Friday 8 March 2013

பரலோக ராஜ்ஜியம் - சபைக்குள் களைகள்

by Vijay Kumar on Tuesday, November 8, 2011 at 10:42pm ·
உம் அரசு வருக - பாகம் 4

என் வாயை உவமைகளால் திறப்பேன், உலகத்தோற்றமுதல் மறைபொருளானவைகளை வெளிப்படுத்துவேன் (சங்கீதம் 78:2) என்று வேதவசனம் சொன்னபடி ஆண்டவராகிய இயேசு ஜனங்களுடன் பேசுகையில் பெரும்பாலும் உவமைகளையே பயன்படுத்தினார். அதில் ஒரு உவமைக்கான விளக்கம் சீஷருக்கே புரியாமல் ஆண்டவரிடம் வந்து அதை தங்களுக்கு விளக்கிச் சொல்லும்படி கேட்டார்கள். அதுதான் மத்தேயு 13-ஆம் அதிகாரத்தில் வரும் கோதுமை களைகள் பற்றிய உவமை.

பரலோகராஜ்யம் நல்ல நிலத்தில் விதைக்கப்பட்ட நல்ல விதையை விதைத்த மனுஷனுக்கு ஒப்பாயிருக்கிறது. மனுஷர் நித்திரை பண்ணுகையில் அவனுடைய சத்துரு வந்து, கோதுமைக்குள் களைகளை விதைத்துவிட்டுப் போனான். பயிரானது வளர்ந்து கதிர் விட்டபோது, களைகளும் காணப்பட்டது.வீட்டெஜமானுடைய வேலைக்காரர் அவனிடத்தில் வந்து: ஆண்டவனே, நீர் உமது நிலத்தில் நல்ல விதையை விதைத்தீர் அல்லவா? பின்னை அதில் களைகள் எப்படி உண்டானது என்றார்கள்.

அதற்கு அவன்: சத்துரு அதைச் செய்தான் என்றான். அப்பொழுது வேலைக்காரர்: நாங்கள் போய் அவைகளைப் பிடுங்கிப்போட உமக்குச் சித்தமா? என்று கேட்டார்கள்.அதற்கு அவன் வேண்டாம், களைகளைப் பிடுங்கும்போது நீங்கள் கோதுமையையுங்கூட வேரோடே பிடுங்காதபடிக்கு இரண்டையும் அறுப்பு மட்டும் வளரவிடுங்கள்.அறுப்புக்காலத்தில் நான் அறுக்கிறவர்களை நோக்கி: முதலாவது களைகளைப்பிடுங்கி, அவைகளைச் சுட்டெரிக்கிறதற்கு கட்டுகளாகக் கட்டுங்கள்; கோதுமையையோ என் களஞ்சியத்தில் சேர்த்துவையுங்கள் என்பேன் என்று சொன்னான் என்றார் (மத் 13: 24-30).

இந்த உவமைக்கு ஆண்டவரே சொன்ன விளக்கம்: 
நல்ல விதையை விதைக்கிறவன் மனுஷகுமாரன். நிலம் உலகம்; நல்ல விதை ராஜ்யத்தின் புத்திரர்; களைகள் பொல்லாங்கனுடைய புத்திரர்;அவைகளை விதைக்கிற சத்துரு பிசாசு; அறுப்பு உலகத்தின் முடிவு; அறுக்கிறவர்கள் தேவதூதர்கள்.

ஆதலால், களைகளைச் சேர்த்து அக்கினியால் சுட்டெரிக்கிறதுபோல, இவ்வுலகத்தின் முடிவிலே நடக்கும்.மனுஷகுமாரன் தம்முடைய தூதர்களை அனுப்புவார்; அவர்கள் அவருடைய ராஜ்யத்தில் இருக்கிற சகல இடறல்களையும் அக்கிரமஞ் செய்கிறவர்களையும் சேர்த்து,அவர்களை அக்கினிச் சூளையிலே போடுவார்கள்; அங்கே அழுகையும் பற்கடிப்பும் உண்டாயிருக்கும். அப்பொழுது, நீதிமான்கள் தங்கள் பிதாவின் ராஜ்யத்திலே சூரியனைப்போலப் பிரகாசிப்பார்கள். கேட்கிறதற்கு காதுள்ளவன் கேட்கக்கடவன் (மத் 13: 37-43).

