Tuesday 7 May 2013

அந்நியபாஷை பேசுவதைக் குறித்த தெளிவான சத்தியங்கள்! - சகரியா பூணன்

அந்நியபாஷை பேசுவதைக் குறித்த தெளிவான சத்தியங்கள்! - சகரியா பூணன்
நன்மையான எந்த ஈவும், பூரணமான எந்த வரமும் பரத்திலிருந்து உண்டாகி, ஜோதிகளின் பிதாவினிடத்திலிருந்து இறங்கி வருகிறது. அவரிடத்தில் யாதொரு மாறுதலும், வேற்றுமை நிழலும் இல்லை" என யாக்கோபு 1:17 -ல் கூறுவதை நாம் யாவரும் அறிந்திருக்கிறோம்.

தேவன் ஒருபோதும் தவறு செய்வதேயில்லை! அவர் ஒன்றை கொடுத்தால் அது "பூரணவரமாய்த்தான்" (Perfect Gift)) எப்போதும் இருக்கும். இந்த அவருடைய குணாதிசயங்கள் என்றென்றும் நிலைத்திருக்கும், அதில் அவர் மாறுவதில்லை என யாக்கோபு கூறினார். ஆகவே, பெந்தெகொஸ்தே நாளில் தேவன் சபைக்கு "அந்நியபாஷை பேசும் வரத்தை" (Tongues) அளித்தபோது, தான் சபைக்கு செய்திருக்கும் செயலை நன்கு அறிந்திருந்திருந்தார்."இப்படி இந்த வரத்தைத் தந்துவிட்டோமே! "என சிந்தித்து அவர் தன்னுடைய மனதை மாற்றிக்கொள்ளவேயில்லை! ஆம், அவர் என்றென்றும் மாறாதவராகவே இருக்கிறார். ஆகவே, அந்நியபாஷைவரம் திட்டமும் தெளிவுமான "பூரணமான வரமேயாகும்!".

இந்தவரத்தின் பின்னணியில், அதுவும் குறிப்பாக நாம் வாழும் இந்த இருபதாம் நூற்றாண்டில் ஏராளமான குளறுபடிகள் இவ்வரத்தினிமித்தம் உண்டாகும் என்பது தேவனுக்கு நன்றாகத் தெரியும். இருப்பினும், சபை தன்னுடைய ஊழியத்தை நிறைவேற்றுவதற்கு இந்த வரம் மிக தேவையானது என்பதையும் தேவன் அறிந்திருந்தார்.

பிரதான சத்தியங்களாகிய திரித்துவம், கிறிஸ்துவின் தெய்வத்தன்மை, கிறிஸ்துவின் மனிததன்மை, பரிசுத்தாவியின் ஆள்தன்மை... போன்ற சத்தியங்கள் கிறிஸ்துவ சரித்திரத்தில் பலவிதத்தில் எதிர்க்கப்பட்டு குளறுபடிகளைச் சந்தித்திருக்கிறது. ஆகவே, தேவன் தந்த வரமாகிய "நவ நாவுகளும்" (Tongues)குளறுபடியாகிருப்பது, எந்த ஆச்சரியத்தையும் நமக்குத் தந்துவிட நாம் அனுமதிக்கவே கூடாது.

இது போன்ற எல்லா உபதேச சத்தியங்களிலும், அவைகளை குறித்து வேதாகமம் என்ன சொல்லுகிறது என்பதில் மிகுந்த கவனம் செலுத்துவதே மிக முக்கியமானதாகும். ஆகவே," அந்நியபாஷை பேசுவதைக்குறித்து" இதுவரை நீங்கள் கொண்டிருந்த மனப்பான்மையை சற்று தள்ளி வைத்துவிட்டு, இதைக்குறித்து வேதாகமம் சொல்லும் ஒவ்வொரு வசனத்தையும் மிகுந்த கவனமாய் இப்போது பார்க்கக்கடவோம்.

சத்தியம் எண்:-1

மாற்கு 16:17 - ஆம் வசனத்தில் இயேசு கூறும்போது, "விசுவசிக்கிறவர்களால் நடக்கும் அடையாளங்களாவன: என் நாமத்தினாலே பிசாசுகளை துரத்துவார்கள்; நவமான பாஷைகளைப் பேசுவார்கள்; வியாதியஸ்தர்கள்மேல் கைகளை வைப்பார்கள் அப்பொழுது அவர்கள் சொஸ்தமாவார்கள்" என கூறினார்.

இவ் வசனத்தில் இயேசு குறிப்பிட்டது என்னவென்றால், "சில அடையாளங்கள் விசுவாசிக்கிறவர்களால்- (Those who have belived ) நடைபெறும்" என்பதுதான். இவ்வாறு நடைபெறும் பிசாசுகளைத் துரத்துதல், வியாதியஸ்தர்களை சொஸ்தமாக்குதல் போன்ற அடையாளங்களில் நவமானபாஷைகளை (New Tongues) பேசுவதும் ஒன்றாகும். இங்கு இயேசு குறிப்பிடும்போது, இந்த எல்லா அடையாளங்களும் ஒவ்வொரு விசுவாசியினிடத்திலும் - (Every Believer) நடைபெறும் எனக் கூறவேயில்லை. அதற்கு மாறாக, இந்த அடையாளங்கள் "விசுவாசிக்கிறவர்களால்" நடைபெறும் என்றே கூறினார்.

ஆகவே,இங்கு குறிப்பிடப்பட்ட எல்லா வரங்களையும் ஒவ்வொரு விசுவாசியும் பெற்றிருக்க வேண்டுமென்பது அவசியமில்லை. அதேப்போல், ஒவ்வொரு சபையும் இந்த எல்லா வரங்களையும் பெற்றிருக்க வேண்டியதும் அவசியமில்லை. ஆனால், இந்த வரங்கள் யாவும் "உலகம் தழுவிய" முழு சபையிலும் காணப்படும் என்பது உறுதி! எந்த வரத்தை யாருக்கு தரவேண்டும் என்பதை பரிசுத்த ஆவியானவரே தம்முடைய சர்வ ஞானத்தின்படி தீர்மானிக்கிறார்.

சத்தியம் எண்:- 2

அவர்கள் எல்லாரும் பரிசுத்த ஆவியினாலே நிரப்பட்டு, ஆவியானவர் தங்களுக்குத் தந்தருளின வரத்தின்படியே வெவ்வேறு பாஷைகளிலே பேசத்தொடங்கினார்கள்... எல்லோரும் பிரமித்து ஆச்சரியப்பட்டு, ஒருவரையொருவர் பார்த்து.. நாம் நம்முடைய பாஷைகளிலே இவர்கள் தேவனுடைய மகத்துவங்களைப் பேசக் கேட்கிறோமே என்றார்கள்" என அப்போஸ்தலர்கள் நடபடிகள் 2:4,7,11 -ஆம் வசனங்களில் காண்கிறோம்.

முதல் தடவையாய் விசுவாசிகள் பரிசுத்த ஆவியினால் நிரப்பப்பட்டபோது, அவர்கள் "எல்லோரும்" (All) நவமான பாஷைகளைப் பேசினார்கள். இங்கு குறிப்பிடப்பட்ட நவமான பாஷைகள்- (New Tongues) அதைக்கேட்ட மற்றவர்கள் புரிந்துகொள்ளக் கூடிய வெவ்வேறு மொழிகளாகவே (Languages) இருந்தது. ஆகவே, இந்த இடத்தில் "வியாக்கியானம் செய்யும் வரம்" அவசியமாய் இருக்கவில்லை.

