Friday, 8 March 2013

பரலோக ராஜ்யம் - சூரியப்பிரகாசத்தில் சிம்னி விளக்கு!

by Vijay Kumar on Tuesday, December 6, 2011 at 3:14am ·
உம் அரசு வருக- பாகம் 5


திரித்துவ தேவனின் நாமத்தில் வாழ்த்துக்கள்! ஒரு பட்டப்பகல் நேரம், நடுப்பகல் வரைக்கும் அதிகதிகமாய்ப் பிரகாசிக்கும் சூரியப்பிரகாசமானது அந்த நடுப்பகலை அடைந்துவிட்ட வேளை. நிழலேதுமற்ற ஒரு திறந்த வெளியில் நிற்கும் ஒரு மனிதன், சுட்டெரிக்கும் சூரிய வெப்பம் அவன் வியர்வை நாளங்களை தூண்டிவிட வியர்வை ஆறாய் ஓடுகிறது. இமைகளை முழுமையாய்த் விரித்துப் பார்க்க முடியாதபடி கண்கள் கூசுகிறது. இந்நிலையில் அவன் வெளிச்சத்துக்காக ஒரு சிறிய சிம்னி விளக்கைக் கொளுத்துவானா?

அனுதினமும் பழைய கஞ்சி உண்டு வாழும் வறியவன் ஒருவனுடைய உள்ளம் என்றோ ஒருநாள் பரிமாறப்படும் கறி சோற்றுக்காக ஏங்கித் தவிக்கும் ஆனால் அரசர் மாளிகையில் சகல போகத்துடனும் வாழும் ஒரு இளவரசன் அந்த ஒருநாள் கறிசோற்றை கிஞ்சித்தேனும் மதிப்பானா?

தன்னுடையதல்லாத சேஷ்டபுத்திர பாகம் தேடிவந்து முள்ளங்கிக் கத்தையாய் தன் மடிமீது விழுந்திருக்க யாக்கோபுக்கு "அந்த அற்பப் பயற்றங்கூழ்" ஏதேனும் விலைபெறுமா?

இந்தக் கேள்விகளுக்கான "ஆம்" அல்லது "இல்லை" என்ற பதிலை உங்கள் மனசாட்சியிடம் தந்துவிட்டு இந்தக் கட்டுரையைத் தொடருங்கள்.

நிறைவானது வரும்போது குறைவானது தடையின்றி, தடையமின்றி ஒழிந்து போகும். ஆம்! தடையமே… இன்றி ஒழிந்துபோகும்.

கர்த்தராகிய இயேசு கிறிஸ்து தனது விண்ணக மகிமையை முற்றிலும் துறந்து, பிரதிர்ஷ்டையாய் வாழ்ந்து கொடூர மரணமாய் மரித்து, உயிர்த்து…. நமக்காய் சம்பாதித்தது என்ன???

அந்தகார இருளிலிருந்து ஆச்சரியமான ஒளியல்லவா? அந்த ஆச்சரியமான ஒளிக்குள் புகுந்தவன் நிறைவான மேய்ச்சலைக் கண்டடைவானாம் (யோவா10:9). அவன் இருதயத்திலிருந்து ஜீவ தண்ணீருள்ள நதிகள் பெருக்கெடுத்து ஓடுமாம் (யோவா7:38). தமது  இருதயத்தை நிரப்பியிருந்த அந்த  சமாதானத்தையே அவனுக்குத் தந்துவிட்டாராம் (யோவா14:27). இனியும் என்ன வேண்டும்? இதெல்லாம் போதாதென்று தன் அப்பாவையே பங்குபோட்டுத் தந்துவிட்டார்.

