Friday, 8 March 2013

பரலோக ராஜ்ஜியம் - அற்புத உலகம் (பகுதி 1)

by Vijay Kumar on Wednesday, April 11, 2012 at 4:23am ·
உம் அரசு வருக - பாகம் 7"வானம் திறந்திருக்கிறதையும், தேவதூதர்கள் மனுஷகுமாரனிடத்திலிருந்து ஏறுகிறதையும் இறங்குகிறதையும் நீங்கள் இதுமுதல் காண்பீர்கள் என்று மெய்யாகவே மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன் (யோவா 1:51)".

கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் வாயிலிருந்து வந்த வரலாற்றுச் சிறப்புமிக்க வார்த்தை இது. இதன் அர்த்தம் என்ன? "தன் மூலம் பரலோகத்துக்கும் பூமிக்குமிடையே ஒரு இணைப்பு ஏற்பட்டுவிட்டது, எனவே பரலோக அலுவலர்கள்(தேவதூதர்கள்)  பரலோக அலுவல் காரணமாக இனி பூமிக்கு அடிக்கடி வந்து போவார்கள் " என்று ஆண்டவர் சொல்லுகிறார்.  இந்தியாவையும் பர்மாவையும் உதாரணமாகக் காட்டி ஒரு சிறு கற்பனைக் கதை மூலம் பரலோகத்தின் நீட்சிதான் பூமியில் இயேசு ஸ்தாபித்த பரலோக ராஜ்ஜியம் என்று இத்தொடரின் முதல் பாகத்திலேயே விளக்கியிருந்தேன்.

தன்மூலம் பரலோகம் பூமியோடு இடைப்பட தொடங்கிவிட்டதால் இதுமுதல் இயற்க்கைக்கு அப்பாற்பட்ட அற்புத நிகழ்வுகள் பூமியை உலுக்கியெடுக்கப் போகிறது என்று  யோவான்1:51 -இல் இயேசு மறைமுகமாகக் குறிப்பிடுகிறார். "இதுமுதல்"   என்று இயேசு குறிப்பிட்டது அவர் ஊழியத்தைத் துவங்கிய காலத்தைக் குறிக்கிறது. இதுமுதல் என்று தொடக்கத்தைக் குறிப்பிட்டவர் "இதுவரை" என்று ஒரு முடிவைக் குறிப்பிடவில்லை என்பது மிகவும் கவனிக்கப்படவேண்டிய ஒன்று.

அடுத்து வரலாற்றில் என்ன நடந்தது என்று பார்க்கலாமா!

இயேசு இந்த வசனத்தைக் குறிப்பிட்டது யோவான் முதல் அதிகாரம் கடைசி வசனத்தில், அடுத்த அதிகாரம் தொடங்குவதே அற்புதத்திலிருந்துதான். அதிலிருந்து அதிகாரத்துக்கு அதிகாரம் பரலோக அதிகாரத்தோடு பூவுலகம் அதிர மனுஷகுமாரன் போட்ட பீடு நடையைப் பார்த்துப்பார்த்து இரசிக்கலாம். சிம்மாசனங்கள் குலுங்கின! இயேசு என்ற பேரைக் கேட்டாலே ராஜாக்களுக்கும் மதத்தலைவர்களுக்கும் பேதிகண்டது. தச்சனின் மகனான நாசரேத்தூர் இளைஞன் தனது சுட்டுவிரல் அசைவில் இயற்கையைச் சுழற்றுவதைக் கண்ட ஜனங்கள் அதிர்ச்சியில் உறைந்தார்கள்!  கடந்த நாலாயிரம் வருடமாக வெல்லமுடியாத வீரனாக பவனிவந்த பிசாசுக்கோ இயேசு செய்த ஒவ்வொரு செயலும் அவனை மல்லாக்கப் படுக்கப்போட்டு முகத்தில் ஏறி மிதிப்பது போல இருந்தது. ஏதேனில் விடப்பட்ட அந்த "தலை நசுங்கும்" சாபத்தை அவ்வளவு சீக்கிரம் மறக்க முடியுமா என்ன?!

