Monday, 13 May 2013


படுகுழிக்குள் தள்ளும் போலி கிருபை


கிறிஸ்தவத்துக்கும் பிற மார்க்கங்களுக்கும் உள்ள மாபெரும் வேற்றுமை என்னவென்றால் அது “கிருபையால் உண்டாகும் தேவநீதி” என்ற அடிப்படை சத்தியமே ஆகும். கிருபையின்றி சபையில்லை, நம்மை அழைத்த சுவிசேஷம் “கிருபையின் சுவிசேஷம்” (அப் 20:24), நாம் பெற்றிருக்கும் ஆவி “கிருபையின் ஆவி” (எபி 10:29).
கிருபையைப் பற்றிக்கொள்ளாமல் சுயநீதியைப் பற்றிக்கொண்டதுதான் இன்றைய திருச்சபையின் தோல்விக்கு மிக முக்கிய காரணம். இந்த வஞ்சகம் இன்று நேற்றல்ல முதல் நூற்றாண்டிலேயே சபையை கவிழ்க்கப் பார்த்தது. சபையை கிருபையிலிருந்து மீண்டும் நியாயப்பிரமாணத்துக்குள் இழுத்துவர சத்துரு எடுத்த முயற்சிகளையும் அதை எதிர்த்து ஆதி அப்போஸ்தலர்கள் கடுமையாகப் போராடியதையும் நாம் வேதத்தின் வாயிலாக அறிவோம். காரணம் கிருபையை இழந்துவிட்டால் சபைக்கு எதிர்காலமில்லை. குறைவுள்ள நியாயப்பிரமாணம் செய்யும் ஒரே (நல்ல) வேலை நம்மை கிருபையினிடத்தில் நடத்துவது (கலாத்தியர் 3:24 ). கிருபையோ, நாம் அதில் நிலைத்திருக்கும்போது நம்மை கிறிஸ்துவின் சாயலுக்கு ஒப்பான பூரண புருஷராய் மாற்றுகிறது. இதுவே தேவனுடைய பரியூரண திட்டம்.
நியாயப்பிரமாணத்தை ஒழுங்காக பின்பற்றியவனுக்குத்தான் கிருபையின் மேன்மை தெரியும். ஆனால் அன்றைய பரிசேயர்களும் வேதபாரகர்களும் இரக்கத்தையும் நீதியையும் விட்டுவிட்டு நியாயப்பிரமாணத்தை புரட்டி போதித்ததால்தான் அன்று கிறிஸ்துவை அவர்களால் கண்டுகொள்ள முடியவில்லை, அவரை சிலுவையிலும் அறைந்தார்கள். கிருபைக்குள் நடத்தாத நியாயபிரமாண போதகம் எப்படி வஞ்சகமானதோ அப்படியே கிறிஸ்துவின் சாயலுக்கு ஒப்பாக மாற்றாத கிருபையின் உபதேசமும் வஞ்சனையானது.
கிருபைக்கு நேராய் நடத்தாத நியாயப்பிரமாண போதகம் மனிதனை மார்க்கவெறிக்குள்ளும், மூடத்தனத்துக்குள்ளும் வழிநடத்துவதைப்போல. கிறிஸ்துவின் சாயலுக்கு ஒப்பாக மாற்றாத (போலியான) கிருபையின் உபதேசமும் மனிதனை “அறிவின் பெருமைக்குள்ளும், ஆணவத்துக்குள்ளும், துணிகரமான பாவங்களுக்குள்ளும்” நடத்தும். சபையை கிருபைக்குள் வழிநடத்தாமல் பிரமாணத்துக்குள் நடத்துவது எத்துணை ஆபத்தானதோ, அத்துணை ஆபத்தானது சபையை இந்த “ஆபத்தான (போலி) கிருபையின் உபதேசத்துக்குள்” நடத்துவதுமாகும்.
இன்று இந்த புரட்டு உபதேசம் உலகம் முழுவதும் வேகமாகப் பரவிவருகிறது. இந்தக் கட்டுரையில் ஒரு குறிப்பிட்ட பிரசங்கியாரின் உபதேசத்தை ஆராய்வோம். இந்த போதகர் மீது எங்களுக்கு எந்த தனிப்பட்ட பிரச்சனையும் இல்லை. சொல்லப்போனால் கிருபையால் உண்டாகும் நீதியைக் குறித்து பல சில இடங்களில் மிக நேர்த்தியாகவும் சரியாகவும் பேசியிருக்கிறார். ஆனால் ஒட்டுமொத்தமாய் பார்த்தால் இந்த (போலி) கிருபை உபதேசம் ஒரு குவளை பாலில் ஒரு துளி ஆலகால விஷம் போன்றது. அந்த விஷம் என்னவென்றால் சத்தியத்தின் ஒருபக்கத்தை மட்டும் காட்டி ஜனங்களை வஞ்சிப்பது, தேவன் அவருடைய தயவை மட்டும் நோக்கிப்பார்க்கச் சொல்லவில்லை அப்படிப்பார்த்தால் அதை பாவம் செய்வதற்கான லைசன்சாக எடுத்துக்கொள்வோம், அல்லது அவரது கண்டிப்பை மட்டும் நோக்கிப்பார்க்கச் சொல்லவில்லை அப்படிச் செய்தால் குற்றமனசாட்சியிலேயே தேவசமூகத்தை விட்டே ஆதாமைப்போல ஓடிவிடுவோம்
ஆகையால், தேவனுடைய தயவையும் கண்டிப்பையும் பார் (ரோமர் 11:22 )
இந்த செய்தி யூடியூப் தளத்தில் காணக்கிடைப்பதால் இதைப் பயன்படுத்தி இந்தப் போதகத்தில் இருக்கும் பிழைகளை வெளிக்கொணர்கிறோம். இந்தப் போதகர் சார்பிலிருந்து மறுப்பு தெரிவித்து விளக்கம் தரப்படுமானால் அது வரவேற்கப்படுகிறது.

No comments:

Post a Comment