Friday 8 March 2013

பரலோக ராஜ்யம் - அது நீதிமார்க்கம்

by Vijay Kumar on Tuesday, September 27, 2011 at 7:45pm ·
உம் அரசு வருக - பாகம் 2

ஆக்கியோன்:வாட்ச்மென்



டாடீ, அப்பா, என் செல்லம்... இதெல்லாம் இன்றைய புதிய கிறிஸ்தவப் பாடல்களிலும் சபை ஆராதனைகளிலும் ஆண்டவரைக் கொஞ்சும் வார்த்தைகள், நல்லதுதான், ஆனால் அந்த புத்திரசுவீகாரம் என்ன? என்பது உண்மையிலேயே அனுபவிக்கப்படுகிறதா? புரிந்து கொள்ளப்பட்டிருக்கிறதா? இல்லை, இவை உண்மையில் உணர்ச்சிகளைக் கிளறிவிடும் வார்த்தைகளாகவே இன்று பயன்படுத்தப்படுகின்றன. கர்த்தர் நம் இருதயங்களை ஆராய்ந்து அறிகிறவர், கொஞ்சல்கள் கெஞ்சல்களுக்கெல்லாம் மயங்குகிறவர் அல்ல.

நாம் அவரை ஆராதிக்கும் போது அவரை எப்படியெல்லாம் வருணிக்க முடியுமோ அல்லது என்ன நெருக்கமான உறவைச் சொல்லி அழைக்க முடியுமோ அப்படியெல்லாம் அவரை அழைக்கலாம் தப்பில்லை. அவரை திராட்சைரசம் பார்க்கிலும் இனிமையானவரே! என்று வாய் நிறைய அழைக்கலாம். ஆனால் “அந்தத் திராட்சைரசம்” கோப்பையில் பளபளப்பாய் தோன்றும்போது அதன்பால் இழுப்புண்டு போகிறோமா என்பதிலேதான் நாம் உதடுகளிலிருந்து துதிக்கிறோமா அல்லது உள்ளத்திலிருந்து துதிக்கிறோமா என்பது அம்பலமாகிறது. ஆயிரம் பேரிலும் பதினாயிரம் பேரிலும் சிறந்தவரே என்று அவரை வாயால் துதிப்பது மிக எளிது. ஆயிரம் பதினாயிரம் பேரை விட்டுத்தள்ளுங்கள், இயேசுவுக்கும் உங்களுக்கும் குறுக்கே நிற்க்கும் ”அந்த ஒரு நபரின் உறவை விட” இயேசு உங்களுக்கு சிறந்தவராயிருக்கிறாரா?

நமது இரட்டை வேடத்தை நமது அருகிலிருப்பவர் அறியாவிட்டாலும் நாம் உணரும் முப்பரிமாண உலகுக்கு அப்பால் உள்ள ஒளியின் ராஜ்ஜியமும், இருளின் ராஜ்ஜியமும் கூர்ந்து கவனிக்கிறது என்பது கசப்பான உண்மை.

ஒன்று தெரியுமா? ஆவிக்குரிய உலகங்களும், அதன் அதிகாரங்களும் மாயை அல்ல, நம்மைச் சுற்றியுள்ள நான்கு சுவர்தான் மாயை. உண்மையில் நாம் எங்கும் ஒளிந்து கொண்டிருக்கவில்லை, மாறாக நம் ஒவ்வொரு அசைவும் கவனிக்கவும். பதிவுசெய்யவும் படுகிறது. நாம் உதடுகளால் அவரை கனம் பண்ணிவிட்டு உள்ளத்தால் அவரை விட்டு தூரமாய் வாழ்கையில் தேவனுடைய இருதயம் துக்கப்படுகிறது, இருளின் அதிகாரங்கள் நம்மைப் பகடி செய்கின்றன. நமது மாமிசக் கண்கள் நான்காவது பரிமாணத்தைப் பார்க்க முடியாததால்தான் நம்மால் இந்த மாபெரும் அவமானத்தை உணரமுடிவதில்லை. ஆனால் ஆவிக்குரியவனின் கண்கள் பக்கத்தில் உள்ளவர்களையல்ல பரமதேசத்தையே நோக்கியிருக்கும் ஏனென்றால் அவன் அந்த ராஜ்யத்தின் குடிமகன்.

