Monday 13 May 2013


அது எலியாவின் பாணி, இது கேயாசிகளின் பாணி!

nithi
தேவன் வேதத்தில் ஊழியத்துக்கான, ஊழியர்களுக்கான தேவைகளை சந்தித்த விதங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன:
 1. மீன் வாயில் வெள்ளிப்பணம் (மத்தேயு 17:25-27)
2. காகம் மற்றும் சாறிபாத் விதவையையும் கொண்டு எலியாவை போஷித்தது (1 இராஜா 17)
இதுபோன்ற இயற்கைக்கு அப்பாற்பட்ட பல உதாரணங்களைச் சொல்லலாம். அது பழைய காலம், இது சபையின் காலம் என்கிறீர்களா? இதே சபையின் காலத்தை சேர்ந்த ஜார்ஜ் முல்லர் போன்ற அருமையான  ஊழியர்களின் தேவைகள் சந்திக்கபட்டதும் அற்புதங்கள் மூலமாகத்தான். அதே பலத்த கரங்களும் ஓங்கிய புயங்களையும் உடைய தேவன்தான் இன்றும் தமது உத்தம ஊழியர்களை போஷிகிறார். தேவன் ஒருவரிடம் காட்டிய அற்புதத்தை இன்னொருவரிடம் காட்டுவதில்லை. காரணம் அவருடைய வழிகள் ஆராய்ந்து முடியாதவைகள். அவர் ஆலோசனையில் ஆச்சரியமானவர்.
ஆனால் இக்காலத்தில் தேவனுக்கு ஊழியம் செய்வதாய் சொல்லிக்கொள்ளும் அநேகர் மேற்கண்ட படத்திலுள்ள கேவலமான மார்கெட்டிங் முறையை பின்பற்றுகின்றனர். தங்களுக்கு காணிக்கை கொடுப்போரை எழுப்பினதுபோலவும் இருக்கும், தேவன்தான் தங்கள் தேவைகளை சந்திக்கிறார் என்று காட்டிக்கொள்வது போலவும் இருக்கும். தேவன் எழுப்புவதாக வாக்குப் பண்ணியிருந்தால் தேவனே அவர்களை கொண்டுவந்து சேர்ப்பாரல்லவா?  அதை ஏன் பத்திரிக்கையில் விளம்பரம் பண்ணவேண்டும்?
மேற்கண்ட ஊழியத்தின் மீதோ ஊழியக்காரர்கள் மீதோ எங்களுக்கு எந்த தனிப்பட்ட கோபமோ பகையோ இல்லை. அவர்களை அல்ல அவர்கள் ஊழியம் செய்யும் முறையையே தேவவசனத்தின்படி விமர்ச்சிக்கிறோம். இவர்கள் மட்டும் இப்படி செய்யவில்லை இதே டெக்கினிக்கை பயன்படுத்தி பணம் பார்ப்பவர்கள் அநேகர். எனவே கிறிஸ்தவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வண்ணமாக இந்த விளம்பரத்தை உதாரணமாக வைத்து இக்கட்டுரையை வரைந்திருக்கிறோம்.
இத்திட்டத்தில் இணைந்தால் பலத்த பாதுகாப்பு, செழிப்பு மற்றும் ஜெப விண்ணப்பத்துக்கு பதில் போன்ற ஆசீர்வாதங்களைத் தருவதாக தேவனே கட்டளையிட்டாராம்!  இப்படி தேவனையும் இந்த மோசடித் திட்டத்தில்  பார்ட்னராக சேர்த்திருக்கிறார்கள். யாருக்காவது மேற்கண்ட ஆசீர்வாதங்கள் கிடைக்காமல் போனால் அவர்கள் இயேசுவைத்தானே தூஷிப்பார்கள்!
தன்னை யாரைக்கொண்டு, எப்படி போஷிக்கப் போகிறேன் என்பதை தேவன் எலியாவுக்கு ஏற்கனவே சொல்லிவிட்டார். ஆனால் எலியா எப்படி நடந்துகொண்டார் என்பதை தியானித்துப்பாருங்கள்.