நான்காம் வசனத்தில் "அவர்களெல்லோரும்... வெவ்வேறு பாஷைகளிலே பேசத் தொடங்கினார்கள்" என குறிப்பிடப் பட்டிருப்பதைப் பாருங்கள். அதாவது "அவர்கள்தான்" அந்நியபாஷைகளில் பேசத் தொடங்கினார்கள்... பரிசுத்த ஆவியானவர் அல்ல! ஆம், பரிசுத்த ஆவி அவர்களுடைய நாக்குகளைப் பிடித்து அசைக்கவில்லை! அதற்கு மாறாக, ஆவியானவர் வரத்தைத் தந்தருள... "அவர்கள்" வெவ்வேறு பாஷைகளில் பேசத்தொடங்கினார்கள்.

எந்த வரத்திலும், "தெரிந்து கொள்ளும் சுயாதீனத்தை" பரிசுத்த ஆவியானவர் நம்மிடமிருந்து எடுத்துக் கொள்வதேயில்லை. இன்னமும் சொல்லப் போனால் ஆவியின் கனியானது "சுய அடக்கமே (Self Control) (கலாத்தியர் 5:23) ஆகும். தமிழில் இச்சையடக்கம் எனக் கூறப்பட்டிருப்பது ஆங்கிலத்தில் "சுய அடக்கம்" என்றே கூறப்பட்டுள்ளது. பிசாசின் ஆவி பிடித்த ஜனங்கள் மாத்திரமே தங்கள் சுய-அடக்கத்தை இழக்கிறார்கள். பரிசுத்த ஆவியால் நிரப்பப் பட்டவர்களோ, யாரைக்காட்டிலும் தங்களை அடக்கியாளுவதற்கு அதிக திறன் பெற்றிருப்பார்கள். " தீர்க்கதரிசிகளுடைய ஆவிகள் தீர்க்கதரிசிகளுக்கு அடங்கியிருக்கிறது" என்றே வேதம் கூறுகிறது (1 கொரிந்தியர் 14:32).

சத்தியம் எண்:- 3

"அவர்கள் பல பாஷைகளைப் (Tongues) பேசி தேவனைப் புகழ்ந்தார்கள்" என அப்போஸ்தலர்கள் 10:46 -ல் வாசிக்கிறோம்.

கொர்நெலியு வீட்டில் கூடியிருந்த அனைவரும் பரிசுத்த ஆவியின் அபிஶேகத்தைப் பெற்றார்கள். இவர்கள் மனந்திரும்பிய அதே சமயத்தில் பரிசுத்த ஆவியின் அபிஶேகத்தையும் பெற்று விட்டார்கள். இவர்கள் தாங்கள் பெற்ற அந்நிய பாஷையினால் (Tongues) தேவனைத் துதித்து புகழ்ந்தார்கள் என்று காண்கிறோம். அதாவது, அன்று பெந்தேகொஸ்தே நாளில் அபிஶேகம் பெற்ற நிகழ்ச்சியைப் போல் "ஜனங்களிடத்தில் அந்நியபாஷையினால் பேசவில்லை" என்பதைக் கவனியுங்கள்!

சத்தியம் எண் :- 4

"பவுல் அவர்கள் மேல் கைகளை வைத்தபோது, பரிசுத்த ஆவி அவர்கள் மேல் வந்தார்; அப்போழுது அவர்கள் அந்நியபாஷைகளைப் பேசி தீர்க்கதரிசனஞ் சொன்னார்கள்" என வாசிக்கிறோம் (அப்போஸ்தலர் 19:6 ).4

பவுல் எபேசு விசுவாசிகளின் மீது கைகளை வைத்தவுடன் அவர்கள் மீது பரிசுத்த ஆவியானவர் வந்து இறங்கினார். இங்கு குறிப்பிடப்பட்ட அந்நியபாஷை "தீர்க்கதரிசனம் சொல்லுவதாய்" இருப்பதை நாம் காண்கிறோம

(மேற்கண்ட அப்போஸ்தலர் நடபடிகளின் சம்பவங்களில் கீழ்காணும் உண்மைகளை நாம் கவனிப்பது நல்லது).

(1) அப்போஸ்தலர் 2 -ஆம் அதிகாரத்தில், தண்ணீர் ஞானஸ்நானத்திற்கு பிறகு பரிசுத்த ஆவியைப் பெற்றார்கள். அப்போஸ்தலர் 10 -ஆம் அதிகாரத்தில் தண்ணீர் ஞானஸ்நானத்திற்கு முன்பே பரிசுத்தஆவியைப் பெற்றுவிட்டார்கள்!
(2) அப்போஸ்தலர் 2 -ஆம், 10 -ஆம் அதிகாரங்களில் யாரும் கைகளை வைக்காமலே பரிசுத்த ஆவியைப் பெற்றுக் கொண்டார்கள். பரிசுத்த ஆவியைப் பெறுவதற்கு,இப்படிதான் பெற வேண்டுமென்ற ஓர் நிலையான வரையறை எதுவும் இல்லை என்பதையே இவ்வசனங்கள் நிரூபிக்கின்றன. அதாவது, தண்ணீர் ஞானஸ்நானத்திற்கு முன்போ அல்லது பின்போ; கைகளை வைத்தோ அல்லது வைக்காமலோ பரிசுத்த ஆவியைப் பெற்றுக்கொள்ள முடியும்.
(3) அப்போஸ்தலர் 8:16-18 வசனங்களில் சமாரியா சீஶர்கள் பரிசுத்தஆவியைக் பெற்றுக்கொண்டபோது,அந்நிய பாஷையைப் பேசியதாக குறிப்பிடப்படவில்லை. ஆனால், அவ்வாறு பரிசுத்தஆவி தந்தருளப்படுவதை மாயவித்தைக்காரனான சீமோன் கண்டான் என வாசிக்கிறோம். அப்படி அவன் ‘எதைக் கண்டான்’ என்பதை வேதம் குறிப்பிடவில்லை. ஆனால், தான் கண்ட ஒன்று, தானும் அந்த வரத்தைப் பேதுருவைப்போல பெறவேண்டுமென்ற ஆவலை அவனுக்குள் தூண்டியது என நாம் காண்கிறோம், அவ்வளவுதான்!

சத்தியம் எண்:- 5

"ஆவியினுடைய அநுக்கிரகம் அவனவனுடைய பிரயோஜனத்திற்கென்று அளிக்கப்பட்டிருக்கிறது. எப்படியெனில், ஒருவனுக்கு ஆவியினாலே ஞானத்தைப் போதிக்கும் வசனமும், வேறொருவனுக்குப் பற்பல பாஷைகளைப் பேசுதலும், வேறொருவனுக்கு வியாக்கியானம் பண்ணுதலும் அளிக்கப்படுகிறது" என 1 கொரிந்தியர் 12: 7,8,10 -ஆம் வசனங்களில் வாசிக்கிறோம்.

இவ் வசனங்களில், "’அவனவனுடைய பிரயோஜனம்" என்பது ஆங்கிலத்தில் COMMON GOOD "பொது நன்மை" என்றே கூறப்பட்டிருக்கிறது. அதாவது, அந்நியபாஷைவரம் "சபையின் நன்மைக்காகத்" தரப்பட்டிருக்கிறது என்பதே இதன் பொருளாகும். கொரிந்தியர்களுக்கு எழுதப்பட்ட இந்த நிருபம் பெந்தெகொஸ்தே நாளிலிருந்து இருபத்தைந்து ஆண்டுகளுக்குப் பிறகு எழுதப்பட்டதாகும். இன்றும் ஆவியானவரால் தரப்படும் அந்நியபாஷை வரம் "சபையின் பொது நன்மைக்காகவே" தரப்படுகிறது.

