Friday 8 March 2013

வனாந்திரத் தீக்குருவியின் புலம்பல்

by Vijay Kumar on Friday, September 3, 2010 at 8:58pm ·

 from http://vijay76.wordpress.com/

ஐயோ! பாலை விட வெண்மையாயிருக்க வேண்டியவர்கள் கரியை விடக் கறுத்துப்போனார்களே! தங்கத்துக்கு ஒப்பான விலையேறப் பெற்ற திருச்சபையின் பிள்ளைகள் குயவனுடைய கைவேலையான மண்பாண்டங்களாய் எண்ணப்படுகிறார்களே. ஒருகாலத்தில் ”உலகத்தைக் கலக்குகிறவர்கள்” என்று எங்களை விளித்தவர்கள் இன்றைய கிறிஸ்தவத்தைப் பார்த்து கை கொட்டிச் சிரிக்கிறார்கள். ஆண்டவரே! கத்தோலிக்க சபையின் போதகத்தோடு மூர்க்கமாய் எங்கள் முற்பிதாக்கள் மோதினார்களே! அவர்களது பிள்ளைகளா நாங்கள்? எங்கள் பெயர் புரோட்டஸ்டண்டு(எதிர்ப்பாளன்) ஆனால் யாரையும் எதிர்க்க எங்களுக்கு இன்று திராணியில்லை.

கத்தோலிக்க சபை எதிர்சீர்திருத்தத்தில் கொண்டுவந்த சமூக சேவையை இன்றுவரை காத்துவருகிறது. அன்னைத் தெரசாவை உலகுக்குப் பரிசளித்திருக்கிறது. நாங்களோ எங்கள் லூத்தரைக் கூட மறந்து போனோமே! பரலோகத்தில் அவர் முகத்தில் எப்படி விழிப்போம்? எங்கள் கையில் சொந்த மொழி வேதாகமம் கொண்டுவர தங்கள் பிள்ளைகளைக் காவு கொடுத்தவர்களை, தங்கள் குடும்பத்தை இழந்தவர்களை, உயிரோடு கொளுத்தப்பட்டு மரித்த சாட்சிகளைப் பரலோகில் எப்படி சந்திப்போம்? அவர்கள் ஜீவனைப் பணயம் வைத்து மொழிபெயர்த்துக் கொடுத்த வேதத்தை கையில் வைத்துக் கொண்டு ஆவிக்குரிய குருட்டாட்டத்தில் கிடக்கிறோமே! செத்துக் கிடக்கிறோமே! ஆண்டவரே எங்களுக்கு இரங்கும்! நீரோக்களின் கல்லறைகளைத் திறந்தாகிலும், எங்களுக்குள் மீண்டும் உபத்திரவத்தை அனுப்பியாகிலும் எங்களை உயிர்ப்பியும்.

பொருளாசைப் போதகரும், சுயமகிமைப் பிரியரும், எங்களை ஆளுகிறார்கள். எங்களையே தின்று உயிர் பிழைக்கிறார்கள். ஸ்திரீகள் கைக்குழந்தைகளாகிய தங்கள் கர்ப்பக்கனியைத் தின்னவதென்பது இதுதானோ? (புலம்பல் 2:20). ஆண்டவரே! சபைகளை உலுக்க தீர்க்கதரிசிகளை அனுப்பும், அவன் எங்களை விரியன் பாம்புக் குட்டிகளே! என்றழைத்தாலும் பரவாயில்லை. எங்கள் காயங்களுக்கு மருந்து அவன் கையில் அல்லவா இருக்கிறது?

ஆண்டவரே! நீர் சபைகளுக்கு நியமித்த தீர்க்கதரிசிகள் இன்று எங்கே? (எபே:4:13). அவர்களை எங்கு எப்போது தொலைத்தோம்? சபைகளின் நூற்றாண்டுகாலப் பயணத்தில் அப்போஸ்தலன் இன்று இருக்க, மேய்ப்பன் இன்று இருக்க, சுவிசேஷகன் இன்று இருக்க, போதகன் இன்று இருக்க தீர்க்கதரிசி என்பவன் மட்டும் காணாமல் போன மாயம் என்ன? எங்கள் சத்துருவே! சாத்தானே! இது உன் நூற்றாண்டுகாலத் தந்திரமோ? காயீன் ஆபேல் மேல் கண்வைத்துக் கொன்றதுபோல, யேசபேல் எலியாவின் இரத்தம் குடிக்க அலைந்ததுபோல. சபையின் பயணத்தில் பாபிலோன் வேசி தீர்க்கதரிசியை மட்டும் கண்வைத்துக் கொன்று போட்டாளோ!

