Friday 8 March 2013

ஓ ஓ ஓ ஒநாய்கள்.....

by Joshuas'army Srilanka on Saturday, January 14, 2012 at 9:57pm ·
இன்று எக்காலமும் இல்லாத அளவிற்கு கிறிஸ்தவ ஊழிய உலகில் பண ஆசை பிடித்தவர்களும், புகழ் ஆசைக்கு அடிமையானவர்களும், அதிகார வெறிமிகுந்தவர்களும், பெருகிப்போயுள்ளனர்! ஊழியம் என்பது இவர்களின் இருதயத்தோடு சம்பந்தப்பட்டது அல்ல. அது ஒரு முகமூடி, அவர்களின் நோக்கமோ பணம்,பொருள்,புகழ்,அந்தஸ்து,ஆடம்பரம்,சவுகரியம்,அதிகாரம் ஆகியவையே. இவர்கள் யாரை எந்த விதமாக ஏமாற்றலாம், யாருடைய பணத்தையும் பொருளையும் காணிக்கை என்ற பெயரில் எப்படி கைப்பற்றலாம் என்ற சிந்தையோடு செயல்படுகிறார்கள்.

       இவர்கள் இருபது வகை ஊழியம் செய்கிறோம்,முப்பது வகையில் ஊழியம் செய்கிறோம் என்றெல்லாம் பெரிதாக பிரஸ்தாபம் செய்தாலும் அவர்களுடைய நோக்கமோ ஒரே வகைதான்! அது பணம்! பணம்!! பணம்!!!

        இன்று புதிதாக பிறக்கும் குழந்தைகள் துவங்கி, கோல்பிடித்து தள்ளாடி நடக்கும் முதியவர்கள்வரை ஒருவரையும் விடாமல் தினுசு தினுசாக அவர்களுக்காக ஆசீர்வாத திட்டங்கள் உருவாகியுள்ளன. எப்படி புதிது புதிதாக திட்டங்கள் தீட்டி ஆன்மீக நம்பிக்கையுள்ள மக்களின் வருவாய்களை தங்கள் பைகளில் இழுத்துக்கொள்ளலாம் என்று போலி ஊழியர்கள் திறமையாக திட்டம் தீட்டுகிறார்கள். அந்த திட்டங்களுக்கு அறிவிய பூர்வமான தொழில் நுட்பங்களும், மனவியல் பூர்வமான அணுகுமுறைகளும் மிக மிக ஞானமாகக் கையாளப்படுகின்றன.

ஆசீர்வாத திட்டங்கள்

          இன்று பிள்ளைகள் ஆசீர்வாதத்திட்டம், வாலிபர் ஆசீர்வாதத்திட்டம், மாணவர் ஆசீர்வாதத்திட்டம்,குடும்ப ஆசீர்வாத்திட்டம், டி.வி பார்ப்போர் ஆசீர்வாத்திட்ட திட்டம் என தினுசு தினுசாக திட்டங்களுக்கு பஞ்சமேயில்லை. ஆனால் ஆட்டு தோல் போர்தப்பட்ட இந்த ஆசீர்வாத திட்டங்களுக்கு பின்னால் சிந்தைளுக்கு பின்னால் இருக்கும் சிந்தையோ மறைவான ஓனாய்தனமான பண ஆசையே. ஏனென்றால் எந்த ஒரு திட்டமும் கட்டணமில்லாத திட்டங்கள் அல்ல.

        பாவமன்னிப்பு பெற பணம் என்று போர்கொடி உயர்த்திய மார்டின் லூத்தரின் போராட்டத்தின் விளைவாக தோன்றியதுதான் சீர்திருத்த திருச்சபை என்று அழைக்கப்படும் புராட்டஸ்டண்ட் பிரிவு.  ஆனால் இந்த புராட்டஸ்டண்ட் பிரிவில்தான் இன்று ஜெபத்துக்காக கட்டணம் கேட்கும் போலி ஊழியர்கள் நிரம்பியுள்ளனர்.  பிள்ளைகளுக்காக ஜெபிக்க பணம், மாணவர்களுக்காக ஜெபிக்க பணம், இளம் பிராயத்தினருக்காக ஜெபிக்க பணம்.... பணம் பணம் பணம்,  இன்று மார்டின் லுத்தர் இருந்திருந்தால் ஜெபத்திற்கு கட்டணம் நிர்ணயித்து ஒப்பந்தம் பேசி ஊழியம் செய்யும் புராட்டஸ்டண்டுகளைப் பார்த்து மாரடைப்பு ஏற்ப்பட்டு மரித்திருப்பார்.