முக்காலம் உணர்ந்த ஆண்டவர் தெளிவாக தனது ஊழிய எல்லையை நிர்ணயித்து மீடியா வளராத காலத்திலேயே கச்சிதமாக தனது வேலையை முடித்துச் சென்றுவிட்டார். அந்த சம்பவங்கள் இன்று மாத்திரம் நடந்திருந்தால் நாளிதழ்களில் நம் தலையின்(இயேசு) செய்தியைத் தவிர வேறு எந்த செய்தியும் தலைப்புச் செய்தியாக முடியாது. புதிய தலைமுறையும், சன்நியூசும் இயேசுவின் வீட்டு வாசலிலேயே கூடாரம் அடித்து உட்காந்திருந்திருப்பார்கள். இவ்வளவு ஏன்! இயேசுவின் செய்திகளைச் சேகரிக்க பாலஸ்தீனத்தின் வான்வெளிகளில் ஒரு செயற்க்கைக் கோளையே சுழல விட்டிருந்திருப்பார்கள்! ஆனால் நம் நேசருக்கோ தனது புகழ் ஒரு தனிமனிதனிடமிருந்து இன்னொருவனுக்குச் செல்வதைக்கூடப் பொறுத்துக்கொள்ள முடியவில்லை.

அப்பொழுது இயேசு அவனை(சுகமடைந்த தொழுநோயாளி) நோக்கி: நீ இதை ஒருவருக்கும் சொல்லாதபடிக்கு எச்சரிக்கையாயிரு..என்று கண்டிப்பாய்ச் சொல்லி, உடனே அவனை அனுப்பிவிட்டார். (மாற்கு 1:43,44)

பிசாசு முடிவுரை எழுதிவைத்த லாசரு, நாயினூர் விதவை மகன் போன்ற பல கதைகளை மறுபடி தொடங்கிவைத்தார். பிசாசு தொடங்கி வைத்த பல கதைகளை ஒரே விரலசைவில் முடித்துவைத்தார். அவன் ஓட்டியவைகளை நிறுத்திவைத்தார் (மாற்கு 4:35-41), நிறுத்தியவைகளை ஓடவைத்தார்(லூக்கா 11:14). மதவாதிகளின் போதனைகள் நமத்துப்போன பட்டாசாயிருக்க இயேசுவின் வார்த்தைகளோ அதிர்வேட்டாய் வெடித்தன! அவரது உவமைகள் உலகையே புரட்டிப்போட்டன, பரிசேயப்பாம்புகள் அவரைக் கேள்விகளால் கவ்வலாம், விவாதத்தால் விழுங்கலாம் என்று மனப்பால் குடித்துவந்து வினவ, அவர்களது கேள்விகள் சவுக்கடியென்றால் இயேசுவின் பதிலோ சம்மட்டி அடி!

அவரது வாயிலிருந்து வஸ்திர நுனிவரை எல்லாம் அற்புதங்களை அள்ளி வழங்கின (மாற்கு 1:41, மத் 14:36). ஒருவனை இயேசு பார்த்தாலும் அற்புதம் அவன் இயேசுவைப் பார்த்தாலும் அற்புதம்! (மத் 9:22, லூக் 19:8). சீஷராகட்டும், சீசராகட்டும் எல்லாருடைய கண்களும் இயேசுவையே சுற்றிச் சுற்றி வந்தன. அவர் வாயின் ஆணைக்காக பரலோக சேனை எப்போதும் தயார் நிலையில் இருந்தது. அவர் பூமிக்காகக் கேட்ட எதையும் பரலோகம் அவருக்கு மறுக்கவில்லை, வெறும் வானத்தை அண்ணாந்து பார்த்ததுக்கே பரலோகம் பல்லாயிரம் பேருக்கு பந்தி வைத்து மகிழ்ந்தது (மாற்கு 6:34-43)

நடந்தால் ஊர்வலம், நின்றால் பொதுக்கூட்டம், இது இயேசுவைத்தவிர வேறு யாருக்குப் பொருந்தும்!! இப்படி அவரைப் பார்த்துப்பார்த்து இரசித்துக் கொண்டே இருக்கலாம். அவரது ஒவ்வொரு அசைவையும் வருணித்து கவிதை வடிக்கலாம். உலகத்தின் இரசிகரை ஒரு நொடியில் காந்தம் போல இழுத்துக்கொள்வார் ஆனால்  அவரது இரசிகர்களைக் கவர உலகிற்கு வேறொரு மாற்றும் இல்லை. இந்த அவதார புருஷனை இரசித்துவிட்டு அரிதாரம் பூசும் திரையுலக மின்மினிப் பூச்சிகளையும் அவர்களை சேவிக்கும் இரசிகரை என்ன சொல்லுவது!! பொய்யாதிபொய்யர்களான அரசியல் நரிகளுக்காகக் கழுத்தைக் கொடுக்கும் தொண்டர்களையும் என்ன சொல்லுவது!! என் தலைவன் கழுகு என்றால் உன் தலைவன் காக்கைக் குஞ்சு! என் தலைவன் வேங்கை என்றால் உன் தலைவன் எலிக்குட்டி!!