இயேசுவிடம் மாய்மாலங்களும் வாய்ச்சாலங்களும் செல்லாது. அவர் பூமியில் ஊழியம் செய்த நாட்களில் தம்மிடம் வினவியவர்களிடம் ஒரு உவமையைச் சொன்னார்: ஒருமனுஷனுக்கு இரண்டு குமாரர் இருந்தார்கள்; மூத்தவனிடத்தில் அவன் வந்து: மகனே, நீ போய் இன்றைக்கு என் திராட்சத்தோட்டத்தில் வேலைசெய் என்றான். அதற்கு அவன்: மாட்டேன் என்றான்; ஆகிலும், பின்பு அவன் மனஸ்தாபப்பட்டுப் போனான். இளையவனிடத்திலும் அவன் வந்து அப்படியே சொன்னான்; அதற்கு அவன்: போகிறேன் ஐயா, என்று சொல்லியும், போகவில்லை. இவ்விருவரில் எவன் தன் தகப்பனுடைய சித்தத்தின்படி செய்தவன் என்று கேட்டார்; அதற்கு அவர்கள்: மூத்தவன் தான் என்றார்கள். அப்பொழுது, இயேசு அவர்களை நோக்கி: ஆயக்காரரும் வேசிகளும் உங்களுக்கு முன்னே தேவனுடைய ராஜ்யத்தில் பிரவேசிக்கிறார்கள் என்று மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன் என்றார். (மத் 21: 28-31)

வேதம் முழுவதையும் வாசிக்கும்போது தேவராஜ்யம் என்பது பேச்சிலல்ல பெலத்தில் என்பதை தேவன் பல இடங்களில் ஆழமாக, அழுத்தமாக வலியுறுத்தியிருக்கிறார். அதைநாம் புரிந்து கொள்ள வேண்டும் என்றும் எதிர்பார்க்கிறார். அவர் நமது வாயின் வார்த்தைகளாலும் ஞாயிறு ஆராதனைகளிலும் திருப்திப்பட்டு விடுகிறார் என்று நினைத்தோமானால் நம்மை நாமே ஏமாற்றிக் கொள்ளுகிறோம் என்று பொருள். ஒருவேளை கைதட்டி, நடனமாடி, ஆக்‌ஷன் செய்து ஆராதனை நடத்துபவரை திருப்திப்படுத்தலாம், ஆராதனைக்குரியவரை திருப்திப்படுத்திவிட முடியாது. நாம் ஒருவரை மனதார நேசித்தோமானால் அவர் எதை அதிகம் விரும்புகிறார் என்பதை அறிவதில் அதிக கரிசனையாயிருப்போம். தேவனுடைய இருதயமானது பூமியில் ஒன்றை நிலைநாட்ட மிகுந்த வாஞ்சை கொண்டிருக்கிறது, அவர் உள்ளம் அதற்க்காக துடியாய்த் துடிக்கிறது. நம் கண்கள் அதைப் பார்ப்பதில்லை. பாபிலோன் தந்த கண்ணாடி வழியாக நாம் வேதத்தை வாசிப்பதால் நம் கண்களுக்கு ஆசீர்வாத வசனங்கள் மட்டுமே புலப்படுகின்றன.

தேவன் தேடும் அந்த உன்னதமான காரியம் எது?

”நீதி”

ஆம், பரலோக ராஜ்ஜியத்தையும் அதன் நீதியையும் பிரிக்க முடியாது. முதலாவது தேவனுடைய ராஜ்ஜியத்தையும் அதன் நீதியையும் தேடுங்கள் என்று இயேசு சொன்னதை பலர் “ஜெபியுங்கள், சபை ஆராதனைக்குச் செல்லுங்கள்” என்ற அர்த்தத்தில் மாத்திரம் எடுத்துக் கொள்ளுகிறார்கள். அல்லவே அல்ல அது அதை விட அதிகமானது, ஆழமானது அர்த்தம் மிகுந்தது. இயேசு எதற்காக பூமிக்கு வந்தார் என்று வேதம் சொல்லுவதைக் கவனியுங்கள்.

