Thursday 21 March 2013


இது உணர்ச்சிவயப்பட்டு எழுதிய ஒரு கட்டுரை அல்ல. அரசியல் ஆராய்ச்சிக் கட்டுரையும் அல்ல. விடுதலைப்புலிகளுக்கோ ஆயுதப்போராட்டத்துக்கோ ஆதரவான கட்டுரையும் அல்லவே அல்ல. இது போர் ஏற்படுத்தும் பயங்கர விளைவுகளைக் கண்டு மனம் நொறுங்கிப்போன ஒரு சராசரி கிறிஸ்தவனின் புலம்பல்.

நான் சிங்கப்பூரில் வேலை செய்த நாட்களில்  2009-இல் இலங்கையில் நடந்த போர் மற்றும் அதைத் தொடர்ந்த பயங்கர இனப்படுகொலை செய்திகளையும் அப்பாவி மக்களும் குழந்தைகளும் பாதிக்கபட்ட காணொளிகளையும் கண்டு மனம் உடைந்து, தனிமையில் பலநாட்கள் பைத்தியக்காரன் போல அழுது, எங்கிருந்தாவது இந்த ஜனத்துக்கு ஆறுதல் வராதா என்று அங்கலாய்த்து, கடைசியில் அரசியல் தலைவர்களும், கட்சி சார்ந்த ஊடகங்களும் கழுத்தறுத்து எல்லாம் கைநழுவிப்போன பின்னர்  அன்று முதல் மனதில் கனன்று எரிந்து கொண்டிருந்த ஆற்றாமை நெருப்பை இன்று இக்கட்டுரையில் கொட்டித்தீர்க்கிறேன் அவ்வளவுதான்! அந்த நாட்களில் இன்று இருப்பதுபோல எனக்கு முகநூல், வலைப்பூ என்று எதுவும் எனக்குத் தெரியாது.


Image Courtesy: voteforeelam.blogspot.com

போர் உச்சகட்டத்தில் நடந்து வரலாறு காணாத மனித உரிமை மீறலும் இனப்படுகொலையும் நடந்து கொண்டிருப்பதாக ஊடகங்கள் அலறிய வேளையில் தமிழகம் உட்பட உலகில் தமிழர்கள் வாழும் பகுதிகளெங்கும் போராட்டத்தீ பற்றியெரிந்தது. சிலர் அங்கு போரை உடனே நிறுத்தி எஞ்சியிருக்கும் ஜனங்களையாவது காப்பாற்றவேண்டும் என்ற அவசர கோரிக்கையை அரசின் கவனத்தை ஈர்க்கும்படி முன்வைக்க வேண்டும் என்பதற்காக தங்களையே தீயிட்டு கொளுத்தி மடிந்தார்கள். அவர்களுள் முக்கியமாக எனது உயிரை ஆயுதமாக்கிப் போராடுங்கள் என்று தீக்குளித்த முத்துக்குமாரும் அவர் எழுதிய மரணசாசனமும் தமிழர் வரலாற்றில் நீங்காத இடம்பெற்றுவிட்டது.  இத்தனைக்கும் இவர் இலங்கைத்தமிழர் கூட இல்லை. ஆனால் தன் சக தமிழ் சகோதரனுக்காக தன் இன்னுயிரை மாய்த்துக்கொண்டது "ஒருவன் தன் சிநேகிதருக்காகத் தன் ஜீவனைக் கொடுக்கிற அன்பு" என்ற வேதவார்த்தையை நினைப்பூட்டி எனக்கு சவால்விட்டது.