இயேசுவின் முதல் வருகைக்கும் பரலோக ராஜ்ஜியத்தின் உதயத்துக்கும் உலகை ஆயத்தப்படுத்த யோவான்ஸ்நானன் என்ற ஒரு மாமனிதனைப் பிதா அனுப்பியிருந்தார், அவன் ஒரு அற்புதத்தையும் செய்தானில்லை ஆனால் தன் வாயில் தேவ அக்கினியை உமிழ்ந்தவன்! தேவனுடைய தீப்பொறி! தனியொருவனாய் ஒட்டுமொத்த தேசத்தையும் ஸ்தம்பிக்கச் செய்தவன். அவனுக்கு இயேசுதான் மேசியாவா! அவர் செய்யும் இந்த ஊழியம்தான் பரலோக இராஜ்ஜியத்துக்கு அஸ்திபாரமா என்ற ஐயம் எழும்பவே தனது சீஷரை அனுப்பி இயேசுவை வினவுகிறான். அவனுக்கு இயேசு கொடுத்த பதில் என்ன தெரியுமா!

நீங்கள் போய், கண்டவைகளையும் கேட்டவைகளையும் யோவானுக்கு அறிவியுங்கள்; குருடர் பார்வையடைகிறார்கள், சப்பாணிகள் நடக்கிறார்கள். குஷ்டரோகிகள் சுத்தமாகிறார்கள், செவிடர் கேட்கிறார்கள், மரித்தோர் எழுந்திருக்கிறார்கள், தரித்திரருக்குச் சுவிசேஷம் பிரசங்கிக்கப்படுகிறது. என்னிடத்தில் இடறலடையாதிருக்கிறவன் எவனோ அவன் பாக்கியவான் என்றார். (லூக்கா 7:22-23)

பரலோக இராஜ்ஜியத்தில் அற்புத அடையாளங்கள் ஒரு அங்கம். அதைத் தவிர்த்து கிறிஸ்தவம் எக்காலத்திலும் இல்லை. முதல் நூற்றாண்டோடு அற்புத அடையாளாங்கள் ஓய்ந்துவிட்டன என்பவன் தன் ஆவிக்குரிய மலட்டுத் தன்மையை மறைக்கப் பார்க்கிறான், சீஷர்கள் அற்புத அடையாளங்களோடு ஊழியம் செய்த நேரத்தில் இயேசு வானத்திலிருந்து சாத்தான் மின்னலைப் போல விழுந்ததைத் தான் கண்டதாகக் கூறுகிறார் (லூக் 10:18). பரலோக ராஜ்ஜியத்தில் முதல் குடிகளாகிய பன்னிரு சீஷருக்கு ராஜ்ஜியத்தின் மேன்மை குறித்து இயேசு சொன்ன காரியம்:

இதோ, சர்ப்பங்களையும் தேள்களையும் மிதிக்கவும், சத்துருவினுடைய சகல வல்லமையையும் மேற்கொள்ளவும் உங்களுக்கு அதிகாரங் கொடுக்கிறேன்; ஒன்றும் உங்களைச் சேதப்படுத்தமாட்டாது.(லூக் 10:19)

விசுவாசிக்கிறவர்களால் நடக்கும் அடையாளங்களாவன: என் நாமத்தினாலே பிசாசுகளைத் துரத்துவார்கள். நவமான பாஷைகளைப் பேசுவார்கள்; சர்ப்பங்களை எடுப்பார்கள்; சாவுக்கேதுவான யாதொன்றைக்குடித்தாலும் அது அவர்களைச் சேதப்படுத்தாது; வியாதியஸ்தர் மேல் கைகளை வைப்பார்கள், அப்பொழுது அவர்கள் சொஸ்தமாவார்கள் என்றார். (மாற் 16:17,18)

இயேசு இருந்தவரை பிசாசால் நிம்மதியாக இருக்க முடியவில்லை, இவர் பூமியை விட்டு நீங்கும் நாளே எனக்கு நிம்மதி என்று அவன் நினைத்தபோது இயேசு அவன் தலையில் இடியாய் இறக்கிய ஒரு சேதி!

 மெய்யாகவே மெய்யாகவே நான் உங்களுக்குச் சொல்லுகிறேன்; நான் என் பிதாவினிடத்திற்குப் போகிறபடியினால், என்னை விசுவாசிக்கிறவன் நான் செய்கிறகிரியைகளைத் தானும் செய்வான், இவைகளைப்பார்க்கிலும் பெரிய கிரியைகளையும் செய்வான். (யோவான் 14:12)

(தொடரும்)

-வாட்ச்மென்

No comments:

Post a Comment