Friday, 8 March 2013

எச்சரிக்கை! எச்சரிக்கை! எச்சரிக்கை!

by Vijay Kumar on Thursday, September 16, 2010 at 9:51pm ·
 சகோ.விஜய் (http://vijay76.wordpress.com/)

இயேசுவின் வருகைக்கும், உலகத்தின் முடிவுக்கும் அடையாளம் என்ன? (மத்தேயு 24:3) என்று சீஷர்கள் இயேசுவைக் கேட்டபோது அவர்களுக்கு பதிலளித்த ஆண்டவர் பஞ்சம், கொள்ளை நோய்கள், போர்கள், பூமிஅதிர்ச்சிகள் இவைகளையெல்லாம் சொல்லும் முன் முதலாவதாகவும் மிக முக்கியமானதாகவும் சொன்ன அடையாளம் வஞ்சகம் (DECEPTION) என்பதாகும்.

ஒன்றல்ல இரண்டல்ல அநேகர் அநேகரை வஞ்சிப்பார்கள் (மத்தேயு 24:5) என்பதே வயிற்றில் புளியைக் கரைக்கும் செய்தியாக இருக்கிறது.  “ஒருவனும் உங்களை வஞ்சியாதபடிக்கு எச்சரிக்கையாய் இருங்கள் (மத்தேயு 24:4)“ என்று இயேசு உலகத்தாரைப் பார்த்து அல்ல தன்னைப் பின்பற்றும் ஜனங்களைப் பார்த்துச் சொன்னார்.

உங்களுக்குத் தெரியுமா?

நீங்களும் வஞ்சிக்கப்பட முடியும், ஆகவே எச்சரிக்கையாய் இருங்கள்!!!

நான் எப்படி வஞ்சிக்கப்பட முடியும்… நான் ஒழுங்கா நல்ல ஆவிக்குரிய சர்ச்சுக்கு போறேன் ஜெபம் பண்றேன், தசமபாகம் கூட தவறாமல் கொடுக்கிறேன். நான் எப்படி வஞ்சிக்கப்பட முடியும்??? என்று நீங்கள் கேட்கலாம். தெரிந்து கொள்ளப்பட்டவர்களும் வஞ்சிக்கப்பட முடியும் என்று மாற்கு 13:22 சொல்லுகிறது.

பின்வரும் 15 எச்சரிக்கைகளையும் உங்கள் வாழ்க்கையோடு பொருத்தி ஆராய்ந்து பாருங்கள், ஆவியானவர் உதவியோடு சரி செய்யுங்கள் விசுவாசிகளை மோசம் போக்கும் கடைசிகால மாபெரும் வஞ்சகத்துக்குத் தப்புங்கள். இந்தப் 15 காரியங்கள் மட்டும்தான் என்பதல்ல. இயேசுவோடு தனிப்பட்ட உறவைக் காத்துக் கொள்வதில் அக்கறையாயிருங்கள். அவருக்கே செவிகொடுங்கள் அவர் அவர் அவர் மாத்திரமே பிரதானம்.

எச்சரிக்கை #1
ஆண்டவரையும் அயலாரையும் நேசிக்கச் சொல்லி அவர் கொடுத்த பிரதான கட்டளையை மறந்துவிட்டு, வெறும் சபைக்குச் செல்லுவதிலும், காணிக்கை கொடுப்பதிலும், ஊழியம் செய்வதிலும் மாத்திரமே திருப்தியுற்று இருக்கிறீர்களா? பாவத்தில் வாழ்ந்துகொண்டு குற்ற மனசாட்சியோடு போராடிக்கொண்டிருக்கும் பாவியை விட மதரீதியான சில காரியங்களைச் செய்துவிட்டு அதில் திருப்தியும் பெருமையும் அடைந்திருக்கும் விசுவாசியே பெரும் ஆபத்திலிருக்கிறான். ஏனனில் பாவி தன் பாவங்களை அறிந்திருக்கிறான் எளிதில் உடைக்கப்பட்டும் விடுவான். ஆனால் தன் கிறிஸ்தவத்தில் (கிறிஸ்துவில் அல்ல) திருப்தியடைந்திருக்கும் விசுவாசியோ தன்னைக் குறித்து உயர்ந்த எண்ணம் கொண்டிருப்பதால் சுயநீதி என்னும் கொடூரமான வஞ்சகவலையில் அகப்பட்டு இருக்கிறான்.