சத்தியம் எண் :-6
"இவைகளையெல்லாம் அந்த ஒரே ஆவியானவர் நடப்பித்து தமது சித்தத்தின்படியே அவனவனுக்குப் பகிர்ந்து கொடுக்கிறார்" என 1 கொரிந்தியர் 12:11- ல் வாசிக்கிறோம். அந்நியபாஷை வரம் உட்பட்ட ஒவ்வொரு வரத்தையும் யார் யாருக்குத் தர வேண்டுமென்பதை ஆவியானவரே தம்முடைய சர்வ ஞானத்தின்படி தீர்மானிக்கிறார் என்பதை இந்த வசனம் தெளிவாக எடுத்துரைக்கிறது. ஆகவே, யார் யாருக்கு எந்தெந்த வரத்தைக் கொடுக்க வேண்டுமென்பதை நாம் ஆவியானவருக்கு ஒருபோதும் கட்டளையிட முடியவே முடியாது.

சத்தியம் எண் :- 7

"தேவனானவர் சபையிலே முதலாவது அப்போஸ்தலர்களையும், இரண்டாவது தீர்க்கதரிசிகளையும், மூன்றாவது போதகர்களையும் பின்பு அற்புதங்களையும், பலவித பாஷைகளையும் ஏற்படுத்தினார்" என 1 கொரிந்தியர் 12:28 -ல் வாசிக்கிறோம். ஆகவே, குறிப்பிட்ட தம் நோக்கத்தை நிறைவேற்றுவதற்காக சபையில் அந்நியபாஷை பேசும் வரத்தை தேவனே ஏற்படுத்தினார் என்பதை அறிந்து கொள்ளுங்கள். எனவே, நாம் தேவனுக்கு எதிர்த்து நிற்காதபடி, இந்த வரத்தையும் நாம் ஒருபோதும் எதிர்த்து நிற்கவே கூடாது. நம்மை விட தேவனுக்கு அதிக ஞானம் உண்டு என்பதை ஒரு போதும் மறந்து விடாதீர்கள்!!

சத்தியம் எண் :-8

"எல்லாரும் குணமாக்கும் வரங்களுடையவர்களா? எல்லாரும் அந்நியபாஷை பேசுகிறார்களா? எல்லாரும் வியாக்கியானம் பண்ணுகிறார்களா? என 1 கொரிந்தியர் 12:30 - ல் வாசிக்கிறோம். இந்த வசனம் கூறுகிறபடி, எல்லா விசுவாசிகளுக்கும் குணமாக்கும் வரங்கள் தரப்படாதது போலவே, எல்லா விசுவாசிகளும் அந்நியபாஷை பேசுவதுமில்லை!.

ஆகவே, பரிசுத்த ஜீவியத்திற்கோ அல்லது அவருடைய ஊழியத்திற்கோ "அந்நியபாஷையை" ஓர் அத்தியாவசியமான வரமாக தேவன் கருதவில்லை என்பதை இந்த வசனம் வெளிப்படையாக நமக்கு கூறுகிறது. அதற்கு மாறாக, இதை முக்கியமான வரமாக தேவன் கருதியிருந்தால் இந்த வரத்தை தேவன் ஒவ்வொரு விசுவாசிக்கும் கொடுத்திருப்பார்!.

சத்தியம் எண்:- 9

"நான் மனுஶர் பாஷைகளையும், தூதர் பாஷைகளையும் பேசினாலும், அன்பு எனக்கிராவிட்டால், சத்தமிடுகிற வெண்கலம் போலவும், ஓசையிடுகிற கைதாளம் போலவும் இருப்பேன்" என 1 கொரிந்தியர் 13:1 -ல் வாசிக்கிறோம்.

அன்பில்லாமல் அந்நியபாஷை பேசுவதில் ஒரு பிரயோஜனமும் இல்லை! அந்நியபாஷை பேசுபவர்களிடத்தில் காணப்படும் பெருமையும், அந்நியபாஷை பேசாதவர்களை இவர்கள் தாழ்வாக காணும் மனப்பான்மையும்.. இவர்களின் அன்பின் தாழ்ச்சியையே காட்டுகிறது. பேரோசை கொண்ட வெண்கல சப்ததிற்கு நாம் காதைப் பொத்திக் கொள்வதைப் போலவே, தேவனும் இவ்வித அன்பற்ற விசுவாசிகள் பேசும் அந்நியபாஷை சப்ததிற்கு தன் காதைப் பொத்திக் கொள்கிறார்!!

சத்தியம் எண்;- 10

"தீர்க்கதரிசனங்களானாலும் ஒழிந்துபோம், அந்நியபாஷைகளானாலும் ஓய்ந்துபோம். அறிவானாலும் ஒழிந்துபோம். நம்முடைய அறிவு குறைவுள்ளது, நாம் தீர்க்கதரிசனஞ் சொல்லுதலும் குறைவுள்ளது. நிறைவானது வரும்போது, குறைவானது ஒழிந்துபோம்" என 1 கொரிந்தியர் 13:8-10 வசனங்களில் வாசிக்கிறோம்.

கிறிஸ்துவின் வருகையில் நிறைவானது வரும்போது, அந்நியபாஷை பேசவேண்டிய அவசியமேயிருக்காது. பரலோகத்தில் வேத அறிவும், தீர்க்கதரிசனமும் எவ்வாறு தேவையில்லையோ அதைப் போலவே "அந்நிய பாஷையும்" தேவையாய் இருக்காது! ஆகவே, இந்த பூமியில் நிலவும் குறைவான நிலைமைக்காக, அந்நியபாஷை தற்காலிகமாகத் தரப்பட்ட ஓர் வரமேயாகும். இந்த அந்நியபாஷை வரம் ஏன் இயேசுவிற்கு ஒருபோதும் தேவையாயிருக்கவில்லை என்பதற்கு இந்த வசனமே தெளிவான பதில் அளிக்கிறது. அவருடைய மனம் நிறைவான பரிசுத்தம் கொண்டதாயும், அவருடைய ஜீவியம் பிதாவோடு நிறைவான ஐக்கியம் கொண்டதாயும் எல்லா நேரங்களிலும் இருந்தபடியால்... குறைவான சூழலுக்குத் தேவையான அந்நியபாஷை இயேசுவிற்குத் தேவையற்றதாயிருந்தது!

சத்தியம் எண்:- 11

"அந்நியபாஷையில் பேசுகிறவன், ஆவியினாலே இரகசியங்களைப் பேசினாலும், அவன் பேசுகிறதை ஒருவனும் அறியாதிருக்கிறபடியால், அவன் மனுஶரிடத்தில் பேசாமல், தேவனிடத்தில் பேசுகிறான்" என 1 கொரிந்தியர் 14:2 -ஆம் வசனத்தில் வாசிக்கிறோம்.

இங்கு குறிப்பிடபட்ட அந்நியபாஷை வரம், பெந்தெகோஸ்தே நாளில் வெளிப்பட்ட வரத்திற்கு முற்றிலும் வித்தியாசமானது என்பதை வெளிப்படையாகவே காண்கிறோம். பெந்தெகோஸ்தே நாளில் அவர்கள் அந்நியபாஷையில் ஜனங்களிடத்தில் பேசினார்கள், அதை அவர்கள் விளங்கி கொண்டார்கள். ஆனால், இங்கு குறிப்பிட்ட அந்நியபாஷைவரமோ, மனுஶரிடத்தில் பேசுவதாயிராமல் தேவனிடத்தில் பேசுவதாயிருக்கிறது. இவ்வாறு தேவனிடத்தில் அவன் பேசுகிறபடியால், அவன் என்ன பேசுகிறான் என்பதை ஒருவனும் அறிந்து கொள்ள முடியாது!

சத்தியம் என்:- 12

"அந்நியபாஷையில் பேசுகிறவன் தனக்கே பக்திவிருத்தி உண்டாகப் பேசுகிறான்" என 1 கொரிந்தியர் 14:4 -ஆம் வசனத்தில் வாசிக்கிறோம். ஒரு விசுவாசி ஆவிகுரியதன்மையில் ஸ்திரப்படுவதற்கு அந்நியபாஷை வரம் அவனுக்கு உதவுகிறது.

