Tuesday, 14 January 2014

நண்பர்களே நீங்கள் ஒன்றுப்பட்டு கடத்தப்படும் குழந்தைகளுக்காய் குரல் கொடுங்கள்

தீவிரவாதத் தடுப்புக்கு என அளிக்கும் முக்கியத்துவம், குழந்தைகள் கடத்தல் தடுப்புக்கும் அளிக்கப்பட வேண்டும். நாட்டின் வளம் இப்படியும் கொள்ளைபோகிறது; இதைத் தடுத்தாக வேண்டியது அவசர அவசியம்.]
போதைப் பொருள் கடத்தல், ஆயுதங்கள் கடத்தல் ஆகியவற்றுக்கு அடுத்தபடியாக, உலகில் லாபகரமாக (?!) நடக்கும் 3-வது மிகப் பெரிய சட்டவிரோதத் தொழில் "குழந்தைகள் கடத்தல்'' என்பது அதிர்ச்சியளிக்கும் விஷயம். உலக அளவில் ஆண்டுக்கு 7 லட்சம் முதல் 35 லட்சம் பேர் வரை கடத்தப்படுகின்றனர் என்கிறது கணக்கெடுப்பு ஒன்று.
அதிலும், குழந்தைகள் கடத்தலுக்கான பிரதான இலக்கு இந்தியாவும், பாகிஸ்தானும். எல்லையில் ஊடுருவும் தீவிரவாதிகளும்; எல்லையைக் கடக்கும் குழந்தைகளும் இங்கு அதிகம்.
நம் நாட்டில் மொத்தம் உள்ள சுமார் 28 லட்சம் பாலியல் தொழிலாளர்களில் 25 சதவீதம் பேர் 18 வயதுக்கும் குறைவானவர்கள்; சிறுவர்கள். குடும்ப வறுமையால் இத்தொழிலில் ஈடுபடும் அல்லது ஈடுபடுத்தப்படும் குழந்தைகள் அதிகம் பேர் உண்டு. இவர்களுக்கு இணையாக, கடத்தப்பட்ட குழந்தைகளும் உள்ளனர் என்கிறது அந்த கணக்கெடுப்பு.
பிச்சை எடுக்க, தீவிரவாதத்தில் ஈடுபடுத்த, உடல் உறுப்புகளுக்காக, பாலியல் தொழிலுக்காக குழந்தைகள் கடத்தப்படுகின்றனர். பெண் சிசுக்கொலை, பாலியல் தொழிலுக்காகக் கடத்தப்படுவது என அதிகம் பாதிக்கப்படுவது பெண் சமுதாயம். இதனால், ஆண்-பெண் விகிதங்களில் ஏற்படும் மாற்றம், சமுதாயத்தின் போக்கை ஏற்கெனவே மாற்றியமைக்கத் தொடங்கிவிட்டது.
இதன் அடுத்த முகத்தை அண்மையில் காட்டியது "தத்து மையங்களில் இருந்து குழந்தைகள் விற்பனை' எனும் செய்தி. பேசும் திறனற்ற பிஞ்சுக் குழந்தைகள் விற்பனை செய்யப்பட்ட சம்பவம், தத்து மையங்களைக் கண்காணிப்பதில் அரசு கோட்டைவிட்டதை வெளிக்கொண்டு வந்தது.
ஒரு மாவட்டத்தில் எத்தனை தத்து மையங்கள் செயல்படுகின்றன? அவற்றில் எவை அரசு அங்கீகாரம் பெற்ற தத்து மையங்கள்? என்பதைக் கண்காணிக்கத் தவறியதன் விளைவை அரசு நன்கு உணர்ந்து கொண்டது. தற்போது தத்து மையங்கள், அரசின் கண்காணிப்பில் இருப்பதாகக் கூறப்படுகிறது.
"பணத்துக்காக பள்ளிச் சிறுவன் கடத்திக் கொலை' எனும் சம்பவங்களும் தற்போது அதிகரிக்கத் தொடங்கிவிட்டன. பணத்துக்காக கடத்தப்படும், விற்பனை செய்யப்படும் சிறார்களின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதில் ஆண், பெண் என எவ்விதப் பாகுபாடுமின்றி, குழந்தைகளைக் கடத்திச் சென்று, பணம் கேட்டு பெற்றோரை மிரட்டுகின்றனர்.
"தமிழக மக்கள் தொகையில் 35 சதவீதம் பேர் குழந்தைகள். இவர்களில் தினசரி நூற்றுக் கணக்கானோர் காணாமல்போவதாக புகார் வருகிறது. இவர்களில் பலர் திரும்பக் கிடைப்பதே இல்லை' எனக் குறிப்பிடுகிறது தமிழக அரசின் "மிஸ்ஸிங் சைல்டு பீரோ' அமைப்பு.
