Friday 8 March 2013

மனதை நெருடும் சில கேள்விகள்

by Vijay Kumar on Friday, December 3, 2010 at 2:40pm ·
சகோ.விஜய் (http://vijay76.wordpress.com)
  
  


நாம் கிறிஸ்துவை அறியாதவர்களை உலகபிரகாரமானவர்கள் என்றும் நம்மை ஆவிக்குரியவர்கள் என்றும் சொல்லுகிறோம். நாம் உண்மையிலேயே ஆவிக்குரியவர்களா? என்று ஆராய்ந்து பார்த்த போது மனதில் எழுந்த சில நெருடலான கேள்விகள்:

  1. பிற மதத்தவர் ஆசீர்வாதத்தைத் தேடி புண்ணிய யாத்திரை செல்லுவதை விமர்சிக்கும் விசுவாசிகள் தாங்கள் ஆசீர்வாதத்தைத் தேடி ஆவிக்குரிய கூட்டங்களுக்கு ஓடுவது ஏன்? இயேசுவின் சீஷராக அவரை பின்பற்றும்படி அழைக்கப்பட்ட நாம் அவர் எப்படி பிதாவின் சித்தம் செய்வதே தமக்கு உணவு என்று வாழ்ந்தாரோ அதையே பின்பற்ற வேண்டுமில்லையா? இயேசு அப்படிச் செய்தபோது அவர் தேவைகள் எல்லாம் பிதாவால் சந்திக்கப்பட்டதே! அவர் எதிலும் குறைவுபட்டதாக வேதத்தில் இல்லையே! நாமும் பிச்சைக்காரராய் வாழ்வது அவரது சித்தமல்ல “முதலாவது தேவனுடைய ராஜ்யத்தையும் அவருடைய நீதியையும் தேடுங்கள்; அப்பொழுது இவைகளெல்லாம் உங்களுக்குக் கூடக் கொடுக்கப்படும்.(மத் 6:33) என்ற வார்த்தைகள் நம்முடைய வாழ்க்கையில் புறக்கணிக்கப்பட்டது ஏன்?
  2. சினிமா நட்சத்திரங்களின் ரசிகர்களை விமர்சிக்கும் விசுவாசிகளாகிய நாம் ஊழியக்காரர்களை விக்கிரகமாக்கி வைத்திருப்பது ஏன்? கடவுளுக்கும் நமக்கும் கன்னிமரியாள் மத்தியஸ்தரல்ல என்று சொல்லும் நாம் பாஸ்டர்களை இன்று மத்தியஸ்தர்களாக்கி விட்டதேன்? அவர்கள் மட்டுமே சீஷர்களென்றால் புதிய ஏற்பாட்டின்படி நாமெல்லாம் யார்?
  3. வாயிலிருந்து லிங்கம் எடுக்கும் ஒருவர் அதற்க்கு என்ன தந்திரத்தைப் பயன்படுத்துகிறார் என்று ஆராயும் நாம், நமது ஊழியர்கள் மேடையில் பெயர் சொல்லி அழைக்கும் வித்தை, மல்லாக்க சாய்க்கும் வித்தைகளையெல்லாம் கண்ணை மூடிக்கொண்டு நம்புவது ஏன்? இயேசுவும் அப்போஸ்தலரும் செய்யாததை என்ன ஆதாரத்தோடு அல்லது நோக்கத்தோடு செய்கிறார்கள் என்று நாம் ஆராய வேண்டாமா?
  4. புதுவருஷத்துக்கு ராசிபலன் பார்ப்பவர்களைக் கிண்டலடிக்கும் நாம் ”வாக்குத்தத்தம்” என்ற பெயரில் புத்தாண்டு ஆராதனைகளில் தரப்படும் குலுக்கல் பரிசை நம்புவது ஏன்? “இந்த வருஷம் உனக்கு சொல்லப்பட்ட ராசிபலன் பலிச்சிருச்சா? என்று உன் நண்பனைக் கிண்டல் செய்யும் விசுவாசியே! இந்த வருடம் உனக்கு குலுக்கல் முறையில் தரப்பட்ட வாக்குத்தத்தம் பலித்து விட்டதா? உனக்கு என்ன வாக்குத்தத்தம் வந்தது என்பதையாகிலும் நினைவில் வைத்திருக்கிறாயா? ஏன் இந்த மாய்மாலம்????