Image Courtesy: www.asianews.it

இது ஒருபக்கமிருக்க…நீதிமொழிகள் 30:18-இல் ஞானி சாலமோன் சொல்லுவாரல்லவா எனக்கு மிகவும் ஆச்சரியமானவைகள் மூன்றுண்டு, என் புத்திக்கெட்டாதவைகள் நான்குமுண்டு என்று …என்னைப் பொறுத்தவரை அந்தச் சூழ்நிலையில் என்னை ஆச்சரியப்படுத்தியதும் அதிர்ச்சியடைய வைத்ததும் ஓன்றே ஒன்றுதான். அந்த பயங்கரமான சூழ்நிலையிலும் தமிழ் வெகுஜனக் கிறிஸ்தவர்களும், பெரிய திருச்சபைகளும் புகழ்பெற்ற ஊழியக்காரர்களும் தங்களைச் சுற்றி எதுவுமே நடக்காதது போல தனது அனுதினவாழ்க்கையை நடத்திக்கொண்டு வந்ததுதான் எனக்கு தலைசுற்ற வைத்தது…எப்படி இவர்களால் இப்படி இருக்க முடிந்தது என்பது இன்றுவரை எனக்கு ஒரு புரியாத புதிராகவே இருக்கிறது. அப்படியானால் "இன்றைய கிறிஸ்தவ சபை" என்ற கட்டமைப்பு எந்த மூலைக்கல்லின்மேல் கட்டப்பட்டிருக்கிறது என அதன் அடிப்படைமீதே சந்தேகத்தைப் பாய்ச்சிய ஆரம்பப்புள்ளிகளில் இதுவும் ஒன்று! எனக்கு தெரிந்த வட்டங்களிலெல்லாம் விசாரித்ததுவரை வெகு சில சபைகளிலேயே போர் நிறுத்தத்துக்காகவும் பாதிக்கபட்டவர்களுக்காகவும் ஜெபம் ஏறெடுக்கபட்டு இருந்திருக்கிறது. அதுவும் பாரம்பரியமாக…

அச்சூழ்நிலையில் சிங்கப்பூரில் கட்டிடவேலை மற்றும் கப்பல் துறைமுகத்தில் வேலைசெய்யும் தமிழக சகோதரர்களிடையே பிரசங்கிக்கும் வாய்ப்பு கிடைத்தது, நொறுங்கிய மனதோடு இலங்கையின் நிலவரத்தை குறித்து சொல்லி அவர்களை ஜெபத்துக்குள் நடத்த தொடங்கியபோது ஒருவர் ஓடிவந்து என்னிடமிருந்த மைக்கை பிடுங்கி குழந்தைபோல அழத்தொடங்கினார். "நண்பர்களே அங்கிருக்கும் குழந்தைகளுக்கு பால்பவுடர் கூட செல்ல முடியாதபடி எல்லாம் தடைப்பட்டிருக்கிறதாக செய்திகள் வந்துகொண்டிருக்கிறது.  பச்சிளம் குழந்தைகள் உணவின்றி மருந்தின்றி பசியாலும் குண்டடிபட்டும் சாகிறார்களே! நானும் பிள்ளைகளைப் பெற்றவன் என்னால் இந்த பாரத்தை தாங்கமுடியவில்லை! நம்மால் ஒன்றும் செய்யமுடியவில்லை அந்தக் கடவுளாவது கண்ணைத்திறக்கட்டும் " என்றெல்லாம் சொல்லி சத்தமிட்டு அழ ஆரம்பித்துவிட்டார், யாராலும் அவரைக் கட்டுப்படுத்த முடியவில்லை. கடைசியில் அவர் யாரென்று விசாரித்தபோது அன்றுதான் முதல்முறையாக ஒரு நண்பரால் அழைத்துவரப்பட்ட ஒரு இந்து சகோதரர் என்பது புரிந்தது.

போர்சூழலிலும் போர் முடிந்தபின்னும் கிறிஸ்தவத் தொண்டு நிறுவனங்களும், ஊழியங்களும் அங்கே விரைந்து சென்று மீட்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருவது உண்மைதான். ஆனால் வெகுஜன கிறிஸ்தவர்களின் மனநிலை என்ன? சபைத்தலைவர்கள் மற்றும் ஊழியக்காரர்களின் நிலைப்பாடு என்ன? என் கேள்வி இலங்கை இனப்படுகொலை பற்றி மாத்திரமல்ல, அது பெண்களுக்கு எதிராக நடக்கும் பாலியல் கொடுமைகளாக இருக்கட்டும், சுற்றுச்சூழல் பாதிப்பாக இருக்கட்டும், அரசுகளே சாராய வியாபாரிகளாக மாறி ஏழைக்குடிகளை கெடுக்கும் அவலமாகட்டும், ஜாதி வன்கொடுமைகளாகட்டும், தரித்திரர் ஒடுக்கப்படுவதாகட்டும்  இப்படி பொது விஷயத்தில் எதில் அக்கறை காட்டியிருக்கிறோம்? நம்மைச் சுற்றி நடக்கும் அக்கிரமங்களுக்கெதிராக திருச்சபையாக என்ன நிலைப்பாட்டை எடுத்திருக்கிறோம்?