இனி நாம் ராஜ்ஜியத்தின் புத்திரர், புதிய சிருஷ்ட்டி, இந்த புதிய ஜீவியம் சந்தோஷங்களுக்கெல்லாம் பெரிய சந்தோஷமாம்…… எப்படி தெரியுமா? தேவனுடைய ராஜ்யம் புசிப்பும் குடிப்புமல்ல, அது நீதியும் சமாதானமும் பரிசுத்த ஆவியினாலுண்டாகும் சந்தோஷமுமாயிருக்கிறது.(ரோமர் 14:17)

பரிசுத்த ஆவியினால் உண்டாகும் சந்தோஷத்தைப் பெற்ற பின்னர் உலகம் தரும் குப்பை சந்தோஷத்துக்காக ஏங்குவதுதான் சூரியப் பிரகாசத்தில் சிம்னி விளக்கைத் தேடுவது. திருப்தியடைந்தவன் தேன்கூட்டையும் மிதிப்பான்; பசியுள்ளவனுக்கோ கசப்பான பதார்த்தங்களும் தித்திப்பாயிருக்கும் (நீதி 27:7).

நியாயப் பிரமாணத்தின் கீழ் மாம்சத்தின் ஆளுகைக்குள் இருந்த மக்களுக்கு தேவன் பஸ்கா, கூடாரப் பண்டிகை, பூரீம் போன்ற பண்டிகைகளை தேவன் கொடுத்தார். அவை குறிப்பிட்ட காரியங்களை நினைவுகூறும்படியாக மாத்திரமன்றி களிகூறுதலுக்காகவும், எல்லோரும் ஓரிடத்தில் கூடி ஐக்கியம் கொண்டு கொண்டாடி மகிழவும் கொடுக்கப்பட்டவை. அவர்களுக்கு பண்டிகைகள், கேளிக்கை நிகழ்ச்சிகள், உணவுப்பொருட்கள் தரும் மகிழ்ச்சி தேவையாயிருந்தது காரணம் அவர்கள் உலகத்துக்குரியவர்கள். உலகத்துக்குரிய புசிப்பும் குடிப்புமான சந்தோஷம் பிரமாணத்தின் வழியாக அவர்களுக்கு அருளப்பட்டது.

புதிய ஏற்பாட்டு விசுவாசிகளோ உலகத்துக்குரியவர்கள் அல்ல. அவர்கள் தேவனுடைய இராஜ்ஜியத்துக்குரியவர்கள், ஆவிக்குரியவர்கள். அவர்களுக்கு உலகத்தினால் உண்டாகும் புசிப்பும் குடிப்புமான ஒருநாள் சந்தோஷமல்ல பரிசுத்த ஆவியினால் உண்டாகும் சந்தோஷம் நித்தியமாக அருளபட்டிருக்கிறது. அந்த சந்தோஷத்தின் பெலம் என்ன தெரியுமா? கிறிஸ்துவுக்காக  சிங்கத்தின் வாய்க்குள் மகிழ்ச்சியோடு தலையை கொடுத்தார்கள். தன்னுடையவைகளை தன்னுடையதல்ல என்று தூக்கி எறிந்தார்கள். பவுல் என்னும் ஒரு மனிதன் 2 கொரி 11:23 - 27-இல் தான் விவரித்து சொல்லும் சொல்லொண்ணாத் துயரங்கள் மத்தியிலும் அவனை கிறிஸ்துவுக்குள் காத்துக்கொண்டது அந்தப் பரிசுத்த ஆவியானவர் தந்த சந்தோஷமே! ஆதிக் கிறிஸ்தவர்களும் அப்போஸ்தலர்களும் அடைந்த நிந்தையையும் அதன் மத்தியிலும் அவர்கள் கண்டடைந்த அளவற்ற மகிழ்ச்சியையும் தியானிக்க வேதத்தையும் வரலாற்றையும் ஆராய்ந்து பாருங்கள். அது நமக்கு மாபெரும் சவாலாய் இருக்கும்!