சத்தியம் எண்:-13

"நீங்களெல்லாரும் அந்நியபாஷைப் பேசும்படி விரும்புகிறேன். ஆகிலும், அந்நியபாஷைகளில் பேசுகிறவன் சபைக்குப் பக்திவிருத்தி உண்டாகும்படிக்கு அர்த்தத்தையும் சொல்லாவிட்டால், தீர்க்கதரிசனஞ் சொல்லுகிறவன் அவனிலும் மேன்மையுள்ளவன்.... சகோதரரே, நான் உங்களிடத்தில் வந்து உங்களுக்கு இரகசியங்களை வெளிப்படுத்துவதற்காவது, அறிவுண்டாக்குவதற்காவது, தீர்க்கதரிசனத்தை அறிவிக்கிறதற்காவது, போதகத்தைப் போதிக்கிறதற்காவது ஏதுவானதைச் சொல்லாமல், அந்நியபாஷைகளில் பேசினால் உங்களுக்குப் பிரயோஜனம் என்ன? என பவுல் 1 கொரிந்தியர் 14:5,6 வசனங்களில் வினவினார். எல்லாரும் அந்நியபாஷை பேசும்படியே பவுல் விரும்பினார்! அதாவது, எல்லா விசுவாசிகளும் அந்நியபாஷை பேசவில்லை என்பதையே இந்த வசனம் மீண்டும் நமக்கு உறுதிப்படுத்தபடுகிறது!

இதே போன்ற விருப்பத்தை 1 கொரிந்தியர் 7:7 -ல் பவுல் குறிப்பிடும்போது "எல்லா மனுஶரும் என்னைப்போலவேயிருக்க (திருமணமாகாதிருக்க) விரும்புகிறேன்" எனக் கூறினார். இவ்வாறு திருமணமாகாமல் தனித்திருப்பதிலுள்ள சில நன்மைகளைப் பவுல் கண்டிருந்தார். அதேப்போல், அந்நியபாஷை பேசுவதாலுண்டாகும் நன்மைகளையும் பவுல் கண்டிருந்தார். ஆனால், தேவன் தன்னுடைய சர்வ ஞானத்தின்படி சில விசுவாசிகளுக்கு மட்டுமே "திருமணமாகாமல் தனித்திருக்கும்வரத்தைத்" தந்ததுபோல்.... "அந்நியபாஷை பேசும் வரத்தையும்" இவ்விதமே சில விசுவாசிகளுக்கே தேவன் தந்திருக்கிறார் என்பதை பவுல் நன்கு அறிந்திருந்தார்.

எல்லா விசுவாசிகளும் "பிரம்மச்சாரியாய்" இருக்கும்படி எதிர்பார்ப்பது எவ்வளவு மதியீனமோ, அதேபோல, எல்லா விசுவாசிகளும் அந்நியபாஷை பேசும்படி எதிர்ப்பார்ப்பதும் மதியீனமேயாகும்!

சபைகூட்டங்களில் தீர்க்கதரிசனம் சொல்லுவதே அதிக பயனுள்ளதாயிருக்கும். தீர்க்கதரிசனம் சொல்லுவதென்பது, ஒருவன் தேவனுடைய வார்த்தையின் மூலமாய் பிறருக்கு "பக்திவிருத்தியும், புத்தியும், ஆறுதலும் உண்டாகப் பேசுவதேயாகும்" (1 கொரிந்தியர் 14:3). இருப்பினும் சபையில் பேசப்படும் அந்நியபாஷை, வியாக்கியானம் செய்யப்பட்டால், அதுவும் தீர்க்கதரிசனத்தைப் போலவே சபைக்கு பக்திவிருத்தியுண்டாக்கும் என பவுல் கூறினார்.

சத்தியம் எண்:- 14

"நீங்கள் தெளிவான பேச்சை நாவினால் வசனியாவிட்டால் (நீங்கள் பேசிய அந்நியபாஷைக்கு அர்த்தம் சொல்லப்படாவிட்டால்) பேசப்பட்டது இன்னதென்று எப்படித் தெரியும்? அந்தப்படி அந்நியபாஷையில் பேசுகிறவன் அதின் அர்த்தத்தையும் சொல்லத்தக்கதாக விண்ணப்பம் பண்ணக்கடவன்" என 1 கொரிந்தியர் 16:9,13 -ஆம் வசனங்களில் வாசிக்கிறோம். எனவே, சபைக் கூட்டங்களில் பயன்படுத்தும் "அந்நியபாஷைகள்" கண்டிப்பாய் வியாக்கியானம் செய்யப்படவேண்டும்!

சத்தியம் எண்:- 15

"நான் அந்நியபாஷையிலே விண்ணப்பம் பண்ணினால், என் ஆவி விண்ணப்பம் பண்ணுமேயன்றி, என் கருத்து பயனற்றதாயிருக்கும். இப்படியிருக்க, செய்ய வேண்டுவதென்ன, நான் ஆவியோடும் விண்ணப்பம் பண்ணுவேன், கருத்தோடும் விண்ணப்பம் பண்ணுவேன், நான் ஆவியோடும் பாடுவேன், கருத்தோடும் பாடுவேன்" என 1 கொரிந்தியர் 14: 14,15 -ஆம் வசனங்களில் வசிக்கிறோம்.

ஒருவன் அந்நியபாஷையில் ஜெபிக்கும்போது, அவன் என்ன ஜெபிக்கிறான் என்பதை மற்றவன் அறிந்துகொள்ள முடியாது. அவ்வாறிருப்பினும், ஒருவன் தன் சொந்த பாஷையில் எந்தளவிற்கு கருத்தோடு ஜெபிக்கிறானோ அல்லது பாடுகிறானோ... அந்தளவிற்கு ஆவியோடு (அந்நியபாஷையில்) ஜெபிக்கவும், பாடவும் வேண்டுமென பவுல் உணர்ந்தார்!

சத்தியம் எண்:- 16

"உங்களெல்லாரிலும் நான் அதிகமாய் பாஷைகளைப் பேசுகிறேன். இதற்காக என் தேவனை ஸ்தோத்தரிக்கிறேன்" என 1 கொரிந்தியர் 14:18 -ல் வாசிக்கிறோம். தான் பெற்ற இந்த வரத்திற்காக பவுல் தேவனுக்கு நன்றியுள்ளவராயிருந்தார். ஆகவே, இந்த வரம் எவ்வளவாய் பவுலுக்கு உதவியிருக்கிறது என்பதைத் தெளிவாய் நாம் காண்கிறோம்.

சத்தியம் எண்:- 17

அப்படியிருந்தும், நான் சபையிலே அந்நியபாஷையில் பதினாயிரம் வார்த்தைகளைப் பேசுகிறதிலும், மற்றவர்களை உணர்த்தும்படி என் கருத்தோடு ஐந்து வார்த்தைகளைப் பேசுகிறதே அதிக விருப்பமாயிருக்கும்" என 1 கொரிந்தியர் 14;19 -ல் வாசிக்கிறோம். சபைக் கூட்டத்தில், நமக்குத் தெரிந்த பாஷையில் பேசுவதே எப்போதும் நல்லது!

சத்தியம் எண்:- 18

"அந்நியபாஷைகள் விசுவாசிகளுக்கு அடையாளமாயிராமல், அவிசுவாசிகளுக்கு அடையாளமாயிருக்கிறது" என 1 கொரிந்தியர் 14:22 -ல் வாசிக்கிறோம். அன்று பெந்தெகோஸ்தே நாளைப்போலவே- இன்றும், அந்நியபாஷைகள் அவிசுவாசிகளுக்கே ஓர் அடையாளமாக இருக்கிறது.