தீர்க்கதரிசியே! தேவனுடைய பாரம் பெற்றவனே! சபைக்குக் கண்ணானவனே! தேவனுக்கு வாயானவனே! திரும்பி வரமாட்டாயா? வேதத்தை வயிற்று பிழைப்புக்காகத் திரிப்பவர்களை, தேவனிடத்தில் “திட்டம்” பெற்றதாகக் கூறி பகல் கொள்ளை அடிப்பவர்களை, மேடைவித்தை காட்டி ஜனங்களை மயக்குபவர்களை, தன் சுயமகிமைக்காக பாபேல் கோபுரம் கட்டுபவர்களைப் பிடித்து உலுக்க சிவந்த கண்களோடு, கையில் ஒரு சவுக்கோடு எங்கள் சபைகளுக்குள் வரமாட்டாயா?

இன்று தெருவுக்குத் தெரு சபைகள் இருக்கின்றன. சுவிசேஷக் கூட்டங்களுக்கும், வேத பாடங்களுக்கும் பஞ்சமில்லை. ஆனால் தேவனே! உம்முடைய வார்த்தைக்குத்தான் அகோரப் பஞ்சம். சீயோன் குமாரத்தி புறம்பாகப் பூரண அழகுள்ளவள், ஆனால் உள்ளேயோ உலகம் கூடுகட்டிக் குடியிருக்கிறது. சபை கூடுகிறது, சாட்சியில்லை, உரக்க அந்நியபாஷை பேசுகிறாள் உள்ளத்திலோ அன்பில்லை. செழிப்பைப் பேசினால் “இது தேவசப்தம்” என்கிறாள், சிலுவை சுமக்கச் சொன்னாலோ காதைப் பொத்திக் கொள்ளுகிறாள். பாடல்கள் உண்டு பாரம் இல்லை, பரவசம் உண்டு பரிசுத்தம் இல்லை. வாத்தியங்களை இனிமையாக இசைக்கிறாள் ஆனால்  இறைவார்த்தையோடு இசைவதில்லை. வாய்நிறைய சுவிசேஷம், உள்ளம் விரும்புவதோ சுகவாசம். இயேசுவின் இரத்தம் புட்டிகளில் அடைக்கப்பட்டு விற்கப்படுகிறது, பரிசுத்தஆவி பெயரால் குரங்குவித்தை காட்டப்படுகிறது. தேவனே! பட்சிக்கும் அக்கினியே! நாங்கள் இன்னும் நிர்மூலம் ஆகாதிருப்பது உமது கிருபையே!

புதிய ஏற்பாடு கையில் இருக்கிறது, ஆனால் அது வாக்குப் பண்ணின வெற்றி வாழ்க்கையில் இல்லை.
அந்தரங்கத்தில் தோற்றுக் கொண்டிருக்கிறோம் கர்த்தாவே!

இரகசியமாய் உலகத்தை மேய்கிறோம் கர்த்தாவே!

ஆவிக்குரிய தரித்திரத்தின் உச்சத்தில் இருக்கிறோம் கர்த்தாவே!

பொருளாதார ஆசீர்வாதத்தைப் பேசிப்பேசி ஆவிக்குரிய போண்டிகளாகிப் போனோம் கர்த்தாவே!

உமது பிள்ளைகள் என்று அழைக்கப்பட நாங்கள் பாத்திரர் அல்ல. எங்களை மன்னியும்!

ஆண்டவரே! நாங்கள் அதிசயமாய்த் தாழ்த்தப்பட்டுப் போனோம். சத்துருக்கள் எங்களைப் பரியாசம் பண்ணுகிறார்கள்! இஸ்ரவேலிலே ஒரு தேவன் உண்டு என்கிற பயம் இன்று அவர்களுக்கு இல்லை. இஸ்ரவேலின் தேவன் எகிப்தியரைக் கலங்கடித்தவர் (எண்22:4,5; 1சாமு4:8)  என்று ராஜாக்கள் அன்று நடுங்கினார்களே! இன்று ”பரிசுத்த ஆவியில் இட்லி வேகுமா?” என்று பரிகாசம் பண்ணுகிறார்கள். உமது நாமம் தூஷிக்கப்பட நாங்களே காரணம், கர்த்தாவே எங்களது, கனலற்ற கனியற்ற சாட்சியற்ற வாழ்க்கையே காரணம். எங்களில் உள்ள ஆவிக்குரிய மரணத்தை நாங்கள் அறிந்திருக்கிறோமோ இல்லையோ அவர்கள் அறிந்திருக்கிறார்கள்.

எருசலேம் மிகுதியாய்ப் பாவஞ்செய்தாள்; ஆதலால் தூரஸ்திரீயைப்போலானாள்; அவளைக் கனம் பண்ணினவர்கள் எல்லாரும் அவளை அசட்டைப் பண்ணுகிறார்கள்; அவளுடைய மானத்தைக் கண்டார்கள்; அவளும் பெருமூச்சு விட்டுப் பின்னிட்டுத் திரும்பினாள்.