ஜாக்கிரதை! உங்கள் அஸ்திபாரத்தை கிறிஸ்து எனும் கன்மலையின்மீது அல்ல மதம் என்ற மணலின் மீது போட்டு இருக்கிறீர்கள். கிறிஸ்து உங்களிடத்தில் மார்க்க கிரியைகளை அல்ல அவரையும் அயலாரையும் நேசிக்கும் அன்பையே முதலாவது எதிர்பார்க்கிறார்.

மத்தேயு: 22:36-40

எச்சரிக்கை #2
பாவத்தின் மேல் வெறுப்பும் பரிசுத்ததின் மேல் வாஞ்சையும் நாளுக்குநாள் பெருகவில்லையா? உங்கள் தனி ஜெப நேரம் உங்களுக்கு இனிமையாக இல்லையா?

ஜாக்கிரதை! தேவனோடு உங்களுக்கு நெருங்கிய ஐக்கியம் இல்லை என்பதன் வெளிப்பாடுதான் இது. உங்கள் ஆத்ம திருப்தியை கர்த்தரிடத்தில் அல்ல வேறு எங்கோ தேடிக் கொண்டிருக்கிறீர்கள்.

லூக்கா 12:34; நீதிமொழிகள் 27:7

எச்சரிக்கை #3
நீங்கள் வேதத்தை வாசிக்கக் கூடாதபடிக்கு ஒருவேளை படிக்கத் தெரியாதவரானால் வசனத்தை பிறர் வாசிக்கக் கேட்கக் கூடாதபடிக்கு உங்கள் சொந்த அலுவலில் பிசியாகவே இருக்கிறீர்களா?

எச்சரிக்கை! நீங்கள் மிக எளிதாய் வஞ்சிக்கப் படுவீர்கள். வேதத்தை கவனியாதவர்களுக்கு விடியற்காலத்து வெளிச்சம் இல்லை என்று ஏசாயா 8:20 எச்சரிகிறது.

ஏசாயா 8:20, சங்கீதம் 119:165, ஓசியா 4:6

எச்சரிக்கை #4
உங்கள் பாஸ்டர், உங்கள் சபையைத்தவிர வேறு சபைகளையோ ஊழியர்களையோ அங்கீகரிக்கவோ நேசிக்கவோ முடியவில்லையா? அவர்களுக்காகவும்  ஜெபிக்காமல் உங்கள் சபைக்காக மாத்திரமே ஜெபிக்கும்படி கற்றுக் கொடுக்கப்பட்டு இருக்கிறீர்களா?

எச்சரிக்கை! இது வஞ்சகத்திலெல்லாம் மாபெரும் வஞ்சகம்.

I யோவான் 4:20, 1கொரிந்தியர் 12: 5-27, 1கொரிந்தியர் 1:10-13,

எச்சரிக்கை #5
அனுதினமும் உங்கள் சொந்த இருதயத்தை ஆராய்வதற்கும் சுத்திகரிக்கப்படுவதற்கும் தேவனிடத்தில் கிட்டிச் சேர்ந்து, அவரைப்போல மாறுவதற்கும் வாஞ்சையில்லாமல் வெறும் உபதேசங்களைக் குறித்து வாக்குவாதம் செய்வதில் ஆர்வமுடையவரா?

அபாயம்! இது ஒரு ஆவிக்குரிய நோய் என்று வேதம் எச்சரிக்கிறது.

தீமோத்தேயு 6:4, தீத்து 3:9; I கொரிந்தியர் 11:16

எச்சரிக்கை #6
உங்கள் கண்களும் நாவும் உங்கள் கட்டுப்பாட்டில் இல்லையா?

எச்சரிக்கை! நீங்கள் ஆவிக்குரிய அவசர சிகிச்சைப் பிரிவில் சேர்க்கப்படவேண்டிய அவசியத்தில் இருக்கிறீர்கள்.

மத்தேயு 6:22, 23 யாக்கோபு 3:5-12,

எச்சரிக்கை #7
நீங்கள் ஜாதி உணர்வு உடையவரா?

நீங்கள் வஞ்சிக்கப்படுவது இருக்கட்டும் இரட்சிக்கப்பட்டிருக்கிறீர்களா? என்பதை முதலாவது ஆராய்ந்து பாருங்கள். ஏனெனில் பிராமணன், சத்திரியன், வைசியன், சூத்திரன் என்று உங்களை நீங்கள் அடையாளப்படுத்துவதால் நாடார், வன்னியர், தேவர், பள்ளர், பறையர் என்று வைராக்கியம் பாராட்டுவதால் நீங்கள் இந்து மதத்தின் ”வருணாசிரமக் கோட்பாட்டையே” இன்னும் நம்புகிறீர்கள் பரிசுத்த வேதாகமத்தை அல்ல என்பது தெளிவாகிறது. உங்களைப் படைத்தவர் கர்த்தரா? பிரம்மாவா? என்பதை இன்றே தெளிவுபடுத்திக் கொள்ளுங்கள்.