சத்தியம் எண்;- 19

"ஆகையால், சபையாரெல்லாரும் ஏகமாய் கூடிவந்து, எல்லாரும் அந்நியபாஷைகளிலே பேசிக்கொள்ளும்போது, கல்லாதவர்களாவது, அவிசுவாசிகளாவது உள்ளே பிரவேசித்தால், அவர்கள் உங்களை பைத்தியம் பிடித்தவர்களென்பார்களல்லவா?" என 1 கொரிந்தியர் 14:23 -ல் வாசிக்கிறோம். ஆகவே, சபைக்கூட்டத்தில் நாம் எல்லாரும் சேர்ந்து அந்நியபாஷை பேசுவது பைத்தியகாரத்தனமேயாகும்! ஏனெனில், இவர்கள் என்ன பேசுகிறார்களென ஒருவராலும் புரிந்து கொள்ள முடியாது!! (சபையில் ஜனங்கள் ஒன்றாய்ச் சேர்ந்து தனிதனியாய் அந்நியபாஷை பேசுவதையே இந்த வசனம் தவறு என சுட்டிக் காட்டுகிறது. ஆனால், அதற்கு மாறாக, எல்லோரும் அந்நியபாஷையில் ஜெபித்துக் கொண்டிருப்பதை இந்த வசனம் குறிப்பிட்டுக் கூறவில்லை. ஏனெனில், அறிந்த பாஷையில் ஒருவர் ஜெபிப்பதைக்கூட நாம் கவனிப்பதில்லையே!)

சத்தியம் எண்:- 20

"நீங்கள் கூடிவந்திருக்கும் போது, உங்களில் ஒருவன் சங்கீதம் பாடுகிறான், ஒருவன் போதகம் பண்ணுகிறான், ஒருவன் அந்நியபாஷை பேசுகிறான், ஒருவன் இரகசியங்களை வெளிப்படுத்துகிறான், ஒருவன் வியாக்கியானம் பண்ணுகிறான். சகோதரரே, இது என்ன? சகலமும் பக்திவிருத்திக்கேதுவாக செய்யப்படக்கடவது.யாராவது அந்நியபாஷையிலே பேசுகிறதுண்டானால், அது இரண்டு பேர் மட்டில், அல்லது மிஞ்சினால் மூன்று பேர்மட்டில் அடங்கவும். அவர்கள் ஒவ்வொருவராய்ப் பேசவும்,ஒருவன் அர்த்தத்தைச் சொல்லவும் வேண்டும்" என 1 கொரிந்தியர் 14:26,27 -ல் வாசிக்கிறோம்.

இவ்வசனம் கூறுகிறபடி, நாம் சபை கூடிவரும் போது இரண்டு அல்லது முன்று பேருக்கு மேல் அந்நியபாஷை பேசக்கூடாது. மேலும், அவ்வாறு இரண்டு பேர் அல்லது மூன்று பேர் பேசினால், "ஒவ்வொரு அந்நியபாஷையும் வியாக்கியானம் செய்யப்பட வேண்டும்!" வியாக்கியானம் செய்வதென்பது "மொழிபெயர்ப்பிற்கு" ஒப்பானது அல்ல. மொழிப்பெயர்ப்பு "வார்த்தைக்கு வார்த்தை " அப்படியே எடுத்து சொல்வதாகும். ஆனால் வியாக்கியானமோ, "ஒருவருடைய வார்த்தைகளுக்குப் பின்னால் அடங்கியிருக்கும் சிந்தைகளை" வெளிப்படுத்துவதேயாகும்.

சத்தியம் எண்:-21

"இப்படியிருக்க, சகோதரரே, தீர்க்கதரிசனஞ்சொல்ல நாடுங்கள், அந்நியபாஷைகளைப் பேசுகிறதற்கும் தடைப் பண்ணாதிருங்கள். சகலமும் நல்லொழுக்கமாயும், கிரமமாயும், செய்யப்படக்கடவது" என 1 கொரிந்தியர் 14:39,40 -ல் வாசிக்கிறோம்.

இந்த வாக்கியங்களை "முடிவுரையாக" பவுல் எழுதியிருப்பதை நாம் காண முடிகிறது. இவ்வசனம் நமக்கு எச்சரிக்கிறபடி அந்நியபாஷை பேசும் வரத்தை அப்பியாசப்படுத்துகிறவர்களை நாம் ஒரு போதும் தடை செய்யக்கூடாது. ஆனால், நீங்கள் வரத்தை விரும்பினால், அந்நியபாஷை வரத்தைவிட தீர்க்கதரிசனம் சொல்லும் வரத்தையே நாடுங்கள் என வேதம் நமக்கு ஆலோசனையாகக் கூறுகிறது. அந்நியபாஷை பேசுவதில் உண்மையும்.... போலியும்!

அந்நியபாஷை வரத்தின் பிண்ணனியில், நம் கண்களுக்குப் புலப்படாத "ஓரளவு" இரகசியம் இருக்கத்தான் செய்கிறது. இன்று இந்தவரத்தைப் பெற்றிருப்பவர்கள் நேர்மையுள்ளவர்களாயிருந்தால், இந்த உண்மையை அவர்கள் அனைவரும் ஒத்துக்கொள்வார்கள். வேதம் கூறுகிறபடி நாம் எல்லாவற்றையும் அறிந்திட முடியாது! நாம் யாவரும் குறைவாய்த்தான் அறிந்திருக்கிறோம் (1 கொரிந்தியர் 13:12 ). கடந்த 25 - ஆண்டுகளாய் அந்நியபாஷை பேசும் நான், இந்த வரத்தைக்குறித்து என் சொந்த அனுபவத்திலிருந்து கற்றுக் கொண்டதைக் கூறவிரும்புகிறேன்:

ஒருநபர் அந்நியபாஷை பேசும்போது, அவருடைய ஆவி (இருதயம்) ஏதோ பாஷைகளை நேரடியாக இருதயத்திலிருந்து தன் வாய்மூலம் பேசுவதையே அறிகிறோம். அதாவது, இவ்வாறு பேசுவதுஅவருடைய மனதைத்தள்ளி வைத்து விட்டுப் பேசுவதாகவேயிருக்கிறது. இதனிமித்தமாய் அவன் தன் இருதயத்திலிருக்கிற யாவற்றையும் தேவனிடத்தில் ஊற்றி கொட்டிவிடுகிறான்! அது அவனுடைய மகிழ்ச்சியின் பெருக்கமாகவோ அல்லது துக்கத்தினாலோ அல்லது மனச் சோர்வினாலோ ஏற்பட்ட பாரமாகவோ இருக்கலாம்!! இதன் மூலமாய், அவனுடைய இருதயத்திலிருந்த பாரமான அழுத்தம் அவனை விட்டுப் போய்விடுகிறது. இவ்வாறகவே அவன் பக்திவிருத்தியடைகிறான். நாம் ஏற்கனவே அப்போஸ்தலர் 2:4 -ல் கண்டதுப்போல் ஒருவன் அந்நியபாஷை பேசும் போது, அந்த நபர்தான் பேசுகிறாரேயல்லாமல் பரிசுத்தாவியானவர் பேசுவதில்லை! ஒருவன் எப்படி தனக்குத் தெரிந்த பாஷையைப் பேசுவதற்கு வார்த்தைகளை அமைக்கிறானோ, அதைப்போலவே அந்நியபாஷை பேசும் விசுவாசியும் வார்த்தைகளைக் கூட்டிச் சேர்த்துப் பேசுகிறான்.

இங்குள்ள ஒரே வித்தியாசம் யாதெனில், அந்நியபாஷை பேசுபவர் தனக்குத் தெரிந்த பாஷையை பேசாததினால்,ஆண்டவர் மீது தன் முழுகவனத்தையும் வைத்து, தன் மனதை (ஆஐசூனு) உதறிவிட்டு தன் இருதயத்திலிருந்து நேரடியாக வார்த்தைகளைத் தன் வாயின் மூலமாக பேசுகிறார்.