அவளுடைய அசூசம் அவள் வஸ்திர ஓரங்களில் இருந்தது; தனக்கு வரப்போகிற முடிவை நினையாதிருந்தாள்; ஆகையால் அதிசயமாய்த் தாழ்த்தப்பட்டுப்போனாள்; தேற்றுவார் இல்லை; கர்த்தாவே, என் சிறுமையைப் பாரும்; பகைஞன் பெருமைபாராட்டினானே.(புல1:8.9)

சபையை நேசிப்பவர்களே! வந்து சாம்பலில் உட்காருங்கள். இரட்டை உடுத்திக்கொண்டு, சாம்பலில் உட்காந்து நம்பிக்கைக்கு இடமுண்டோ  என்று வாயை தூளில் நுழுந்துவோம். நமது காயம் பெரிது, நாம் அடைந்த கேடு பெரிது. கூட்டங்கள் வேண்டாம் பப்ளிசிட்டி வேண்டாம். நமது அறைகளே நமது சாம்பல் மேடு! அறைகளைப் பூட்டிக் கொண்டு அந்தரங்கத்தில் அழுவோம்(மத்6:6). சபையின் பாவம் நமது பாவம், சபையின் காயம் நமது காயம். என் வீடு பாழாய்க்கிடக்கும்போது, நீங்கள் எல்லாரும் அவனவன் தன் தன் வீட்டிற்கு ஓடிப்போகிறீர்களே! (ஆகாய் 1:9) என்று தேவன் அங்கலாய்க்கிறார்.

சீயோன் குமாரத்தியின் மதிலே, இரவும் பகலும் நதியவ்வளவு கண்ணீர் விடு, ஓய்ந்திராதே, உன் கண்ணின் கறுப்புவிழி சும்மாயிருக்க வொட்டாதே.

எழுந்திரு, இராத்திரியிலே முதற்சாமத்தில் கூப்பிடு; ஆண்டவரின் சமுகத்தில் உன் இருதயத்தைத் தண்ணீரைப் போல ஊற்றிவிடு; எல்லாத் தெருக்களின் முனையிலும் பசியினால் மூர்ச்சித்துப்போகிற உன் குழந்தைகளின் பிராணனுக்காக உன் கைகளை அவரிடத்திற்கு ஏறெடு.(புல2:18,19).

ஆண்டவரே! எங்கள் வியர்வையில், எங்கள் காணிக்கையில் சபைக் கட்டிடங்களைக் கட்டுகிறார்கள். எங்கள் அப்பத்தையோ எங்களுக்குத் தருவதில்லை. ஆவிக்குரிய குருடராய்த் தடவித் திரிகிறோம் கர்த்தாவே! எங்கள் வாலிபர் சுயஇன்ப (Masturbation) சிறைகளில் வாடுகிறார்கள். மேற்கொள்ளும் வழிகள் கற்றுத்தரப் படுவதில்லை. இச்சையா? இயேசுவா? என்று ஒவ்வொரு நாளும் போராடி முடிவில் இச்சைக்கே விட்டுக் கொடுக்கிறோம் கர்த்தாவே! கிருபைக்குக் கீழ்ப்பட்டிருந்தால் பாவம் மேற்கொள்ள மாட்டாதாமே?(ரோமர் 6:14) தேவனால் பிறந்தவன் பாவஞ்செய்யானாமே?(1யோவா 5:18) ஆவியினால் மாம்சத்தின் கிரியைகளை அழிக்க முடியுமாமே?(ரோமர்8:13). ஆண்டவரே! இவைகளெல்லாம் எங்களுக்கு ஏட்டுச் சுரைக்காய்தான். யாரும் எங்களுக்கு விளக்கியதில்லை.

உமக்கு சாட்சியாக வாழ, உமக்காக மட்டுமே வாழ ஆசைதான், ஆனால் எங்கள் மாம்சத்திடம் தினந்தோறும் மண்ணைக் கவ்வுகிறோம் கர்த்தாவே! ஆதி மிஷனரிகளின் வாழ்க்கையைப் படிக்கும் போதெல்லாம், அவர்கள் தியாகத்தைப் பார்த்து விம்மி விம்மி அழுகிறோம். எங்கள் ஆவிக்குரிய கையாலாகாததனத்தை நினைத்து கூனிக் குறுகிப் போகிறோம். உமக்காக வாழ எங்கள் இருதயமும் துடிக்கிறது, எங்களுக்கும் பசிக்கிறது கர்த்தாவே! எங்களுக்கு அப்பம் கொடுப்பாரில்லை(புல 4:4). தாகத்தால் எங்கள் நாவு மேல் வாயோடே ஒட்டிக்கொண்டிருக்கிறது. தாகமாய் இருக்கிறவர்களே வாருங்கள்! என்று உமது குரலில் அழைக்கிறார்கள். ஆவலாய்ப் போனால் எங்களைத் தின்று தாங்கள் பசியாறிக் கொள்ளுகிறார்கள்!