இதோ, நான் ஆதரிக்கிற என் தாசன், நான் தெரிந்துகொண்டவரும், என் ஆத்துமாவுக்குப் பிரியமானவரும் இவரே; என் ஆவியை அவர்மேல் அமரப்பண்ணினேன்; அவர் புறஜாதிகளுக்கு நியாயத்தை வெளிப்படுத்துவார். அவர் கூக்குரலிடவுமாட்டார், தம்முடைய சத்தத்தை உயர்த்தவும் அதை வீதியிலே கேட்கப்பண்ணவுமாட்டார்.அவர் நெரிந்த நாணலை முறியாமலும், மங்கியெரிகிற திரியை அணையாமலும், நியாயத்தை உண்மையாக வெளிப்படுத்துவார். அவர் நியாயத்தைப் பூமியிலே நிலைப்படுத்துமட்டும் இளக்கரிப்பதுமில்லை, பதறுவதுமில்லை; அவருடைய வேதத்துக்குத் தீவுகள் காத்திருக்கும். (ஏசா 42: 1-4).

பரலோக ராஜ்யத்தின் எதிரியான ”உலகம்” குறித்து வேதம் சொல்லுவது என்ன?

அது அநீதி நிறைந்த உலகம் (யாக் 3:6)

வேதத்தில் நீதி, நியாயம் மற்றும் அநீதி, அநியாயம் என்ற வார்த்தைகள் எத்தனை முறை வருகின்றன என்பதை ஒருவிசை ஆராய்ந்து பாருங்கள் நமக்கு சற்று அதிர்ச்சியாக இருக்கும். நீண்டகாலமாக நாம் மகா பிரதானமான ஒன்றை தியானிக்கவும், அப்பியாசிக்கவும் தவறவிட்டதை உணர்வோம். எனவேதான் பாபிலோன் தரும் கண்ணாடி கொண்டு வேதத்தை வாசிப்பது வீண் என்கிறேன்.

பரலோகம் பெண்களின் வயிற்றில் பிறந்தவர்களிலேயே மிகப் பெரிய மனிதனை பூமிக்கு எந்த மார்க்கமாக அனுப்பியது என்பதை சற்று தியானித்துப் பார்ப்போமா?.

யோவான் ”நீதிமார்க்கமாய்” உங்களிடத்தில் வந்திருந்தும், நீங்கள் அவனை விசுவாசிக்கவில்லை (மத் 21:32). இதன் அர்த்தம் என்ன? யோவான் என்ன பிரசங்கித்தான் என்பதை கவனித்தீர்களென்றால் உங்களுக்கு இது புரியும்.

அப்பொழுது ஜனங்கள் அவனை நோக்கி: அப்படியானால் நாங்கள் என்ன செய்யவேண்டும் என்று கேட்டார்கள். அவர்களுக்கு அவர் பிரதியுத்தரமாக: இரண்டு அங்கிகளையுடையவன் இல்லாதவனுக்குக் கொடுக்கக்கடவன்; ஆகாரத்தை உடையவனும் அப்படியே செய்யக்கடவன் என்றான்.

ஆயக்காரரும் ஞானஸ்நானம் பெறவந்து, அவனை நோக்கி: போதகரே, நாங்கள் என்ன செய்யவேண்டும் என்று கேட்டார்கள்.அதற்கு அவன்: உங்களுக்கு கட்டளையிட்டிருக்கிறதற்கு அதிகமாய் ஒன்றும் வாங்காதிருங்கள் என்றான். போர்ச்சேவகரும் அவனை நோக்கி: நாங்கள் என்ன செய்யவேண்டும் என்று கேட்டார்கள். அதற்கு அவன்: நீங்கள் ஒருவருக்கும் இடுக்கண்செய்யாமலும் பொய்யாய்க் குற்றஞ்சாட்டாமலும், உங்கள் சம்பளமே போதுமென்றும் இருங்கள் என்றான். (லூக்கா 3:10-14)