  5. “நீ தேடும் நிம்மதி இயேசு தருகிறார்” என்று முழங்கும் நாம் நமது சொந்தத் தேவைகளுக்காக மாத்திரமே ஜெபிப்பது ஏன்? சொந்தக்கவலைகள் நம்மை அழுத்துவதால்தானே? நாமே அனுபவிக்காத ஒன்றை பிரசங்கிப்பது ஏன்? அதற்காக இயேசு நிம்மதி தரமாட்டார் என்று சொல்லவில்லை. சுயத்தை சிலுவையில் அறையாமல் அந்த அனுபவத்துக்குள் கடந்து வரமுடியாது என்பதே உண்மை.
  6. விக்கிரகங்களின் பெயரைக்கூட உச்சரிக்கக் கூடாது என்று வைராக்கியம் பாராட்டுகிறோம் ஆனால் நமது வாழ்வில் விக்கிரக ஆராதனை இல்லையா? இயேசு தன்னை எந்த மாற்று மதத்தின் கடவுளோடும் ஒப்பிடவில்லை மாறாக தனது எதிரி “உலகப் பொருளே” என்று லூக்கா 16:13–இல் குறிப்பிடுகிறார். தேவைகளுக்காக ஜெபிப்பது தவறல்ல, ஆனால் உலகப் பொருளுக்காக, உலக ஆசீர்வாதங்களுக்காக மாத்திரமே இயேசுவைத் தேடினால் அது விக்கிரக ஆராதனை ஆகாதா?
  7. சினிமா, டிவி போன்ற கேளிக்கைகளை சாத்தானுக்குரியது என்று சொல்லிவிட்டு அவற்றை ஒதுக்கித்தள்ளும் விசுவாசியே! அதே கேளிக்கைகள் இயேசுவின் பெயரைத் தரித்துக் கொண்டு திருச்சபைக்குள் வந்தால் அது ஆவிக்குரியதாகிவிடுமா? இன்று வெளிவரும் பல கிறிஸ்தவ இசை ஆல்பங்களையும், கிறிஸ்தவ தொலைக்காட்சிகளில் வரும் “பிரமாண்டமான குரல் தேடல்களையும்”, “நீங்கள் விரும்பும் பாடலையும்” யாரிடமிருந்து பெற்றீர்கள்?
  8. பிரமாண்டமான அரங்கமைத்து லேசர் ஒளிக்கற்றைகள் மத்தியில் பல பெண்கள் பின்புறத்தின் நடனமாடிக்கொண்டிருக்க மைக்கேல் ஜாக்சன் பாடினால் அது உலகப்பிரகாரமானது. அதே மேடையில் அதே லேசர் ஒளிக்கற்றைகள் மத்தியில் அதே விதமாக பெண்கள் நடனமாடிக்கொண்டிருக்க பளபளக்கும் உடையணிந்து ஒரு ஊழியக்காரர் கிறிஸ்தவப்பாடல் பாடினால் அது ஆவிக்குரியதாகிவிடுமா? நமது மிஷனரி சகோதரர்கள் பலர் பசித்த வயிறோடு ஊழியம் செய்து கொண்டிருக்க, அவர்தம் பிள்ளைகள் உணவின்றி படிப்பின்றி அல்லாட  இதற்காக செலவிடப்பட்ட இலட்சகணக்கான பணத்துக்கு கணக்கு என்ன? இளைஞர்களை ஆதாயம்பண்ண இப்படிச் செய்கிறோமென்றால், பவுலும், பேதுருவும், பர்னபாவும் யாக்கோபும் யோவானும் இப்படித்தான் இளைஞர்களை ஆதாயம் பண்ணினார்களா?
  9. எந்தக் குதிரையில் பணம் கட்டினால் ஜாக்பாட் அடிக்கும் என்று நம்பி பணம்கட்டுவது சூதாட்டமென்றால். எந்த ஊழியத்தில் விதைத்தால் நல்ல பொருளாதார அறுவடை வரும் என்று பார்த்து விதைப்பது(!) ஆவிக்குரியதாகுமா? ஆண்டவர் தரித்திரரான விசுவாசிகளுக்கு அவர்களது குறைவில் உதவி செய்யுங்கள் என்றல்லவா நமக்கு சொல்லியிருக்கிறார்! அதை அன்புடன் செய்வதா ஆதாயம் எதிர்பார்த்து செய்வதா?
  10. பிற மதத்தலைவர்கள் செய்த தவறுகள் வெளிப்படும்போது அவற்றைக் குறித்து எல்லொரிடமும் பேசி பரிகசிக்கும் நாம், நமது அபிமான ஊழியக்காரர்கள் தவறு செய்யும்போது அதை மூடி மறைக்க முயலுவது ஏன்?

No comments:

Post a Comment