புதிய ஏற்பாட்டு விசுவாசிகளுக்கு கர்த்தருக்குள் எப்போதும் சந்தோஷமாயிருங்கள் என்ற கட்டளை தரப்பட்டது. 24/7 என 365 நாட்களும் கர்த்தருக்குள் களிகூர்ந்து மகிழ்ச்சியின் உச்சத்தில் வாழவேண்டியவர்கள். புதிய ஏற்பாடு முழுவதும் சல்லடை போட்டு சலித்துப் பார்த்தாலும் அவர்களுக்கு ஒரு பண்டிகை நாளும் தரப்படவில்லை அவர்களுக்கு அது தேவையும் இல்லை. சுகமுள்ளவர்களுக்கு வைத்தியனும் மருந்தும் வேண்டுவதில்லையே! ஆனால் மருந்துப் புட்டியைத் தேடுகிறவனோ தன்னைப் பிணியாளி என்று ஒத்துக் கொள்ளாவிட்டாலும் "அவன் பிணியாளிதான்" என்பது நிரூபணம் ஆகிறது.

கிறிஸ்துமஸ் சூறாவளி வீசி அனைவரது கண்களும் காதுகளும் அடைக்கப்படுமுன் இந்த அமர்ந்த மெல்லிய சிந்தனையை நம் இருதயங்களுக்குள் ஆவியானவர் தமது எழுத்தாணியால் ஆழமாய் எழுதுவாராக! இன்னும் சில நாட்களில் கிறிஸ்தவ சமுதாயம் கிறிஸ்துமஸ் எனும் புசிப்பும் குடிப்புமான ஒரு பண்டிகையை அமர்க்களமாய்க் கொண்டாடி தாம் ஆவியானவர் தந்த அந்த நித்தியப் பேரானந்ததைத் தொலைத்துவிட்டுப் பிணியுடன் வாழ்ந்து கொண்டிருப்பதை பட்டவர்த்தனமாக அறிக்கை செய்யப் போகிறது.

என்ன பிரதர்! கர்த்தருடைய பிறப்பை நினைவுகூரும் பண்டிகையை இவ்வளவு கேவலமாகச் சொல்லிவிட்டீர்களே? என்று சிலர் கேட்கக்கூடும். அவரது பிறப்பை நினைவுகூறும்படிக்கு அதை மறந்ததால் வந்த விளைவா இந்த அவலங்கள்? அவரை மறந்தால்தானே நினைப்பதற்க்கு?

இல்ல பிரதர், கிறிஸ்துமஸ் பண்டிகையை ஆடம்பரமாகக் கொண்டாடினால்தான் தவறு, அதை அர்த்தத்தோடு கொண்டாடலாமில்லையா? கடந்த 1700 வருடங்களாக கிறிஸ்துமஸை ஒரு சந்ததியினர் அர்த்தமுள்ளதாகக் கொண்டாடியதாக எந்த வரலாறுமில்லை. காரணம் அது "புசிப்பு, குடிப்பு, கொண்டாட்டம்" என்ற ஒன்றை மனதில் வைத்தே தொடங்கப்பட்டது. ஆனால் 1700 ஆண்டுகளுக்கு முன்னர் ஆதிச்சபையார் 365 நாட்களும் 24 மனி நேரமும் கிறிஸ்து பிறப்பைக் கொண்டாடிக் கொண்டிருந்தார்கள். கிறிஸ்து பிறப்பை அர்த்தத்துடன் கொண்டாட விரும்புகிறவர்களும் முடிந்தால்(!) அதையே செய்யலாம்.