அநீதி நிறைந்த உலகத்துக்குள் நீதியைப் ஒருவன் பிரசங்கிப்பானானால் அது அவனை எத்தனை காலம் விட்டு வைத்திருக்கும் என்பது யோவானைப் பார்த்தாலே தெரியும். காரணம் நீதியைப் பிரசங்கிப்பது அவ்வளவு எளிதல்ல. யோவான் சொன்ன அதே வார்த்தைகளை நான் எழுதும்போது என் உள்ளம் என்னை ஆழமாய்க் குத்துகிறது. நான் மாறவேண்டிய காரியங்கள் எவ்வளவு இருக்கிறது என்று உணர்வடைகிறேன், உந்தப்படுகிறேன்.  வாழ்க்கையில் சில தீர்மானமான முடிவுகளை எடுத்தாகவேண்டிய கட்டாயத்துக்குள் தள்ளப்படுகிறேன். நாம் அனுதினமும் மனந்திரும்பவேண்டும், ஆவிக்குரிய வளர்ச்சியின் அடுத்தடுத்த படிகளுக்குள் செல்லவேண்டும்.

அநீதி நிறைந்த உலகம் “நீதிமார்க்கமான போதனையை” ஒருபோதும் ஏற்றுக்கொள்ளாது, ஆனால் இதே சூழ்நிலை இன்று கிறிஸ்தவத்திலும் காணப்படுவதே கடைசிகாலத்தின் மாபெரும் அடையாளமாகும். யோவான் ஸ்னானனின் நீதிபோதனை இன்று எத்தனை சபைகளில் காணப்படுகிறது? பரலோக ராஜ்ஜியத்தின் நீதியைப் போதிக்கும் சபைக் கூட்டங்களில் இன்று வெறும் பத்துப்பேர் பதினைந்துபேர் அமர்ந்திருக்கிறார்கள். ஆனால் உலக ஆசீர்வாதங்களைப் போதிக்கும் சபைகளிலோ ஜனக்கூட்டம் அலை மோதுகிறது. இதிலிருந்து தெரிகிறதா எது பாபிலோன் எது பரலோக ராஜ்யமென்று?

கடைசிநாட்களில் ”உலகத்தின்” மனுஷர் தற்பிரியராயும், பணப்பிரியராயும் இருப்பார்கள் அப்படிப்பட்டவர்களிடம் பரலோக ராஜ்ஜியதின் நீதி எடுபடாது. அவர்களுக்கு யோவான் ஸ்னானனைப் போல ஒருவன் போதித்தால் அது அவர்களுக்குக் கசப்பாயிருக்கும். “நீ போய் முதலாவது உன்னைத் திருத்திக்கொள்” என்பார்கள், முதலாவது நீ இதைச் செய்கிறாயா? எங்களுக்கு ஏன் போதிக்கிறாய்? என்பார்கள். போதிப்பவன் முதலாவது செய்யவேண்டும் என்பது சரிதான் அது அதிமுக்கியமும் கூட. ஆனால் இப்படிக் கொதிப்பவர்கள் போதிக்கிறவனைத் திருத்துவதற்க்கல்ல நிறுத்துவதற்கே அப்படிச் சொல்லுகிறார்கள். ஆனால் போதிக்கிறவன் தன் வாழ்க்கையில் அதைச் செய்யத் தொடங்கியிராவிட்டால் அவன் அவிசுவாசியிலும் கெட்டவனாயிருப்பான்.