இந்த உவமைக்கு இன்றைய கிறிஸ்தவம் தரும் விளக்கம் யாதெனில் "நிலம் உலகம்" என்ற வார்த்தையைப் மாத்திரம் பிடித்துகொண்டு நல்ல விதை என்பது சபையைக் குறிக்கிறது என்றும் களைகள் புறஜாதிகளைக் குறிக்கிறது என்றும் சொல்லி உலகத்தின் முடிவில் அவிசுவாசிகளை ஆக்கினைக்கும், சபையை கர்த்தர் பரலோகத்துக்கும் அனுப்புவார் என்பதாய் வியாக்கியானம் தருகிறார்கள். ஆனால் இதைத் தியானிக்கும்போது அதன் அர்த்தம் அதுவல்ல என்றும் அது அதனிலும் ஆழமானது என்றும் தோன்றியது.

ஆண்டவருடைய வார்த்தையின்படி நிலம் என்பது உலகம்தான். ஆனால் வசனமானது மனுஷகுமாரன் உலகத்திலுள்ள "தனது நிலத்தில்" விதைத்ததாகத்தான் வசனம் கூறுகிறது. "வீட்டெஜமானுடைய வேலைக்காரர் அவனிடத்தில் வந்து: ஆண்டவனே, நீர் "உமது நிலத்தில்" நல்ல விதையை விதைத்தீர் அல்லவா? பின்னை அதில் களைகள் எப்படி உண்டானது என்றார்கள். (வச:27). ஆம், தேவனுடைய நிலம் பரலோக ராஜ்யம் அல்லது சபை அங்குதான் அவர் நல்ல விதைகளை விதைக்கிறார்.

இல்லை "உலகமே நிலம்" என்றும் "களைகள் புறஜாதிகள்" வாதிட்டால் அங்கு தேவன் கோதுமையை விதைக்கும் முன்னரே களைகள் இருந்தனர். அதாவது சபை உருவானது 2000 ஆண்டுகளுக்கு முன் ஆனால் பாவிகளோ 6000 ஆண்டுகளாய் உலகத்தில் இருக்கின்றனர். இப்படிப் பார்த்தால் எஜமான் களைகளுக்குள் கோதுமையை விதைத்தார் என்பதாய் அர்த்தமாகிவிடும்.

உலகம் என்பது நிலம் அதில் எஜமான் விதைத்தது உலகத்தில் உள்ள தனது நிலமாகிய பரலோக ராஜ்ஜியத்தில். கோதுமை என்பது மெய்யாய் மனந்திரும்பிய சீஷர்கள். களைகள் என்பது பிசாசினால் ஊடுருவச் செய்யப்பட்ட மனந்திரும்பாத போலி கிறிஸ்தவர்கள் வசனம் சொல்லுகிறபடி இவர்கள் பொல்லாங்கனின் புத்திரர். இருவருமே ஆண்டவருடைய வருகை வரை சபையில் இருப்பார்கள். இவர்கள் எப்படி சபைக்குள் வந்தார்கள்? வசனம் 25 சொல்லுகிறபடி " மனுஷர் நித்திரை பண்ணுகையில் அவனுடைய சத்துரு வந்து, கோதுமைக்குள் களைகளை விதைத்துவிட்டுப் போனான்"

எஜமானுடைய நிலத்தைக் காவல் காத்துக் கொண்டிருந்த மனுஷர் தூங்கும் வேளைபார்த்து சத்துருவானவன் திருட்டளவாய் வந்து எஜமானுடைய நல்ல நிலத்தில் களைகளை விதைத்துவிட்டுச் சென்றுவிடுகிறான், ஆக இப்போது சபைக்குள்ளேயே கோதுமையும் களைகளும் சேர்ந்து வளர்கின்றன. களைக்கும் கோதுமைக்கும் ஆரம்பத்தில் பெரிய வித்தியாசம் தெரியாது. எனவேதான் எஜமானர் அறுப்பு வரைக்கும் காத்திருக்கும்படி தன் ஊழியருக்குச் சொல்லுகிறார், அறுப்பு நாளில் கோதுமைகளும் களைகளும் பிரிக்கப்படும். கோதுமை களஞ்சியத்துக்கும், களை நெருப்புக்கும் அனுப்பிவைக்கப்படும். இன்றைய நாட்களில் எல்லா கிறிஸ்தவர்களும்  இயேசுவைப் பாடுகிறார்கள், எல்லோரும் வேதத்தைப் பற்றி பேசுகிறார்கள். எல்லோருமே திருமுழுக்கு பெற்றுக்கொள்ளுகிறார்கள், எல்லோரும் கர்த்தருடைய பந்தியில் பங்கு கொள்ளுகிறார்கள். ஆனால் எல்லோரும் சீஷர்களல்ல என்பதே அதிர்ச்சியடைய வைக்கும் உண்மை. இடுக்கமான வாசலுக்குள் சிலர் மாத்திரமே பிரவேசிப்பார்கள். அந்த "சிலர்" என்பதற்க்கு எந்தக் குறிப்பிட்ட எண்ணிக்கையும் இல்லை.