கலாத்தியர் 3:28

எச்சரிக்கை #8
உங்கள் வேதத்தை நீங்களே நேரடியாக வாசிக்காமல் அல்லது வசனத்தைக் கேட்காமல், ஏதேனும் ஒரு பிரசங்கியாருடைய பிரசங்கத்தையே தொடர்ந்து கேட்டால் போதும் என்ற உணர்வுடையவரா? அல்லது பிரசங்க மேடையில் யார் எதைச் சொன்னாலும் கண்ணை மூடிக்கொண்டு ஏற்றுக் கொள்ளுகிறீர்களா?

அபாயம்! கேட்ட போதகம் சரிதானா என்று உங்கள் வேதத்தை நீங்களே ஆராய்ந்து பார்ப்பது அவசியம். பெரேயா பட்டணத்தார் பவுலின் போதகத்தையே பரிசோதித்துப் பார்த்தார்கள் என்று வேதம் சொல்லுகிறது. அதனால்தான் அவர்கள் தெசலோனிக்கே பட்டணத்தாரைவிட நற்குணசாலிகளாய் இருந்தார்கள் என்றும் அவர்களைப் பாராட்டுகிறது. சர்ப்பத்தைபோல வினா உள்ளவர்களாய் இருங்கள். இல்லாவிட்டால் இந்தக் கடைசி நாட்களில் யாரும் உங்களை எளிதாக வஞ்சிக்கமுடியும்.

அப்போஸ்தலர் 17:11, மத்தேயு 7:15, I தெசலோனிக்கேயர் 5:21

எச்சரிக்கை #9
பரிசுத்த ஆவியானவரை உள்ளான மனிதனில் அடையும் மாற்றத்தில், கனிகளில், சாட்சியான வாழ்க்கையில் தேடாமல் வெளிப்புற அடையாளங்களிலும் சரீரத்தில் ஏற்படும் அனுபவங்களிலும் மாத்திரமே தேடுகிறீர்களா?

எச்சரிக்கை: பரிசுத்த ஆவியின் பலன் வெறும் பரவசத்துக்கு அல்ல பிரதிஷ்டை வாழ்வு வாழவே அருளப்பட்டுள்ளது.

அப்போஸ்தலர் 1:8

எச்சரிக்கை #10
நீங்கள் செல்லும் சபையில் நித்தியத்துக்கு உரிய ஆசீர்வாதங்களை விட உலகத்துக்குரிய ஆசீர்வாதங்களைப் பற்றிய செய்திகளையே கேட்டுக் கொண்டிருக்கிறீர்களா? உங்கள் சபையில் மலைப் பிரசங்கத்தைப் பற்றிய செய்திகளைக் கேட்டு வெகு காலமாயிற்றா?

ஜாக்கிரதை! நீங்கள் வஞ்சிக்கப்படுகிறீர்கள். ஒருவனும் கிரியை செய்யாத இராக்காலம் வருவதற்குள் நீங்களும் உங்கள் சபையும் இடுக்கமான வாசலுக்குள் நெருக்கமான வழிக்குள் மறுபடியும் விரைவாக வந்து சேருங்கள்.

பிலிப்பியர் 3:19, I கொரிந்தியர் 15:19

எச்சரிக்கை #11
நிலையான நகரம் எனக்கு இங்கு இல்லை, இந்த பூமியில் நான் ஒரு பரதேசி என்ற உணர்வோ, இயேசுவின் வருகையை ஒவ்வொரு நாளும் ஆவலோடு எதிர்நோக்கிக் காத்திருக்கும் மனநிலையோ இல்லாமல் இருக்கிறீர்களா?

ஜாக்கிரதை! இது மனதளவில் உங்களை நம் அப்பாவையும் அவர் வீட்டையும் விட்டு தூரத்தில் வைத்திருக்க சாத்தான் செய்த திட்டமிட்ட சதி.