ஆசீர்வாதத்தைப் போதிக்கும் யாரிடமும் யாரும் இப்படிக் கேட்பதில்லை, நீ சொல்லும் இந்த வாக்குத்ததங்களையெல்லாம் நீ முதலாவது சுந்தந்தரித்திருக்கிறாயா? முதலாவது நீ பெற்றுக்கொண்டு பின்பு வந்து எங்களுக்குக் கொடு என்று யாரும் சொல்வதில்லை. நடக்கிறதோ இல்லையோ இப்படிப்பட்ட பிரசங்கங்கள் மக்களுக்கு ஓப்பியம் போல ஒரு போதை தருகிறது எனவேதான் இப்படிப்பட்ட பிரசங்கிகள் இன்று பெருகியிருக்கிறார்கள்.

பரலோகராஜ்யத்துக்குப் பெயர் நீதிமார்க்கம், நம் பெயர் நீதிமான்கள், நம் அவயவங்கள் நீதியின் ஆயுதங்கள், அவர் நம்மை நடத்தும் பாதை நீதியின் பாதை (சங் 23:3), நமது ஆராதனைக்குப் பெயர் நீதியின் பலி(சங் 51:19), பரலோக ராஜ்யத்தின் ஊழியனுக்குப் பெயர் நீதியின் ஊழியன் (2 கொரி 11:15 ), நமக்கு வரவேண்டிய பசிதாகம் நீதியின் மீது (மத் 5:6), நமக்கு இன்னொரு பெயர் நீதியின் விருட்சங்கள் (ஏசா 61:3), நாம் கொடுக்க வேண்டிய கனி நீதியின் கனி (பிலி 1:10), நாம் அணியப்போகும் கிரீடம் நீதியின் கிரீடம் (2 தீமோ 4:8).

எல்லாவற்றிற்க்கும் மேலாக நாம் சபையாகக் கூடிவருகையில் நமக்குப் பெயர் நீதியின் வாசஸ்தலம் (எரே 31:23) எனவே இங்கு பொருளாதாரநீதி, சமூகநீதி, அரசியல்நீதி எல்லாம் அடக்கம். அவை ஒவ்வொன்றாகப் பார்க்கலாம்.

பொருளாதார நீதி:
பணம் இருப்பவன் எல்லாம் இருப்பவன், பணமில்லாதவன் இழிபிறவி, இதுதான் இந்த உலகத்தின் (அ)நீதி. ஆனால் பரலோக ராஜ்யம் அதற்கு நேர் எதிரானது. பணத்துக்கு இங்கே துளியும் மதிப்பில்லை. ஆதித்திருச்சபை மெய்யான பரலோக ராஜ்யமாக இருந்தபடியால்தான் விசுவாசிகள் அன்று பொருளாதார விஷயத்தில் உலகம் கண்டிராத முடிவை எடுத்தார்கள். சமநிலைப் பிரமாணம் போதிக்கப்பட்டது, பின்பற்றப்பட்டது. ஏழை பணக்காரன் என்ற அநீதி மாறியது. ஆனால் இன்று? சமநிலைப்பிரமாணம் என்றால் என்ன என்பது இன்று எத்தனை விசுவாசிகளுக்குத் தெரியும்? பொருளாதார நீதி என்றால் கிலோ என்ன விலை என்று கேட்கும் ஒரு அமைப்பை சபை என்று சொன்னால் அதை எப்படி நம்புவது?

இந்த உலகத்தில் ஏழைகள் மதிக்கப்படும் ஒரே இடம் சபைதான், இந்த அனுபவம் இல்லாவிட்டால் அந்த சபை உடனடியாகத் திருந்த வேண்டும். பொன்மோதிரமும் மினுக்குள்ள வஸ்திரமும் தரித்திருக்கிற ஒருமனுஷனும், கந்தையான வஸ்திரம் தரித்திருக்கிற ஒரு தரித்திரனும் உங்கள் ஆலயத்தில் வரும்போது,மினுக்குள்ள வஸ்திரந்தரித்தவனைக் கண்ணோக்கி: நீர் இந்த நல்ல இடத்தில் உட்காரும் என்றும்; தரித்திரனைப் பார்த்து: நீ அங்கே நில்லு, அல்லது இங்கே என் பாதபடியண்டையிலே உட்காரு என்றும் நீங்கள் சொன்னால், உங்களுக்குள்ளே பேதகம்பண்ணி, தகாத சிந்தனைகளோடே நிதானிக்கிறவர்களாயிருப்பீர்களல்லவா? (யாக் 2:2-4)