அது சரிதான் பிரதர், இந்தத் தருணத்தைப் பயன்படுத்தி புறஜாதிகளுக்கு சுவிசேஷம் அறிவிக்கலாமில்லையா? கடந்த 20 நூற்றாண்டுகளில் கிறிஸ்தவம் சொல்லும் பெரிய நொண்டிச் சாக்கு இதுதான். சத்தியம் அறிவிக்க சாட்சிகள்தான் தேவை; சாண்டாகிளாஸ் அல்ல. சாட்சி சாதிக்க முடியாததை சாண்டாகிளாஸ் சாதிக்க முடியாது. கதவுகள் திறக்கப்பட பரமனை நம்பாமல் பண்டிகையை நம்பும் சந்ததியே! உன் கையிலுள்ளது இருபுறமும் கருக்குள்ள பட்டயம்தானா? மேலும் கிறிஸ்துமஸ் அன்று திறக்கும் புறஜாதிக் கதவுகள் கிறிஸ்துமசுக்குத்தான் திறக்கின்றனவே தவிர கிறிஸ்துவுக்கு அல்ல. திறந்த கதவுகள் அன்றே மூடப்படும் மறுபடியும் அடுத்த கிறிஸ்துமசுக்கே திறக்கப்படும்! இதைப் பார்த்து நாம் ஏமாந்துவிடக்கூடாது. அவர்களுக்கு கிறிஸ்துமஸ் தேவை! கிறிஸ்து அல்ல. அது வழியென்றால் பவுல் பாடுகளைச் சுமப்பதற்க்குப் பதில் ஆயிரம் பண்டிகைகளை அறிமுகப்படுத்தியிருந்திருப்பான்.

இந்த வேளையில் சிலர் "ஏழைச் சகோதர சகோதரிகள் புத்தாடை உடுத்தி, இந்த ஒருநாளாவது நல்ல சாப்பாடு சாப்பிட்டு மகிழ்ச்சியுடன் இருப்பது உனக்கு பிடிக்கவில்லையா?" என்று கமெண்டால் அடிப்பார்கள். இதுதானா நாம் தரித்திரருக்குப் பிரசங்கிக்கும் சுவிசேஷம்? அவர்களுக்கு கிறிஸ்துதரும் மெய்யான விடுதலையையும் நித்திய மகிழ்ச்சியையும் கற்றுக்கொடுத்து மகிமையின் அனுபவங்களுக்குள் நடத்துவதை விட்டுவிட்டு, நம்முடையவைகளை முடிந்த போதெல்லாம் பங்கிட்டுத் தருவதை விட்டுவிட்டு வருடத்துக்கு ஒருநாள் உடையையும் உணவையும் பிச்சையளிப்பது போல கொடுத்துவிட்டு இருளிலேயே வைத்திருப்பத்துதான் ஊழியமா? நம்மை விட புறமதத்தினரே தேவலை.

இயேசு பிறந்தது டிசம்பர் 25-ஆ? சாண்டா கிளாஸ் யார்? கிறிஸ்துமஸ் மரம் என்ன? அந்தப் பனித்துளி (snow flake) என்ன? அதன் விக்கிரக ஆராதனைப் பின்னணிகளை அறிவை வைத்து வாதிட்டு கிறிஸ்துமஸின் முகத்திரையைக் கிழிக்கலாம். ஆனால் அதைச் செய்வது நோக்கமில்லை. ஆனால் உணர்வைத் தூண்டிவிட்டு நேசர் வைத்த சுயாதீனத்துக்குள், ராஜ்ஜியத்தின் முடிவில்லாக் கொண்டாட்டத்துக்குள் மீண்டும் நடப்பதே, நடத்துவதே நோக்கம்.

இன்று கிறிஸ்தவம் கொண்டாடும் எல்லாப் பண்டிகைகளும் 3-ஆம் நூற்றாண்டுக்குப் பின் வந்தவை. அவை மதவாதிகளால் ஆரம்பிக்கப்பட்டு முழுக்க முழுக்க வியாபாரிகளால் நடத்தப்படுபவை. அவற்றிற்க்கு எந்த ஆவிக்குரிய மதிப்பும் இல்லை..இல்லை…இல்லவே இல்லை! நாம் கிறிஸ்துமஸ் கொண்டாடாவிட்டால் கிறிஸ்தவம் மூழ்கிப்போகாது ஆனால் வியாபார உலகத்தின் அஸ்திபாரங்கள் ஆட்டங்கண்டுவிடும். இதிலிருந்தே தெரியவில்லையா இது யார் பண்டிகையென்று?