திமிங்கிலங்கள் முதலாய்க் கொங்கைகளை நீட்டி, தங்கள் குட்டிகளுக்குப் பால் கொடுக்கும்; நாங்களோ வனாந்தரத்திலுள்ள தீக்குருவியைப்போல் குரூரமாயிக்கிறோம்.(புல 4:3)

”உன் இருதயத்தில் அந்தப்பாவத்தை இன்னும் வாஞ்சிக்கிறாய் அதுதான் நீ இன்னும் விடுதலையாகவில்லை” என்று சொல்லி எங்கள் பாரத்தை எங்கள் தலையிலேயே சுமத்தி திருப்பி அனுப்புகிறார்கள். உண்மைதான்! இல்லையென்று மறுக்கவில்லை. ஆனாலும் எங்கள் காயத்துக்கு மருந்து இல்லையோ? ஒருவன் இடறினால் என் மனம் எரியாதிருக்குமோ (II கொரி 11:29) என்று எங்களுக்காக கர்ப்பவேதனைப்படும் அந்த தர்சு பட்டணத்தான் இன்று எங்களுக்கு இல்லையே!

ஆண்டவரே! பாரதத்தின் சாபமாகிய ஜாதி சபைகளுக்குள்ளும் சதிராடுவதைப் பாரும்! பேராயர் தேர்தல்களில் கூட ஜாதி விளையாடுவதைப் பார்த்தும் சபைகளுக்குள் சங்காரத்தை அனுப்பாமல் இன்னும் சாந்தமாய்க் காத்திருக்கிறீரே! உமது பொறுமையை எப்படிப் புகழ்வது! ஜாதி பார்க்கும் கிறிஸ்தவர்களையும், ஆயர்களையும் பேராயர்களையும் தயவுசெய்து ஒருநாள் யோவான்ஸ்நானகனின் பட்டறைக்குள் அனுப்பும். உயிரோடு எஞ்சி வருபவர்களைக் கொண்டு எங்கள் திருமண்டலங்களைக் கட்டும்.

ஆண்டவரே! நாங்கள் மலையாய் நம்பியிருந்த ஊழியக்காரர்கள் கூட விழுந்து போனார்களே!. கர்த்தரால் அபிஷேகம்பண்ணப்பட்டவனும், எங்கள் நாசியின் சுவாசமாயிருந்தவனும் அவர்களுடைய படுகுழியில் அகப்பட்டான்; அவனுடைய நிழலிலே ஜாதிகளுக்குள்ளே பிழைத்திருப்போம் என்று அவனைக்குறித்துச் சொல்லியிருந்தோமே.(புல 4:20). பணத்துக்கும் புகழுக்கும் மயங்க மாட்டேன்! என்று மார்தட்டியவர்களையும் சத்துரு விழுங்கிப் போட்டானே! வலுசர்ப்பம் தனது வாலால் நட்சத்திரங்களையும் கீழே இழுத்துப் போடுகிறானே! (வெளி 12:4) அஸ்திபாரங்களும் நிர்மூலமாகிறதே, நீதிமான் என்னசெய்வான்? (சங்கீதம் 11:3).

ஆண்டவரே! எங்கள் சிறுமையைப் பார்த்தருளும். பாழாய்க்கிடக்கிற சீயோன் மலையின்மேல் நரிகள் ஓடித்திரிகிறது.(புல5:18) கர்த்தாவே எழுந்தருளும்! எங்களை உயிர்ப்பியும், தேவரீர் என்றைக்கும் எங்களை மறந்து, நெடுங்காலமாக எங்களைக் கைவிட்டிருப்பதென்ன? (புல 5:20). மறுபடியும் எங்கள் சபைகளில் பரிசுத்தம் சிங்காசனமிட்டு அமரட்டும். மலைப் பிரசங்கம் எங்கள் பீடங்களில் முழங்கட்டும். பணத்தையும் புகழையும் காலில் மிதிக்கும் தலைவர்களை எழும்பட்டும். வெகுகாலம் காலியாக இருந்த தீர்க்கதரிசியின் இருக்கைகள் நிரம்பட்டும். குப்பைமேடுகளை அணைத்துக் கொண்டிருந்த எங்கள் வாலிபர் மறுபடியும் பரிசுத்த இரத்தாம்பரம் உடுத்தி வலம் வரட்டும். இன்னும் ஆயிரம் கனவுகள் உண்டு கர்த்தாவே! எங்களுக்கு இரங்கும்! எங்களுக்கு இரங்கும்!

No comments:

Post a Comment