பெண்கள், குழந்தைகள் கடத்தப்படுவதைத் தடுக்க மாநில அளவிலான ஒருங்கிணைப்புக் குழுவை அமைத்துள்ளது தமிழக அரசு. அதேபோல, மாவட்ட அளவிலான ஆலோசனைக் குழுக்களும் செயல்படுகின்றன. மாநில, மாவட்ட அளவிலான அதிகாரிகள் கூடுவதும், ஆலோசனை நடத்துவதுமாகக் கலைகின்றனர். ஆக்கப்பூர்வமான பணிகளைச் செய்யத் தவறியதன் விளைவு, குழந்தைகள் கடத்தப்படுவது நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
ஒருங்கிணைப்புக் குழுவினர் இடையே போதிய ஒருங்கிணைப்பு இல்லாதது, இத்திட்டத்தின் தோல்விக்கு மிக முக்கியக் காரணமாகக் கருதப்படுகிறது. குழந்தைக் கடத்தல் தொடர்பாகத் தகவல் தெரிவிக்க இலவச தொலைபேசி எண்.1098 அதுபற்றிய விவரம் எத்தனை பேருக்குத் தெரிந்திருக்கிறது? குறிப்பாக குழந்தைகளுக்கு.
இதில் குறிப்பிடப்பட வேண்டிய மற்றொரு தவறு, பெற்றோர் மற்றும் பள்ளிகளின் தரப்பில் ஏற்படுகிறது. சரியானபடி நடக்கவில்லை என்பதற்காக பெற்றோர், ஆசிரியர்களின் தண்டனைக்குப் பயந்து ஓடிப்போன குழந்தைகள் எண்ணிக்கையும் அதிகம். குழந்தைகள் தங்களிடமிருந்து விலகிச் செல்லாத சூழலை பெற்றோரும், கல்வி நிறுவனங்களும் உருவாக்கத் தவறியதன் விளைவு, காணாமல்போன குழந்தையைத் தேடி அலைய வேண்டிய சூழலை உருவாக்குகிறது.
இதுதொடர்பாக, மக்களிடம் போதிய விழிப்புணர்வு ஏற்படுத்துவதன் மூலம் பெண்கள், குழந்தைகள் கடத்தலைக் கட்டுப்படுத்த முடியும். தற்போது மாவட்ட அளவில் குழு இருந்தாலும், ஒவ்வொரு கிராம ஊராட்சி அளவிலான குழுவாக அதை மாற்றி, குழந்தைகள் கடத்தப்படுவது தொடர்பான விழிப்புணர்வை பட்டிதொட்டிகளுக்கும் பரவச் செய்யலாம்.
அதேபோல, காணாமல்போன, கடத்தப்பட்ட சிறுவர்கள் பற்றிய அறிவிப்பை வெளியிடும் ஊடகங்கள், பெண்கள், குழந்தைகள் கடத்தலுக்கு எதிரான விழிப்புணர்வுப் பிரசாரங்களுக்கு அதிக முக்கியத்துவம் தருவதில்லை.
குழந்தைகள் நாடாளுமன்றம் அமைக்கும் பல தொண்டு நிறுவனங்கள், அவர்களுக்குள் பொதிந்து கிடக்கும் பல குமுறல்களை வெளிக்கொணர்ந்துள்ளன. இவற்றை ஆக்கபூர்வமான வழியில் பயன்படுத்த அரசு தவறிவிட்டது.
தமிழகத்தில் சிலை கடத்தல், விபசாரத் தடுப்பு, திருட்டு விசிடி தடுப்பு போன்றவற்றுக்குத் தனிப்பிரிவு கொண்டிருக்கும் தமிழக காவல்துறை "குழந்தைகள் கடத்தல் தடுப்புப் பிரிவு' எனத் தனிப் பிரிவு தொடங்கவும் முன் வர வேண்டும்.
இதுதவிர, குழந்தைத் தொழிலாளர் முறையை முற்றிலும் அகற்றுவோம் எனும் குறிக்கோளுடன் கோடிக்கணக்கான ரூபாய் நிதியை ஒதுக்கிடும் மத்திய, மாநில அரசுகள், குழந்தைகள் கடத்தலைத் தடுக்கவும் முக்கியத்துவம் தர வேண்டும். இல்லையெனில், தொலையும் குழந்தைகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரிப்பதை எவராலும் தடுக்க முடியாமல் போகும்.
எதிர்காலச் சந்ததியினரின் வாழ்க்கையைக் கேள்விக்குறியாக்கும் கடத்தல் சம்பவங்களை இரும்புக்கரம் கொண்டு ஒடுக்குவது அவசியம். சட்டத்தைக் கடுமையாக்கினாலும் தவறில்லை.
தீவிரவாதத் தடுப்புக்கு என அளிக்கும் முக்கியத்துவம், குழந்தைகள் கடத்தல் தடுப்புக்கும் அளிக்கப்பட வேண்டும். நாட்டின் வளம் இப்படியும் கொள்ளைபோகிறது; இதைத் தடுத்தாக வேண்டியது அவசர அவசியம். நன்றி தினமனி.

No comments:

Post a Comment