எகிப்திலிருந்து வந்த மக்கள் கர்த்தர் அவர்களுடன் இருப்பதை நினைத்து அகமகிழ்வதைவிட எகிப்தின் வெங்காயங்களையும் வெள்ளைப்பூண்டுகளையும் நினைத்து ஏங்க கர்த்தர் உள்ளம் நொறுங்கிப் போனது. கர்த்தாதி கர்த்தரை விட்டுவிட்டு அற்ப விக்கிரகங்களை அவர்கள் நாடியபோது அவர் உணர்ச்சி பொங்கக் கேட்ட கேள்வி என்ன தெரியுமா?

என்னிடம் என்ன குறையைக் கண்டீர்கள்? என்பதுதான். "என்னைவிட்டுத் தூரப்பட்டு, மாயையைப் பின்பற்றி, வீணராய்ப் போகிறதற்கு என்னிடத்தில் என்ன அநியாயத்தைக் கண்டார்கள்? (எரே 2:6)". இஸ்ரவேலர் தங்களுக்கு ஒரு ராஜா வேண்டுமென்று கேட்டார்கள், அதற்காக துக்கித்த சாமுவேலிடம் கர்த்தர் சொன்னது, அவர்கள் உன்னைத் தள்ளவில்லை என்னைத் தள்ளி விட்டார்கள்!! (I சாமு 8:7)  அவர் உள்ளம் எவ்வளவாய்த் துடித்திருக்கும்?! போதும்!!! இனி அவரது உறவும் சகோதர ஐக்கியமுமே நம் பண்டிகையாயும் கொண்டாட்டமாயும் இருப்பாதாக!

கிறிஸ்துவே உடனிருக்கும்போது பண்டிகைகள் தரும் சந்தோஷங்கள் எம்மாத்திரம்?! பரலோக ராஜ்ஜியத்துக்குள் பண்டிகை கேட்பவர்கள் பரலோகத்துக்குப் போனாலும் பண்டிகை கேட்பார்கள். காரணம் அவரிலும் நம் சகோதர ஐக்கியத்திலும் இல்லாத திருப்தி பண்டிகையில் இருக்கிறது. இல்லை இது நினைவு கூறுதல்!…நினைவுகூறுதல்! என்பவர்கள் நினைவுகூறும் நாளில் தாங்களும், மார்க்கமும் செய்வது என்ன என்பதை ஆவியானவரின் வெளிச்சத்தில் மனசாட்சியோடு சிந்தித்துப் பார்ப்பார்களாக!

இப்பண்டிகைகள்  எமக்கு சபை தந்தது ஆகவே கொண்டாடுகிறோம் என்று சொல்வோருக்கு எமது கேள்வி: இது சபை தந்ததா? ஆவியானவர் தந்ததா? சபை தந்ததானால் எந்த சபை தந்தது? பவுலும் பேதுருவும் வழிநடத்திய சபையா? சபை தந்தது அல்லது நியமித்தது எனவே கொண்டாடுகிறோம் என்ற பதில்  எதை நினைவுபடுத்துகிறதென்றால் ஆதியாகமம் 3:12 "அதற்கு ஆதாம்: என்னுடனே இருக்கும்படி தேவரீர் தந்த ஸ்திரீயானவள் அவ்விருட்சத்தின் கனியை எனக்குக் கொடுத்தாள், நான் புசித்தேன் என்றான்."