ஈழத்தில் பாதிக்கபட்ட மக்களைப்பற்றி பேச ஆரம்பித்தாலே "தம்பி! உனக்கு அங்கு நடக்கும் உண்மை நிலவரம் தெரியவில்லை, நீ இலங்கைக்கு போயிருக்கிறாயா? நான் ஊழியத்துக்கு பலமுறை போயிருக்கிறேன். உண்மையில் எல்லாப்பிரச்சனைகளுக்கும் இந்தப் புலிகள்தான் காரணம்! இலங்கை அரசு ரொம்ப நியாயமானது " என்ற போர்வையில் சிலர் வரிந்துகட்டிக்கொண்டு வந்துவிடுகிறார்கள். எனக்கு இரண்டுக்கும் மேற்பட்ட ஊழியர்களுடன் அப்படிப்பட்ட அனுபவம் ஏற்பட்டிருக்கிறது. இவர்களது புலிவெறுப்புக்கும் சிங்களப்பாசத்துக்கும் காரணம் என்ன என்பதையும், இவர்களது நதிமூலங்களையும் ஆராய்ந்து பார்த்தால் இவர்களது ஊழியத்துக்கோ, டிவி சேனலுக்கோ இலங்கையில் ஒரு அலுவலகம் இருக்கும். அல்லது இவர்களுக்கு சிங்களப் பாஸ்டர்களும், விசுவாசிகளும் நிறைய நண்பர்களாக இருப்பார்கள். அல்லது அடிக்கடி ஊழியத்தின் நிமித்தம் இலங்கை செல்லக்கூடியவர்களாக இருப்பார்கள். அரசுக்கு எதிராகப் பேசும் வெளிநாட்டினருக்குக் கூட பாதுகாப்பற்ற நிலை அங்கு இருப்பதை நாம் யாவரும் உணர்ந்திருக்கிறோம். எனவே இவர்களது பயமும் நியாயமானதுதான். உங்களைத் தேடி "வெள்ளை வேன்" வராதபடி கர்த்தர்தாமே உங்களையும், உங்கள் இலங்கை அலுவலகத்தையும் காப்பாராக! ஆனால் உங்கள் பயத்தை நியாயப்படுத்த தவறான திரிக்கபட்ட தகவல்களைக் கூறாமல் இருக்கலாம். இலங்கை அரசு மற்றும் ராணுவம் இவற்றின் இலட்சணம் ஐ.நா வரை சந்தி சிரிப்பதை யாவரும் அறிவோம்.

யார் குற்றவாளி? என்ற ஆராய்ச்சிக்குள் நாம் இப்போது செல்லாதிருக்கலாம். "இது பயங்கவாதத்துக்கு எதிரான போர்!" என்று அவர்கள் சொல்வார்கள், "இது எம் மண்ணுக்கான விடுதலைக்கான போர்!" என்று இவர்கள் சொல்வார்கள். இது இன்று நேற்று பிரச்சனையல்ல, மிக நீண்ட நெடிய வரலாறுடையது. இதில் ஒவ்வொருவருக்கும் தனிப்பட கருத்துக்கள் இருக்கலாம். அவற்றை ஆராய்ச்சி செய்ய இந்த ஆவிக்குரிய தளம் உகந்ததல்ல. எமது நோக்கம் மண்ணுக்காக நடந்த யுத்தத்தில் சிக்கி மடிந்த நம் சொந்த மக்களுக்காக தமிழ் கிறிஸ்தவர்களாக, நல்ல சமாரியராக நாம் என்ன செய்தோம்? இந்தப் பிரச்சனை மாத்திரமல்ல தரித்திரரையும், திக்கற்றவர்களையும், ஒடுக்கபட்டவர்களையும், பெண்களையும், குழந்தைகளையும் பாதிக்கும் எந்தவொரு சமூக பிரச்சனையாக இருந்தாலும் நாம் இதுவரை என்ன செய்திருக்கிறோம் இனி என்ன செய்யப்போகிறோம் என்பதை ஆராய்வதே இக்கட்டுரை தொடரின் நோக்கம்.

மேற்கண்ட முன்னுரையை உள்வாங்கிக்கொண்டு கட்டுரையை தொடர்வது ஆசிரியரின் நோக்கம் குறித்த தேவையற்ற சந்தேகங்களை களைந்து கட்டுரையின் சாரத்தை புரிந்துகொள்ள வழிவகுக்கும்.

இனி என் இதயம் வெடித்துக் கிளம்பும் அங்கலாய்ப்பைக் கேளுங்கள்! இது பலநாட்கள் நெஞ்சுக்குள் பூட்டி வைத்திருந்தது!