       இரையை தூண்டிலில் மாட்டி மீன்களை தந்திரமாக பிடிப்பதுபோல பங்காளர் திட்டங்கள்மூலம் உங்களுக்கு ஆசீர்வாதம் வேண்டுமா? என்ற இரையை காட்டி ஜனங்களை எளிதாக பிடித்துவிடுகிறார்கள். இந்த பங்காளர் திட்டங்களுக்கு பின்னால் இருப்பதோ, சரியான இறை ஐக்கியம் இன்றி ஆசீர்வாதங்களை மட்டும் தேடுகின்ற அப்பாவி மக்களின் வருவாய்களில் கணிசமான பங்கு கேட்கும் சிந்தையே. இந்த அப்பாவி பங்காளர்களுக்கு பொருளாசை பிடித்த ஊழியர்களுக்கு கணிசமான காணிக்கைகளை தங்களின் பங்காக கொடுக்கும் உரிமையைதவிர, அந்த ஊழியர்கள் எவ்வளவு பெறுகிறார்கள் எதை எதற்காக செலவிடுகிறார்கள் என்பதையெல்லால் அறியும் உரிமை கிடையாது.

 ஒருவன் இன்னொருவனிடம் “இதோ பார் நாம் இரண்டு பேரும் பங்காளிகளாகவும், பங்குதாரர்களாகவும் இருப்போம். நான் உமியை கொண்டுவருகிறேன், நீ அரிசியை கொண்டுவா இரண்டையும் கலந்து நாம் ஊதி ஊதி சாப்பிடலாம்” என்றானாம். இதேவிதமாகதான் இன்றைய பங்காளர் திட்டங்கள் உள்ளன.

ஆவிக்குரிய கொள்கை இல்லை...

      இந்த பங்காளர் திட்ட படைப்பாளர்களுக்கு ஆவிக்குரிய கொள்கையோ, பரிசுத்த கோட்பாடோ,தரமான ஆவிக்குரிய அணுகுமுறைகளோ,தனிப்பட்ட சாட்ச்சி வாழ்கையோ, தேவ பயம் சார்ந்த செயல்பாடோ எதுவும் கிடையாது! அவர்கள் பாவிகளாய் இருந்தாலும் பண்பு நிலை கெட்டவர்களாக இருந்தாலும் சரிதான். எந்த மதம்,எந்த நம்பிக்கை,எந்த வழி என்ற வேறுபாடு கிடையாது. யாராகவும் இருக்கலாம் அவர்கள் தாராளமாக பணம் கொடுக்கும் மனநிலை இருந்தால்மட்டும் போதும்.

                          சில வருடங்களுக்கு முன்பு முன்னணி ஊழிய நிறுவன பத்திரிக்கை ஒன்றில் ஒரு அறிவிப்பு வந்தது! அந்த ஊழிய நிறுவனத்தலைவர் தன்னுடைய வாசகர்களுக்கு ஒரு வேண்டுகோள் விடுத்திருந்தார். அந்த நிறுவனத்திற்காக தர்ம சிந்தை கொண்ட பிற மத நன்கொடையாளர்களை அணுகி பணம் அல்லது கட்டடம் அல்லது நிலம் அளிக்கும்படி கேட்டுக்கொள்வது அந்த வேண்டுகோள். அதே நிறுவனம் ஐம்பது கோடிக்கும் அதிகமாக கிரயம் கொடுத்து ஊழிய அலுவலகத்திற்கக ஒரு கட்டிடத்தை வாங்கியது. அதில் 25கோடியை வங்கி கடனாக பெற்றிருப்பதாக கூறி அதற்காக பணம் படைத்த செல்வந்தர்களை எழுப்பிதரும்படி ஜெபிக்க வாசகர்களிடம் கேட்டிருந்தனர்! ஆம் யார் எவர் என்பது முக்கியமல்ல “பணம் படைத்தவர்கள்” அதுதான் முக்கியம்.

   இயேசு நாதரோ அவருடைய சீடரோ இந்தவிதமாக ஜனங்களிடம் காணிக்கை கேட்பதுபோல கற்பனை பண்ணிப்பாருங்கள். அவர்கள் தெருவில் நின்று வாங்க.. வாங்க... போடுங்க... போடுங்க.. நீங்கள் யூதரோ கிரேக்கரோ சமாரியரோ பரவாயில்லை, நீங்கள் யோக்கியரோ அயோக்கியரோ பரவாயில்லை, நீங்கள் நல்லவரோ கெட்டவரோ அது நமக்கு கவலை இல்லை, நீங்கள் எங்கள் சத்தியத்தை ஏற்கிறீர்களோ இல்லையோ அது நமக்கு மேட்டரே இல்லை.... நீங்கள் வசதியாக இருந்தால் அள்ளி அள்ளி எங்கள் ஊழியத்துக்கு கொடுங்கள் அது எமக்கு போதும். அப்பொழுது ஆசீர்வாதம் இம்மையிலும் மறுமையிலும் கிடைக்கும்.... என்ற விதமாக விளம்பரம் செய்வதாக சிந்திக்கவாது முடிகிறதா? .... ஒருபோதும் முடியாது.