அவ்வாறு அவன் பேசுவதின் அர்த்தம் அவனுக்குப் புரியாவிட்டாலும், தன்னுடைய இருதயத்திலுள்ள ஏக்கங்களையும் பாரங்களையும் தேவன் இச்சமயத்தில் அறிந்துகொண்டார் என்பதை நன்றாக உணர்ந்திருப்பான்.

நெஞ்சத்தில் பாரம் உண்டாகும் சமயமெல்லாம், அந்தச் சுமையை நாம் மேற்கண்டதுபோல் தேவனிடத்தில் இறக்கி வைப்பது ஒரு விசுவாசிக்கு மிகுந்த பெலனுள்ள நேரமாகும்! குறிப்பாக, ஒரு விசுவாசியின் மனம் (MIND) தன்னுடைய சொந்த பாஷையில் ஜெபிப்பதற்கு களைப்படைந்திருக்கும் சமயமே, அந்நியபாஷையின் ஜெபம் அவனுக்கு மிகுந்த ஆறுதலாயிருக்கிறது. இது எவ்வாறு கிரியை செய்கிறது என்பதை நம்மால் விளக்கமுடியாவிட்டாலும், அந்தக் கிரியையை நாம் உணர முடியும்.!

இப்போது வியாக்கியான வரத்தைக் குறித்துப் பார்ப்போம். நாம் ஏற்கனவே கண்டது போல் அந்நியபாஷையை வியாக்கியானம் செய்தல், தீர்க்கத்தரிசனம் சொல்லுவதற்கு சமமாகும். ஆகவே ஏற்கனவே தீர்க்க தரிசன வரம் பெற்ற ஒருவனுக்கு, ஆவியானவர் இந்த வரத்தையும் சேர்த்துத் தருவதைப் பொதுவாக காண்கிறோம். ஒரு சபைக் கூட்டத்தில், யாரேனும் ஒருவர் அந்நியபாஷை பேசும்போது, தீர்க்கதரிசன வரம் பெற்ற ஒருவர் (அது அநேகமாக மூப்பர்களில் ஒருவராக இருக்கக் கூடும்), அவர் தேவனுடைய வெளிச்சத்தில் உண்மையாக நடந்து வருபவராயிருந்தால், அந்த அந்நியபாஷை தேவனிடமிருந்து புறப்பட்ட மெய்யான தொன்றாயிருக்கும் பட்சத்தில், அதைக்குறித்த எண்ணங்களின் பிரதிபலிப்புகள் தன் மனதில் பளிச்சிடுவதை அந்த மூப்பர் காண்பார்! உடனே அவர், அவ்வேளையில் தான் பெற்ற எண்ணங்களை தன் சொந்த பாஷையினால் பேசி வெளிப்படுத்துவார்! ஏனெனில் இது ஓர் மொழி பெயர்ப்பாயில்லாமல் வியாக்கியானமாகவேயிருக்கிறது!

இவ்வேளையில், வியாக்கியான வரத்தைப் பெற்ற இன்னொரு மூப்பர் இதே அந்நியபாஷையை வியாக்கியானம் செய்தால், அதுவும் முதல் வியாக்கியானத்திற்கு ஒப்பானதாகவே இருக்கும்! சபையிலுள்ள இரண்டு மூப்பர்கள் தேவனோடு கொண்ட தொடர்பில் அனல் கொண்டவர்களாயிருந்தால் இவ்வாறு சம்பவிப்பதை நாம் காணலாம்!!

உண்டாகும் எந்த வெளிச்சமும் வேதத்தில் எழுதப்பட்ட சத்தியங்களுக்கு ஒருபோதும் முரணாயிருக்காது. எல்லா உண்மையான தீர்க்கதரிசனங்களும் வேத வாக்கியங்களுக்கு ஒத்திருப்பதைப் போலவே, உண்மையான எல்லா வியாக்கியானமும் வேதவசனத்திற்கு ஒத்ததாகவேயிருக்கும்!

ஆவிக்குரிய வரங்களைக் குறித்து மாறுபாடான கருத்துகளைக் கொண்ட சிலர் கீழ் கண்ட கேள்வியைக் கேட்டிருக்கிறார்கள்: "ஒரு கூட்டத்தில் நடந்த அந்நியபாஷை வியாக்கியானத்தை ஒரு ஒலிநாடாவில் பதிவு செய்து, இதே வரத்தைப் பெற்ற வேறொரு இடத்திலுள்ள நபரைக்கொண்டு வியாக்கியானம் செய்யச் சொன்னால், அந்த வியாக்கியானம் முதலில் வியாக்கியானம் செய்ததற்கு ஒப்பாகவே இருக்குமா?" இந்தக் கேள்விக்கு விடையாதெனில் "வியாக்கியானம் செய்த இரண்டு நபர்களும் ஒரே விதமாக கர்த்தரின் சிந்தையைக் கொண்டிருந்தால், அவர்களின் வியாக்கியானம் ஒரே செய்தியாகத்தான் இருக்கும்"என்பதேயாகும். ஆனால் இவர்களின் வியாக்கியானம் ஒன்றுக்கொன்று வித்தியாசமாயிருந்தால், கர்த்தரின் சிந்தையைப் பூரணமாக அறிந்து கொள்வதற்கு, வியாக்கியானம் செய்த ஒருவரோ அல்லது இரண்டு பேருமோ தங்கள் ஆண்டவரோடு பூரணமான தொடர்பு கொண்டவர்களாக இல்லை என்பதையே சுட்டிக்காட்டுகிறது. இது ஒன்றும் நுதனமான பெரிய காரியம் அல்ல! ஏனெனில், ஆண்டவரின் சிந்தையை பூரணமாக அறிந்துகொள்ளும் அளவிற்கு இந்த உலகிலுள்ள எந்த விசுவாசியும் அவரோடு அனல்கொண்ட பூரண தொடர்புடையவர்களாக இல்லை என்பதே யாகும்!!

இந்த உண்மையை, கீழ்காணும் உதாரணம் உங்கள் சந்தேகத்தை முற்றிலும் அகற்றி நிரூபித்துக்காட்டும் என நம்புகிறேன்: ஒரு கூட்டத்தில் நீங்கள் செய்தி தர வேண்டியதிருப்பதாக எண்ணிக் கொள்ளுங்கள்! அவ்வேளையில் ஒரு குறிப்பிட்ட செய்தி உங்கள் இருதயத்தை நிரப்ப...... நீங்களும், அக்கூட்டத்திற்கு அந்தச் செய்தியே கர்த்தருடைய பாரம் என ஊர்ஜிதம் செய்கிறீர்கள்! ஆனால் திடீரென்று ஏற்பட்ட சூழ்நிலையினால், உங்களால் அந்தக் கூட்டத்திற்குச் செல்லமுடியாமல் வேறொருவர் அங்கு செய்தி கொடுத்துவிட்டார்!. இங்கு துல்லியமாக சொல்ல வேண்டுமென்றால், அந்த சகோதரன் வேறொரு வேத வாக்கியத்தை வைத்தே அங்கு பேசியிருந்தாலும், உங்கள் இருதயத்திலிருந்த "அதே செய்தியைத்தான்" பிரசங்கித்திருக்க வேண்டும்! அவ்விதமாய் அந்த சகோதரன் பேசியிருக்கவில்லை என்றால், "உங்களில் ஒருவர்" கர்த்தருடைய மனதைப் பூரணமாய் அறிந்து கொள்ளும் இடத்தில் இல்லை என்பதையே காட்டுகிறது. ஆகவே, விசுவாசிகள் தங்கள் சொந்த பாஷையில் செய்தி கொடுக்கும் இந்தப் பரீட்சையில்கூட தோல்வியடைவதை நாம் காண்கிறோமே! ஆகவேதான், ஒரு தீர்க்கதரிசியின் செய்தியைக்கூட நிதானித்து சோதிக்கும்படி வேதம் நமக்குப் போதிக்கிறது (1 கொரிந்தியர் 14:29 ). இதைப் போலவே, அந்நியபாஷையின் எல்லா செய்திகளையும் அதின் வியாக்கியானங்களையும் நாம் நிதானித்து சோதித்து பார்க்க வேண்டும். இங்கு நாம் எதை நிதானித்து சோதிக்க வேண்டும்? கூட்டத்தில் பேசப்பட்ட தீர்க்கதரிசனமோ, அந்நியபாஷைகளோ அல்லது வியாக்கியானங்களோ "வேதத்தின்படியும்" "கர்த்தரிடத்திலிருந்தும்" உண்டானதுதானா? இல்லையா? என்பதை என்னுடைய ஆவி, பரிசுத்தாவியோடு இணைந்து சாட்சி கொடுக்க வேண்டும்!

