து பிரசங்கிக்கிற நானே ஆகாதவனாய்ப் போய்விடாதபடிக்கு தயவுசெய்து எனக்காகவும் ஜெபித்துக் கொள்ளுங்கள்.

No comments:

Post a Comment