ஏழை வீட்டு சாப்பாடு ஒரு டேஸ்ட், பணக்கார வீட்டு சாப்பாடு ஒரு டேஸ்ட், ஆனா ஏழை வீட்டு பணத்திற்கும், பணக்காரன் வீட்டு பணத்திற்கும் டேஸ்ட் ஒரே மாதிரிதான். எனவேதான் இன்றைய போலி ஊழியர்கள் கொடுக்கிறவர்கள் யார் என்று பாராமல், கொடுக்கபடுவது என்ன என்று மட்டும் பார்க்கிறார்கள்.
                  ஆம் இன்றைய கிறிஸ்தவ உலகில் ஆட்டுத்தோலை மேற்தோற்றமாக மாட்டிகொண்டு அகத்திலோ யாரை பட்சிக்கலாம், யாருடைய பணத்தை எப்படி வாங்கலாம் என்ற ஓனாய்தந்துடன் தீவிரமாக செயல்படுகிறவர்கள் அதிகமாகிவிட்டார்கள்...

மேய்ப்பர்களின் கடமை

  பொருளாதாய பிரியத்துடன் ஜனங்களை வஞ்சிக்க முழு வீச்சுடன் செயல்படும் ஓ நாய் ரக ஊழியர்களை எல்லா விசுவாசிகளாலும் எளிதாக அடையாளம் கண்டுகொள்ள் முடியாது. அவர்கள் அப்பாவி ஆடுகள் . ஆனால் அந்த ஆடுகள் மேல் ஆத்மாபாரம் கொண்ட மேய்பர்கள்தான் இந்த அடையாளம் காட்டும் வேலைகளை செய்யவேண்டும்.

மேய்பன் புல்லுள்ள இடங்களில் மேய்த்து, அமர்ந்த தண்ணீரண்டையில் கொண்டு போய் தாகம் தீர்த்தால் மட்டும் போதாது, மந்தையை மேய்க்கும் பொறுப்பை ஏற்றுக்கொண்ட மேய்ப்பர்கள் ஆடுகளை பட்ச்சித்து அழிக்க வரும் ஓனாய்களிடமிருந்து அவர்களை பாதுகாக்கவும் வேண்டும், எனென்றால் இந்த ஓ நாய்கள் ஆட்டுத்தோல் போர்த்திகொண்டு வருகிறவைகள்! ஆடுகள் அவைகளின் உள் நிலைகளை அறிவது கடினம்! எனவே மேய்ப்பர்கள்தான் அவ்வித வெளிவேட ஓ நாய்களின் உண்மை நிலையை அறிந்து அவர்களின் தந்திரமான அணுகுமுறைகளின் அபாயங்களில் இருந்து தப்பித்துக்கொள்ள ஆடுகளுக்கு விழிப்புணர்வூட வேண்டும்.
ஆனால் இன்றைய பரிதாபம் என்னவென்றால் ஆடுகளை ஓனாய்களிடமிருந்து பாதுகாக்க வேண்டிய மேய்ப்பர்களே ஓனாய்களுக்கு உற்ற நண்பர்களாய் இருந்து அவர்களின் தந்திர திட்டங்களை தாங்குவதுதான். யாரை விழுங்கலாம் என்று சுற்றிதிரிகின்ற ஊழியர்களுக்கு உறுதுணையாய் இருப்பதை இவர்கள் அன்பு என்றும், ஐக்கியம் என்றும், ஒற்றுமை என்றும் பெயர் வைத்திருக்கிறார்கள். ஊழியத்தை ஓர் வியாபார நிறுவனம் போல எண்ணி, சகல தந்திரங்களையும் நிர்வாக திறமை என்று நினைத்து செயல்படுகிறவர்களோடு ஆடுகளை பாதுகாக்க வேண்டிய மேய்ப்பர்களே அந்நியோன்னியமாக இருப்பது ஆவிக்குரிய வேதனை.
  ஒரு சபை போதகர் என்பவர் தன் மந்தையை மாய்மாலக்காரரிடம் இருந்தும், தவறான உபதேசக்காரர்களிடமிருந்தும்,பொய் தீர்கதரிசிகளிடம் இருந்தும், சத்தியத்தின்படி ஊழியம் செய்யாதவர்களிடமிருந்தும் கவனமாக காக்கும் பொறுப்பை பெற்றவர். அந்த பொறுப்பை அவர் சரியாக செய்யாமல், ஓனாய்களுக்கெல்லாம் வழிவிடுவாராயின், பிரதான மேய்பருக்கு முன்பாக அவர் ஒரு நாள் கணக்கு கொடுக்கவேண்டும்......

No comments:

Post a Comment