1 யோவான் 4:1- ஆம் வசனத்தில், "எல்லா ஆவிகளையும் நம்பாமல், அந்த ஆவிகள் தேவனால் உண்டானவைகளோ என்று சோதித்து அறியுங்கள்" என்ற எச்சரிக்கையை நாம் காண்கிறோம். ஆகவே, அந்நியபாஷைகளையோ அல்லது வியாக்கியானங்களையோ கூட்டங்களில் நாம் எப்போதெல்லாம் கேட்கிறோமோ, அப்போதெல்லாம் அவைகளை நம்முடைய ஆவியின் சாட்சியோடு சோதித்துப் பார்க்க வேண்டும்! அனேக சமயங்களில், நாம் கேட்கும் "எழுச்சிமிகு இயற்கைக்கு அப்பாற்பட்ட அந்நியபாஷைகள்" அநேகமாய் தேவனிடமிருந்து வராததாயிருக்ககூடும். ஏதோ சில காரணத்தினிமித்தம், ஒரு தீர்க்கதரிசனத்தை அல்லது அந்நியபாஷையை அல்லது வியாக்கியானத்தின் ஒரு பகுதியை அல்லது முழுவதையுமேகூட ஏற்றுக் கொள்வதற்கு நம்முடைய ஆவியில் ஒரு விதமான தயக்கம் ஏற்பட்டால், அவைகளை ஏற்றுக் கொள்ளாமல் உதறித் தள்ளுவதற்கு நாம் ஜாக்கிரதையாயிருக்க வேண்டும்!

இவ்வாறு இல்லாமல், "இயற்கைக்கு அப்பாற்பட்ட எழுச்சியான யாவற்றையும் எந்தக் கேள்வியும் கேட்காமல் அப்படியே ஏற்றுக் கொண்டதின்" விளைவுதான், நாம் வாழும் இந்த நூற்றாண்டு கிறிஸ்தவ உலகில் ஏற்பட்டிருக்கும் ஏராளமான குழப்பங்களுக்குக் காரணமாயிருக்கிறது! அதுமாத்திரமல்லாமல், ஆண்டவருடைய நாமம் சொல்லி முடியா அளவிற்கு கனவீனமடைந்துமுள்ளது!

அப்போஸ்தலர் நடபடிகளின் காலத்தில் அந்நியபாஷை பேசிய எல்லாத்தருணங்களிலும் நாம் கண்ட, கீழ்க்காணும் உண்மைகளை எப்போதும் மனதில் வைத்திருப்பது நல்லது:

1. அவர்கள் அந்நியபாஷை பேசியபோதெல்லாம்,வலுக்கட்டாயமாயில்லாமல் "தானாகவே" (SPONTANEOUS) பேசினார்கள்.
2. அவர்கள் அந்நியபாஷை பேசியபோதெல்லாம், ஒருவர் பாக்கியில்லாமல் எல்லோரும் (ALL) பேசினார்கள்.
3. அவர்கள் அந்நியபாஷை பேசியபோதெல்லாம், எவ்வாறு அந்நியபாஷை பேச வேண்டுமென்ற பயிற்சியோ அல்லது வற்புறுத்தலோ அல்லது வேறு எந்தக் குறிப்புகளோ அவர்களுக்குத் தரப்படவில்லை!

ஆனால் இன்று,அநேக இடங்களில் மேற்கண்ட குணாதிசயங்களில் ஒன்றுகூட காணப்படுவதில்லை. எங்கெல்லாம் அந்நியபாஷைவரம் எந்தப் பயிற்சியுமில்லாமல் தானாகவே பேசப்படுகிறதோ, அதுவே "உண்மையானதாயிருக்கக்கூடும்" என நாம் முடிவு செய்யலாம்.

இன்றைய நாள்வரை நான் கேட்ட"அந்நியபாஷையில் "மிகவும் அற்பமான சதவீதமே "உண்மையானது"என என்னுடைய ஆவி சாட்சி கொடுத்திருக்கிறது! மற்ற அனைத்தும், இந்த வரத்தை அப்படியே"காப்பியடிக்க" முயற்சித்ததாகவே நான் உணருகிறேன். தங்கள் குழுவினரால் ஏற்றுக் கொள்ளப்படுவதற்கோ அல்லது அவர்களை கவர்ச்சிப்பதற்கோ இந்த வரத்தை காப்பியடிக்கவே ஜனங்கள் உந்தப்படுகிறார்கள்!! இன்னும் கணிசமான சதவீதத்தினரின் அந்நியபாஷை "சாத்தானின் ஆவியிலிருந்து" உருவானதாயிருக்கக் கூடுமென்று கூட நான் கருதியிருக்கிறேன்! இவ்வித என்னுடைய கண்ணோட்டம், பல தேசங்களில் நான் கண்ட அநேக ஜனங்களின் வாழ்க்கையிலுள்ள கனியையும் அவர்களின் முடிவையும் ஆதாரமாய்க் கொண்டவைகளேயாகும்!

இன்றைய அநேக சபைகளில், அந்நியபாஷை பேசி... அந்நியபாஷையில் பாடும்நிகழ்ச்சிகள் "காட்சி அரங்கேற்றமாகவே" இருப்பதை நாம் காண்கிறோம். இவ்வித காட்சி அரங்கேற்றத்தில் பரவசமடைவது" சிறுகுழந்தைகளின்" குணாதிசயமேயாகும்!

நாம் வாழும் இக்காலத்தில், விசுவாசிகளிடம் அதிகபட்சமான பொருளாதார லாபத்தைச் சுரண்டுபவர்கள் "அந்நியபாஷை பேசுகிறோம்" என தங்களை மேன்மை பாராட்டும் பிரசங்கிகளும், பாஸ்டர்களுமே என்பதை நாம் அனைவருமே நன்கு அறிந்திருக்கிறோம்! இந்த இருபதாம் நூற்றாண்டில் தோன்றியுள்ள அனேக "மார்க்க கண்மூடிகள்" (CULTS), இந்த அந்நியபாஷை பேசும் குழுவினரிடமிருந்தே உருவெடுத்திருக்கிறார்கள்!

