Friday 8 March 2013

யார் தன்னை மாற்றிக்கொள்ள வேண்டும்? வேதத்தின்படி நாமா? அல்லது நமக்காக வேதமா?

யார் தன்னை மாற்றிக்கொள்ள வேண்டும்? வேதத்தின்படி நாமா? அல்லது நமக்காக வேதமா?
அந்த வசனம் இந்த காலத்துக்கு ஒத்து வராது. இந்த கட்டளையை இந்த பொருளாதாரச் சூழலில் கடைப்பிடிக்க முடியாது. இப்போதைய கலாச்சார சூழலுக்கு இந்த வேதவசனம் பொருந்தாது...

இப்படியே சொல்லிக்கொண்டு போவோமானால் இந்த நவீன கால பொருளாதார, கலாச்சார சூழலுக்காக ஒரு புதிய பைபிளையா ஆண்டவர் எழுதித்தரமுடியும்?

யார் தன்னை மாற்றிக்கொள்ள வேண்டும்? வேதத்தின்படி நாமா? அல்லது நமக்காக வேதமா?

இந்த சந்ததிக்கு வேதம் ஏற்புடையதாய் இல்லாமல் மாறுபட்டதாய் இருக்கிறது என்று நாம் சொல்லிக்கொண்டிருக்கிற வேளையில் வேதமோ நம்மை “மறுபாடுள்ள சந்ததியே” என்று அழைக்கிறது. காலத்தின் ஓட்டத்திலும், நாகரீக மற்றத்திலும் சிக்கி மாறுபட்டுப்போனது நாம்தான். வேதமோ வானமும் பூமியும் மாறினாலும் நான் மாறமாட்டேன் என்று கம்பீரமாய் தான் நின்ற இடத்திலேயேதான் நின்று கொண்டிருக்கிறது.

ஜாக்கிரதை!...அறிவியல் வளர்ச்சிகளும், நுனிநாக்கு ஆங்கிலங்களும், நவநாகரீக உடைகளும், அதிநவீன வாகனங்களும், சமூக அந்தஸ்துகளும், வசதிகளும் ஒருநாள் தகர்க்கப்பட்டுப்போகும். இவற்றை நிரந்தரமென்று நம்பி இவற்றை உடையைப்போல தரித்துக்கொண்டிருப்போமானால் இவை உரிக்கப்படும் நாளில் நிர்வாணிகளாய் நிற்கவேண்டியதிருக்கும். இவையும் ஆதாம் தைத்த அத்தியிலை உடையும் ஒன்று. "வார்த்தை" மாத்திரமே நிரந்தரமானவர். பவுலைப்போல கிறிஸ்துவை தரித்துக்கொண்டோமானால் நிர்வாணிகளாய் காணப்படமாட்டோம்.

நாம் வேதத்தை விட்டு தூரமாய் கடந்து வந்துவிட்டு எங்கோ ஓரிடத்தின் நின்று திரும்பிப்பார்த்து வேதம் என்னைவிட்டு தூரத்தில் இருக்கிறது என்கிறோம். யாராவது அதை என் அருகில் கொண்டுவந்து சேர்க்கமாட்டார்களா..என்று வாஞ்சிக்கிறோம்...வேதமோ ”180 டிகிரி turn அடித்து திரும்பிவா மகனே” என்றழைக்கிறது!

புதிய பாதையை வகுக்காதீர்கள்! பூர்வபாதைக்குத் திரும்புங்கள்...தன்னை மாற்றிக்கொள்ளாதவர்கள் தன்னை ஏமாற்றிக்கொள்ளுகிறார்கள்.

வழிகளிலே நின்று, பூர்வ பாதைகள் எவையென்று கேட்டு விசாரித்து, நல்லவழி எங்கே என்று பார்த்து, அதிலே நடவுங்கள்; அப்பொழுது உங்கள் ஆத்துமாவுக்கு இளைப்பாறுதல் கிடைக்கும் என்று கர்த்தர் சொல்லுகிறார்; (எரேமியா 6:16 )

No comments:

Post a Comment