சமூகநீதி:
அநீதி நிறைந்த இந்த உலகத்தில் ஜனங்கள் இனம், மொழி, மதம் என்று பிரிந்து கிடக்கிறார்கள். எங்கும் பகை, எதிலும் குழப்பம். ஆனால் கிறிஸ்து நம்மை ஒரே சரீரமாக்கினார். இனி யூதனென்றும், கிரேக்கனென்றும், அடிமையென்றும், சுயாதீனனென்றும், ஆணென்றும், பெண்ணென்றும் இல்லை. தெய்வத்தின் திருக்குமாரனான இயேசு பாவச்சாக்கடையில் உழலும் நம்மை மீட்டு, சுத்திகரித்து தன் மணவாட்டியாக நியமித்துக் கொண்டார். ஆனால் பாவச்சாக்கடைக்குள் வாழும் ஒரு மனிதன் அதே சாக்கடையில் வாழும் மற்றவனை தாழ்ந்தவன் என்று எண்ணி அருவெறுத்து அவன் வீட்டில் திருமண உறவு கொள்வதில்லை. இது சபைகளுக்குள்ளும் காணப்படுகிறது. இப்படிப்பட்டவர்கள் விசுவாசிகளும் இல்லை, இவர்கள் இருப்பது சபையும் இல்லை. எங்கே ஜாதி இருக்கிறதோ அங்கே இயேசு இல்லை, எங்கே இயேசு இருக்கிறாரோ அங்கே ஜாதி நுழைவதில்லை.

அரசியல்நீதி:
பரலோக ராஜ்யத்தின் ராஜா தம்மைத்தாம் வெறுமையாக்கி அடிமையின் ரூபம் எடுத்தார் என்பதுதான் பரலோக ராஜ்யத்தின் மகா மேன்மையான அம்சம். பரலோக ராஜ்யத்தில் தலைவர்களாக விரும்புகிறவர்களும் அப்படியே இருக்க வேண்டும் என்பதே இங்கு ராஜாவின் சட்டம்.

புறஜாதியாருடைய அதிகாரிகள் அவர்களை இறுமாப்பாய் ஆளுகிறார்கள் என்றும், பெரியவர்கள் அவர்கள் மேல் கடினமாய் அதிகாரஞ்செலுத்துகிறார்கள் என்றும், நீங்கள் அறிந்திருக்கிறீர்கள். உங்களுக்குள்ளே அப்படி இருக்கலாகாது; உங்களில் எவனாகிலும் பெரியவனாயிருக்க விரும்பினால், அவன் உங்களுக்குப் பணிவிடைக்காரனாயிருக்கக்கடவன். உங்களில் எவனாகிலும் முதன்மையானவனாயிருக்க விரும்பினால், அவன் உங்களுக்கு ஊழியக்காரனாயிருக்கக்கடவன். (மத் 20:25-27)

இந்தக் காரியங்கள் போதிக்கப்படாத, பின்பற்றப்படாத இடங்களை கிறிஸ்துவின் சரீரமாகிய சபை என்று என்னால் ஏற்றுக்கொள்ள முடியாது. இவை பாபிலோன். ஆவிக்குரிய வேசி!

என் ஜனங்களே, நீங்கள் அவளுடைய பாவங்களுக்கு உடன்படாமலும், அவளுக்கு நேரிடும் வாதைகளில் அகப்படாமலும் இருக்கும்படிக்கு அவளைவிட்டு வெளியே வாருங்கள் (வெளி 18:4). மெய்யான பரலோக ராஜ்யத்தை அணைத்துக் கொள்ளுங்கள். நியாயம் தண்ணீரைப்போலவும், நீதி வற்றாத நதியைப்போலவும் புரண்டுவருவதாக(ஆமோஸ் 5:24 ). ஆம் கர்த்தாவே உம்முடைய ராஜ்யம் வருவதாக!

No comments:

Post a Comment