ஆகவே, விசுவாசிகளாகிய உங்கள் யாவருக்கும் நான் கூறும் புத்திமதியாதெனில்:

"அந்நியபாஷை பேசுதல் மற்றும் சுகமளிக்கும் வரங்களை எந்த சபையிலெல்லாம் முக்கியத்துவப் படுத்துகிறார்களோ, அந்த சபைகளை விட்டு வெளியே வந்துவிடுங்கள்! ஏனெனில், இது போன்ற சபையினர் அபாயகரமான எதிர்முனைக்குச் செல்வது மாத்திரமல்லாமல், இங்குள்ள தலைவர்கள் ஆவிக்குரிய சிந்தை கொண்டவர்களாயும் இருப்பதில்லை. இவர்களுக்குப்பதிலாய், எந்த சபை பரிசுத்தத்தையும், சீஶர்களை உருவாக்குவதையும் முக்கியப்படுத்தி... அதோடு, உண்மையான அந்நியபாஷை பேசும் வரத்தை ஏற்றுக்கொண்டு... உங்கள் பணத்தை இச்சிக்காமலும், உங்கள் வாழ்க்கையை ஆட்டிப்படைக்க விரும்பாமலும் இருக்கிறதோ, அந்த சபையோடு ஐக்கியப்படுவதற்கே நாடுங்கள்". காரியத்தின் கடைத்தொகையாய் "அந்நியபாஷைக் குறித்த" முடிவான ஆலோசனைகளைக் கேளுங்கள்:

"தேவன் உங்களுக்கு அந்நியபாஷை கொடுத்திருந்தால், அதைப் பெற்றுக்கொண்டு அப்பியாசியுங்கள். நீங்கள் தேவனோடு தனித்திருக்கும் போது, குறிப்பாக உங்கள் இருதயம் மகிழ்ச்சியினால் பொங்கும் போதோ அல்லது உங்கள் இருதயம் பற்பல சோர்வினால் பாரமடையும் போதோ, இருதயத்திலிருந்து தேவனிடத்தில் அந்நியபாஷையினால் பேசுங்கள்! இவ்வாறு பேசும்படியான வரம் உங்களிடத்தில் இல்லையென்றால், அதைக்குறித்து சஞ்சலம் அடையாதிருங்கள். கர்த்தரிடத்திலிருந்து இந்த வரத்தை பெறுவதற்கு எந்த நேரத்திலும் ஆயத்தமாயிருங்கள். இந்த வரத்திற்கு விரோதமாகவோ அல்லது எப்படியும் இதைப்பெற்று விட வேண்டுமென்ற வேகத்திலோ ஒருபோதும் செயல்படாதிருங்கள். எப்படியும் பெறவேண்டும் என்ற பதட்டம் இல்லாத பட்சத்தில் இந்த வரத்தை நீங்கள் பெற வேண்டுமென தேவன் விரும்பினால், அவர் அதை நிச்சயம் உங்களுக்கு தருவார். மேலும் கிறிஸ்துவ உலகிலே நீங்கள் காண்கிற அல்லது கேட்கிற எதையும் பரிசுத்த ஆவியினால் அருளப்பட்டது என அப்படியே நம்பிவிடாதிருங்கள். ஒவ்வொன்றையும் சோதித்துப் பாருங்கள்.தேவன் உங்களுக்குத் தந்த பகுத்தறிவையும், ஐம்புலங்களையும் பயன்படுத்துங்கள். உங்களுக்கு அந்நியபாஷை வரம் இல்லையென்றால், அதைப் பெற்றிருப்பவர்களைவிட நீங்கள் தாழ்வானவர்கள் என எண்ணாதிருங்கள். இந்த வரத்தை நீங்கள் பெற்றவராயிருந்தால், இந்த இல்லாதவர்களைக் காட்டிலும், உங்களை உயர்வாகவும் அல்லது ஆவிக்குரியவர்களாயும் எண்ணாதிருங்கள். பவுலும், கொரிந்திய கிறிஸ்தவர்களும் அந்நியபாஷை பேசினார்கள். ஆனால், பவுலோ ஆவிக்குரிய வல்லவராயிருந்தார்! கொரிந்தியக் கிறிஸ்தவர்களோ மாம்ஶீகமாய் இருந்தார்கள்!!

இங்கு அதிக முக்கியத்துவம் எது?

நம் யாவருக்குமே இங்கு அதிக முக்கியத்துவமாய் இருக்க வேண்டியது "பரிசுத்த ஆவியின் வல்லமையினால் நிரம்பி இருப்பதே" ஆகும். பரிசுத்த ஆவி அபிஶேகத்தின் அடையாளம் "வல்லமை"(POWER) மாத்திரமேயாகும்! அந்நியபாஷை பேசுவது அல்ல!!(அப்போஸ்தலர் 1:8 ). நாம் எவ்வாறு நம்முடைய பாவ மன்னிப்பை நம்முடைய சொந்த தகுதியின்படியல்லாமல், கிறிஸ்துவின் தகுதியின்படி விசுவாசத்தினால் பெற்றோமோ, அதைப் போலவே பரிசுத்த ஆவியையும் விசுவாசத்தினாலேயே நாம் பெறவேண்டும் (யோவான் 7:37-39). அதாவது, பரிசுத்த ஆவியின் வரத்தை அல்லது பரிசை (GIFT) நம்முடைய உபவாசத்தினாலோ அல்லது நீடிய ஜெபத்தினாலோஅல்லது வேறெந்த கிரியையினாலோ பெற முடியாது. ஏனெனில், அவர் நமக்கு ஒரு பரிசாகவே இருக்கிறார்!(அப்போஸ்தலர் 2:38).

பசியுள்ள தன்மகனுக்கு இவ்வுலகத்தின் எந்தத் தகப்பனும் உடனடியாக உணவு தருவதைப் போலவே, தன்னிடத்தில் கேட்பவர்களுக்கு உடனடியாகப் பரிசுத்தாவியைத் தருகிறார் என்பதையறிந்து, தேவனிடம் பரிசுத்தாவியைக் கேட்டு உடனடியாக விசுவாசத்தில் பெற்றுக் கொண்டு, அவருடைய வாக்குதத்தத்தை விசுவாசித்தவர்களாய் நாம் கடந்துசெல்ல வேண்டும் (லூக்கா 11:13 ). நாம் பரிசுத்தாவியைப் பெற்றதைக் குறித்த நிச்சயமில்லாதிருந்தால், அந்த நிச்சயத்தை தேவன் நமக்குத் தரும்படி ஜெபித்தால்.. அந்த நிச்சயத்தை நமக்கு தேவன் தர ஒரு போதும் மறுக்கவே மாட்டார்!

இவ்வுலகத்தில் உன்னதமான கிறிஸ்தவர்களாய் திகழ்ந்தவர்கள், அந்நியபாஷை பேசினார்களோ இல்லையோ....ஆனால், இவர்கள் தங்கள் ஆண்டவராகிய இயேசுவின் மீது முழு இருதயமான சொல்லிமுடியாத நேசம் கொண்டிருந்தார்கள்! பேதுரு, யாக்கோபு, யோவான், பவுல் போன்ற சீஶர்கள் அந்நியபாஷை பேசினார்கள்! ஆனால், நமக்குத் தெரிந்தவரை ஜான்வெஸ்லி, சார்லஸ் பின்னி, D.L.மூடி, A.B. சிம்ஸன், வில்லியம்பூத், C.T.ஸ்டட், வாட்ச்மேன் நீ போன்ற தேவ மனிதர்கள் ஒருபோதும் அந்நியபாஷை பேசியதேயில்லை! ஆனால், அவர்கள் அனைவரும் சிலுவையின் வழியில் நடந்து சென்றார்கள்! ஆம், இவைகள்தான் அவர்கள் வாழ்வின் "மையமாய்" இருந்தது... மற்ற அனைத்தும் அவர்களுக்கு இரண்டாவதாகவே இருந்தது!!

இந்த உத்தம தேவமனிதர்களின் நல்ல மாதிரியையே நாமும் பின்பற்றினால், நாம் ஒரு போதும் தவறாய் சென்றுவிடவே மாட்டோம்.

கேட்பதற்கு காதுள்ளவன் எவனோ, அவன் கேட்கக்கடவன்!!

No comments:

Post a Comment