ஆதி அப்போஸ்தலர் நாட்கள் வரையில் களைகளின் எண்ணிக்கை சபைக்குள் மிகக் குறைவாகவே இருந்தது காரணம் அவர்கள் விழிப்போடே மந்தையைக் காவல் செய்தவர்கள். எனவேதான் பவுல் தனது இறுதிக் காலத்தில் இளைய தலைமுறைத் தலைவர்களை எச்சரிக்கிறார்: "ஆகையால், உங்களைக்குறித்தும், தேவன் தம்முடைய சுயரத்தத்தினாலே சம்பாதித்துக்கொண்ட தமது சபையை மேய்ப்பதற்குப் பரிசுத்த ஆவி உங்களைக் கண்காணிகளாக வைத்த மந்தை முழுவதையுங்குறித்தும், எச்சரிக்கையாயிருங்கள். நான் போனபின்பு மந்தையைத் தப்பவிடாத கொடிதான ஓநாய்கள் உங்களுக்குள்ளே வரும். (அப் 20: 28,29). ஆனால் பவுல் மறந்துவிட்டு மந்தையின் காவலர் தூங்கிவிட்டனர். மந்தையைத் தப்பவிடாத ஓநாயான சத்துரு களைகளை விதைத்துச் சென்றுவிட்டான். களைகளும் கோதுமைகளும் பல நூற்றாண்டுகளாக சேர்ந்தே வளருகின்றன. அப்போஸ்தலர் நடபடிகள் முதல் சில அதிகாரங்களில் சபையில் காணப்பட்ட உன்னதம் இன்றைய சபைகளின் நிலை இல்லாததற்க்குக் காரணம் இதுவே.

இன்றோ களைகளுக்குள்ளே கோதுமைகள் வளருகின்றது. ஆனால் அந்த உவமையில் கர்த்தர் சொல்லுகிறபடி கடைசி நாளில் மனுஷகுமாரன் தம்முடைய தூதர்களை அனுப்புவார்;  அவர்கள் அவருடைய ராஜ்யத்தில் இருக்கிற சகல இடறல்களையும் அக்கிரமஞ் செய்கிறவர்களையும் சேர்த்து, அவர்களை அக்கினிச் சூளையிலே போடுவார்கள்; அங்கே அழுகையும் பற்கடிப்பும் உண்டாயிருக்கும்.அப்பொழுது, நீதிமான்கள் தங்கள் பிதாவின் ராஜ்யத்திலே சூரியனைப்போலப் பிரகாசிப்பார்கள். இங்கே கவனிக்க வேண்டிய முக்கியமான வார்த்தை என்னவென்றால் அவருடைய "இராஜ்ஜியத்தில்" இருக்கிற இடர்களையும் அக்கிரமம் செய்கிறவர்களையும் என்று 41-ஆம் வசனம் தெளிவாய்க் கூறுகிறது. எனவே களைகள் என்பவர்கள் கிறிஸ்தவர்களல்லாதோர் அல்ல, அவர்கள் போலிக் கிறிஸ்தவர்கள் ஆவார்கள் காரணம் அவர்கள் ராஜ்ஜியத்தில் இருந்து பிடுங்கப்படுகிறார்கள்.

உலகத்தின் முடிவுவரை களைகளைப் பிடுங்கும் அனுமதி யாருக்கும் இல்லை, விசுவாசிகளை தனிப்பட்ட விதத்தில் மேலோட்டமாய்ப் பார்த்து இது கோதுமை இது களை என்ற முடிவுக்கு யாரும் வர இயலாது. காரணம் முந்தினோர் அநேகர் பிந்தினோராயும், பிந்தினோர் அநேகர் முந்தினோராயும் ஆகக்கூடிய வாய்ப்பு உண்டு (மாற்கு 10:31). இன்று தவறான போதனையில் வளருபவர்கள் நாளை இடுக்கமான வாசலுக்கு வந்து சேர்ந்துவிட வாய்ப்புண்டு, யூதாஸைப் போல இன்று இயேசுவோடும் பதினொரு சீடரோரும் ஒருவனாக நல்ல பிள்ளைபோல இருந்துவிட்டு நாளை கேட்டின் மகனாகக் கெட்டுப்போய்விடவும் வாய்ப்புண்டு. இந்த வசனத்தை சிலர் எடுத்துக் கொண்டு எங்கள் ஊழியத்துக்கு எதிராகவே பயன்படுத்துவார்கள் என்று அறிந்திருக்கிறேன். ஒருவனை "களை" என்று நியாயந்தீர்த்து பிடுங்கிப் போடுவதுதான் தவறேயன்றி இயேசுவின் பெயரைச் சொல்லி மக்களை சுரண்டுபவர்களையும் அவர்களுக்குத் துணைபோகிறவர்களைக் கண்டிப்பதும் ஜனங்களை எச்சரிப்பதும் தவறல்ல. இது இக்காலத்துக்கு மிக மிக அவசியமான ஊழியம்.