உண்மையில் மதவாதிகளே கடவுளை விட்டு தூரம் நிற்கிறார்கள் என்பதற்கு இந்நூற்றாண்டின் கொடூர இனப்படுகொலை விஷயத்தில் so called ஆவிக்குரியவர்கள் இன்றுவரை சாதித்துவரும் கள்ள மவுனமே சாட்சி.

பரிசுத்தத்தையும், பரலோக நீதியையும் மொத்த குத்தகைக்கு எடுத்த லேவியர்களும் ஆசாரியர்களும் தொடை நடுங்கிக்கொண்டு ஒதுங்கி நிற்க, புறஜாதிகளென்றும் அவிசுவாசிகளென்றும் முத்திரை குத்தப்பட்ட சாமானியர்களே இன்று நல்லசமாரியர்களாய் நொறுக்கபட்டவனின் நீதிக்காக செருக்களம் காண்கிறார்கள்.

போர் நடந்த காலங்களில் “ஆயுதப்போராட்டம்” என்று சொல்லி புலிகள் மீது பழியைப் போட்டு மவுனம் காத்தார்கள், ஈரக்கொலையை நடுங்கவைக்கும் இனக்கொலை சான்றுகள் ஒன்றன்பின் வெளிவந்த பின்னும் அது கண்டு மனசாட்சியில் அக்கினி பற்றியெரிய உலக நாடுகளெல்லாம் வாயைத் திறந்து கதற ஆரம்பித்த பின்னும் திருச்சபைகள் மவுனத்தை தொடருவதேன்? அதுவும் தமிழ்திருச்சபைகள்?????

இப்பிரச்சனையை முதலில் கையிலெடுத்து களமிறங்கி இருந்திருக்க வேண்டியது யார்? ஐ.நாவா? அமெரிக்காவா? இந்தியாவா? அல்லது நீதிதேவனின் (ஏசாயா 30:18) பிள்ளைகள் என்று மார்தட்டிச்சொல்லும் கிறிஸ்தவ சபைகளா? திருச்சபைகள் இந்தப் பிரச்சனையை எப்படி கையாண்டிருக்க முடியும் சகோதரனே? என்று கேட்பவர்களுக்கு பதில் தொடர்ந்து என்னோடு கட்டுரைக்குள் கடந்து வாருங்கள்.


Image Courtesy: www.documentingreality.com

கடைசி யுத்தம் நடந்த போது பாலகர்களும் கர்ப்பிணிகளும் நோயாளிகளும் தங்கள் ஜீவனுக்காக அபயமிட்டபோது இங்கே நிர்விசாரிகள் ஆராதனை என்ற பெயரில் இசைக்கருவிகள் முழங்க கைகளைத் தட்டி ஆட்டம் போட்டுக் கொண்டிருந்ததும், பண்டிகை சந்தோஷங்களில் மூழ்கியிருந்ததும் (அது டிசம்பர், ஜனவரி மாதங்கள்) தங்கள் சொந்தப் பிரச்சனைகளுக்காக பரலோகக் கதவை தட்டிக்கொண்டும் இருந்தது உண்மையா இல்லையா?


Image Courtesy: www.srilankaguardian.org

பதுங்குகுழிக்குள்ளிருந்து பச்சிளம் பிள்ளைகள் அலறித்துடித்த கூக்குரலுக்கு தன் காதுகளைப் பொத்திக்கொண்டு தேவனுடைய வீட்டில் ஆராதனைகளுக்குள் மூழ்கிப்போன ஆவிக்குரியவர்கள் தேவனுடைய நியாயத்தீர்ப்புகள் அவருடைய வீட்டிலிருந்து துவங்கும் நாளில் பட்சிக்கும் அக்கினியானவரின் பிரசன்னத்துக்குத் தப்ப அதே பதுங்குகுழிகளைத் தேடி ஓடவேண்டியதிருக்கும்.(நீதிமொழிகள் 21:13)

காரணம் என்னதெரியுமா? நன்மைசெய்யும்படி உனக்குத் திராணியிருக்கும்போது, அதை செய்யத்தக்கவர்களுக்குச் செய்யாமல் இருப்பது பாவம் என்று நீதிமொழிகள் 3:27 சொல்லுகிறது.

இதன் தொடர்ச்சியை வாசிக்க: http://alturl.com/xkje4

-சகோ.விஜய்

No comments:

Post a Comment