எபிரெயர் 13:14, II பேதுரு 3:12, 2 கொரிந்தியர் 5:1-6

எச்சரிக்கை #12
நாதியற்றிருக்கும் தரித்திரருக்கும் பசித்த வயிரோடு உணவுக்காய் ஏங்கும் திக்கற்ற பிள்ளைகளைக் குறித்து பரிதபிக்காமல் ஊழியங்களுக்குக் கொடுத்தால் மட்டுமே எனக்கு தேவன் ஐசுவரியத்தை அள்ளிக் கொடுப்பார் என்று உணர்வோடு தேவனுக்குக் கொடுக்கிறீர்களா?

ஜாக்கிரதை! சில பொய்யான போதனைகளால் ஏமாற்றப்பட்டு இருக்கிறீர்கள். அவ்விதமாய் நீங்கள் வஞ்சிக்கப்பட உங்களுக்குள் இருக்கும் பொருளாசையும் ஒரு காரணம். கொடுப்பதைக் குறித்து புதிய ஏற்பாடு சொல்லியுள்ள பகுதிகளை நன்றாக ஆராய்ந்து பாருங்கள்.

கலாத்தியர் 2:10, நீதிமொழிகள் 19:17, யாக்கோபு 1:27

எச்சரிக்கை #13
நீங்கள் உங்கள் சபையில் நற்சாட்சி பெற்றிருந்தும் உங்கள் சொந்த வீட்டில் உங்களுக்கு சாட்சி இல்லையா?

அப்படியானால் நீங்கள் இரட்டை வாழ்க்கை வாழுகிறீர்கள். மாய்மாலம் தேவன் வெறுக்கும் பிரதான பாவம்.
இதற்கு நாளை அல்ல இன்றே, இப்பொழுதே மனந்திரும்ப வேண்டியது அவசர அவசியம்.

அப்போஸ்தலர் 1:8; I தீமோத்தேயு 5:8;

எச்சரிக்கை #14
ஒரு படித்த அந்தஸ்த்துள்ள விசுவாசிக்குக் கொடுக்கும் அதே முக்கியத்துவத்தையும் மரியாதையையும்  ஒரு படிக்காத, ஏழை விசுவாசிக்குக் கொடுக்க முடியவில்லையா?

அப்படியானால் நீங்கள் கிறிஸ்துவை அல்ல ஒரு கனியற்ற வறட்டு மதத்தைப் பின்பற்றுகிறீர்கள் என்று அர்த்தம். பிரியமானவர்களே! இது கர்த்தர் பார்வையில் அருவருப்பானது என்பதை உணருங்கள்.

யாக்கோபு2:1-9

எச்சரிக்கை #15
கிறிஸ்துவுக்குள் நீங்கள் யார் உங்கள் மேன்மை என்ன? புதிய உடன்படிக்கையில் உங்களுக்கு அருளப்பட்ட சிலாக்கியங்கள் என்னென்ன? நமக்கும் பழைய ஏற்ப்பாட்டு விசுவாசிகளுக்கும் என்ன வித்தியாசம் இவைகளையெல்லாம் தெளிவாகப் புரிந்து வைத்திருக்கிறீர்களா? நாம் இதைப் புரிந்துகொள்ள வேண்டுமென்றுதான் பவுல் எபேசியர் முதல் அதிகாரத்தில் கருத்தாய் ஜெபிக்கிறார். இதுவே நம் பிரதான தேவை.

எச்சரிக்கை! இது புரியாவிட்டால் பிள்ளைகளாக அல்ல வெறும் பக்தகோடிகளாகவே வாழ்ந்து முடித்து விடுவோம். நாம் பிரதானமானவைகளைக் குறைவாகவும் தேவையற்றவற்றைப் பற்றி அதிகமாகவும் பிரசங்கங்களைக் கேட்டுக் கொண்டிருக்கிறோம். நமக்கு முன்னே உள்ள ஒரே வழி: அப்போஸ்தலர் எழுதிய நிருபங்களை  ஆவியானவர் துணையோடு நாமே ஆராய்ந்து பார்ப்பதுதான்.

எபேசியர்1:16-19

பிரியமானவர்களே! உங்களைப் புண்படுத்த அல்ல, உங்களை அதிகமாய் நேசிப்பதாலேயே உங்களில் ஒருவரும் கெட்டுப் போகக் கூடாது என்ற நோக்கத்துடன் இந்த எச்சரிப்புகளை வெளியிட்டு இருக்கிறேன். சிநேகிதன் அடிக்கும் அடிகள் உண்மையானவைகள் என்று நீதிமொழிகள் 27:6 சொல்லுகிறது.

No comments:

Post a Comment