ஆக வேதம் கூறுவது இதுதான் கோதுமையும் வளரட்டும் களைகளும் வளரட்டும் ஆனால் அறுப்பு நாள் என்று ஒன்று வருகிறது, அநியாயஞ்செய்கிறவன் இன்னும் அநியாயஞ்செய்யட்டும்; அசுத்தமாயிருக்கிறவன் இன்னும் அசுத்தமாயிருக்கட்டும்; நீதியுள்ளவன் இன்னும் நீதிசெய்யட்டும்; பரிசுத்தமுள்ளவன் இன்னும் பரிசுத்தமாகட்டும். இதோ, சீக்கிரமாய் வருகிறேன்; அவனவனுடைய கிரியைகளின்படி அவனவனுக்கு நான் அளிக்கும் பலன் என்னோடேகூட வருகிறது (வெளி 22:11,12)

எஜமானரின் நிலத்தில் விளைவதெல்லாம் கோதுமையல்ல. நான் களையா கோதுமையா? என்னை நானே ஆராய்ந்து பார்ப்பது ஒன்றே எனக்கு முன்னாக உள்ள வழி.  "நம்மை நாமே நிதானித்து அறிந்தால் நாம் நியாயந்தீர்க்கப்படோம்" (1கொரி11:31). தாவீது போல ஆண்டவரே என் உள்ளத்தை ஆராய்ந்துபாரும் என்று அவரை நோக்கிக் கெஞ்சுவோம். நீதியின் கனிகளை நான் தருகிறேனா? நல்ல மரம் நல்ல கனிகளைக் கொடுத்தே ஆகவேண்டுமே? நல்ல ஊற்று தித்திப்பான தண்ணீரைச் சுரந்தே ஆக வேண்டுமே! கர்த்தரும், என் மனசாட்சியும், என் குடும்பமும் எனைக் குறித்து என்ன சாட்சி கொடுக்கிறார்கள்?

நாம் எந்தச் சூழலிலிருந்தாலும் முழு இருதயத்தோடு மனந்திரும்பவும், கர்த்தருடைய கல்வாரிச் சிலுவையண்டையில் வந்து சாஷ்டாங்கமாய் நம்மை ஒப்புவிக்கவும் தயாராக இருந்தோமானால் அதுவே நாம் கோதுமை என்பதற்க்கு அடையாளமாகும்.

தன் சுயநீதியில் பெருமை பாராட்டுபவனும், லவோதிகேயனைப் போல தனது ஆவிக்குரிய நிர்பாக்கிய நிலையை உணராதவனும், தன்னைத் தாழ்த்தாதவனும் மனந்திரும்பப் போவதில்லை. அவர்கள் எதிர்பாராதது ஒருநாள் சம்பவிக்கும் அதுதான் கிறிஸ்துவின் வருகை. அவரது மகிமையுள்ள பிரசன்னத்தில் எல்லா அந்தரங்கமும் வெளியரங்கமாகும்.  அன்று தாங்கள் களைகள் என்பதை அவர்களே உணர்ந்து கொள்வார்கள். ஆனாலும் எல்லோருக்காகவும் ஜெபிக்கவும், எல்லோரிடமும் தேவனுடைய வார்த்தையைச் சொல்லவும் நாம் கடனாளிகளாய் இருக்கிறோம். ஏனெனில் யார் கோதுமை யார் களைகள் என்பதை நாம் அறியோம், மேலும் எல்லோரும் இரட்சிக்கப்படவும் தேவனை அறியும் அறிவை அடையவும் நம் பரமபிதா சித்தமுள்ளவராய் இருக்கிறார்.

வாட்ச்மென்

No comments:

Post a Comment