புதிய உடன்படிக்கை தரும் 24/7 சந்தோஷத்தையும் சமாதானத்தையும் களிகூறுதலையும் இழந்துவிட்டதால் அல்லவா நமக்கு உலகத்தாரைப் போன்ற பண்டிகைகள் தேவைப்படுகிறது! பின்னர் அவர்களுக்கும் நமக்குமுள்ள வித்தியாசம் என்ன? அவைகளை ஏன் இழந்தோம்? எங்கு தொலைத்தோம்? நீ இன்ன நிலைமையிலிருந்து விழுந்தாயென்பதை நினைத்து, மனந்திரும்பி, ஆதியில் செய்த கிரியைகளைச் செய்வாயாக (வெளி 2:5) என்று கர்த்தர் சபைக்கு சொல்லுகிறார்.

நமது முற்பிதாக்கள் மீண்டும் அந்த ஆதி அனுபவத்தைப் பெறும்படி நாடாமல்  உலக மார்க்கங்களைப் போல பண்டிகைகளை நியமித்து அதில் திருப்திப்பட்டுக் கொண்டார்கள். உலகத்தோடு ஒப்புரவாகியதால் சபையும் மரித்துப்போனது. நாமும் நம் சந்ததியாருக்கு ஜீவனற்ற பண்டிகைகளையே விட்டுச் செல்லப்போகிறோமா? அல்லது கிறிஸ்து திறந்த புதியதும் ஜீவனுமான மார்க்கம் தரும் நித்தியப் பேரின்பத்தை மீண்டும் கற்றுத்தரப்போகிறோமா?

பரலோக ராஜ்ஜியம் என்பது பரிசுத்த ஆவியானவர் தரும் சந்தோஷமல்ல அது புசிப்பும் குடிப்பும்தான் என்று உரக்கச் சொல்லும் சந்ததியோடு ஒத்துப்போக விருப்பமில்லை. அதற்காக பரிசுத்த ஆவி தரும் சந்தோஷத்தை முழுமையாக அடைந்தாயிற்று என்றும் மார்தட்டவில்லை. நீரோடையான அந்த அனுபவத்துக்காக வாஞ்சித்துக் கதறும் ஒரு தவனமுள்ள மானாக இருப்பதே பாக்கியம். அந்த அனுபவத்தை தாகமுள்ளவர்களுக்கு கர்த்தரே தந்தருளுவார்! ஒன்று செய்கிறேன்...பின்னானவைகளை மறந்து...முன்னானவைகளை நாடி என்ற பவுலின் அனுபவம் இல்லையென்றால் பின்னாவைகளிலேயே தங்கிவிடுவோம். பேரீச்சை மரங்கள் இருப்பதால் வனாந்திரத்தை வீடாக்கிக் கொள்ள விருப்பமில்லை. பேரீச்சை மரங்களையும் பாலைவனச் சோலைகளையும் ஒட்டகங்கள் கொண்டாடட்டும். அவைகளால் ஊசியின் காதுக்குள் நுழைய முடியாதே!! பரலோக ராஜ்ஜியப் பித்தர்கள் தொடர்ந்து பயணிக்கலாம் கால்கள் தேயும்வரை, கானான் வரும்வரை, சோர்ந்து போகாதிருங்கள்! தேவன் நியமித்த பாலும் தேனும் ஓடும் ராஜ்ஜியத்தின் அனுபவங்கள் இன்னும் கொஞ்ச தூரம்தான்.

ஒரு கூட்ட ஜனம் பாபிலோனின் நதியண்டைகளில் உட்கார்ந்து, கின்னரங்களை அலரிச் செடிகளில் வைத்துவிட்டு இழந்துபோன தன் மகிமையை நினைத்துப் புலம்பட்டும். அந்தக் கண்ணீர்த் துளிகள் கர்த்தரின் பாதங்களில் விழட்டும். இன்னொரு கூட்டம் தன் பண்டிகை ஆரவாரத்தைப் பரலோகம் வரை எழுப்பட்டும். கர்த்தருக்குத் தெரியும் எது காயீனின் காணிக்கை,  எது ஆபேலின் காணிக்கையென்று!

No comments:

Post a Comment