நீ எழுந்து, சீதோனுக்கடுத்த சாறிபாத் ஊருக்குப் போய், அங்கே தங்கியிரு; உன்னைப் பராமரிக்கும்படி அங்கே இருக்கிற ஒரு விதவைக்குக் கட்டளையிட்டேன்  (1 இரா 17:9)
எலியா அந்த விதவையை எப்படி சந்திக்கிறார் பாருங்கள்:   அப்படியே அவன் எழுந்து, சாறிபாத்துக்குப் போனான்; அந்தப் பட்டணத்தின் ஒலிமுகவாசலுக்கு அவன் வந்த போது, அங்கே ஒரு விதவை விறகு பொறுக்கிக்கொண்டிருந்தாள்; அவன் அவளைப் பார்த்துக் கூப்பிட்டு…(1 இரா 17:10)
எலியா சாறிபாத் ஊருக்குப் போய் ஒலிமுக வாசலில் நின்று:
“என்னை போஷிக்கும்படி இந்த ஊரில் உள்ள ஒரு விதவைக்கு கர்த்தர் கட்டளையிட்டிருக்கிறாராம். யார் அந்த விதவை? இருதயத்தில் ஏவப்பட்டவர்கள் முன்வாருங்கள்!” என்று கூவவில்லை. 
எலியா ஒலிமுகவாசலுக்கு வந்ததும் அந்த விதவை அந்த இடத்தில் விறகுபொறுக்கிக் கொண்டிருந்ததும் தேவநடத்துதல். ஆனால் அவர்கள் இருவரையும் பொறுத்தவரை அது தானாக நடைபெற்ற நிகழ்வு. ஆனால் அதுதான் அற்புதம்!!…தேவன் தனது ஊழியர்களை யாரிடமும் கையேந்திக்கொண்டிருக்கவும், வயிற்றுக்காக அபயமிடவும் அனுமதிக்கமாட்டார்.
அதிலும் எலியா அந்தப் பெண்ணிடம் முதலிலேயே நேரடியாக அப்பம் கேட்கவில்லை,  1இரா 17: 10-ஆம் வசனத்தில் முதலில் தண்ணீர் கேட்கிறார். அவர் தண்ணீர் கொண்டுவர சம்மதித்து கிளம்பிப்போனதும். இவள்தான் தேவன் சொன்ன அந்த விதவை என்று மனதில் நிச்சயித்துக்கொண்டு பின்னரே தண்ணீர் கொண்டுவரக் கிளம்பிய அவளை நிறுத்தி அடுத்த வசனத்தில்  அப்பமும் கொண்டுவரும்படி சொல்லுகிறார், எலியா எல்லோரிடமும் போய் தனது தேவையை சொல்லி யெகோவா தேவனை இழிவுபடுத்தவில்லை. தேவனுடைய ஸ்தானாதிபதி என்ற தனது கவுரவத்துக்கும் தனது எஜமானின்  மகிமைக்கும் பங்கம் வராமல் எல்லா இடங்களிலும் ஞானமாக நடந்துகொண்டார்.
மேலும் இத்திட்டத்தில் இணைந்தால் தேவன் பலத்த பாதுகாப்பை (இசட் பிரிவு ?!!) கொடுப்பாராம். அப்படியானால் மற்ற விசுவாசிகளுக்கு சாதாரணமான பாதுகாப்பா? இந்தத் திட்டத்தில் இணையும் விசுவாசிகளுக்கு செழிப்பு மற்றவர்களுக்கு பற்றாக்குறையா? இது பட்சபாதம் இல்லையா? இத்திட்டத்தில் இணைபவர்களுடைய ஜெபவிண்ணப்பங்கள் மட்டும் உடனடியாக பரிசீலிக்கப்படுமாம். அப்படியானால் இந்த 100 ரூபாய் தேவனுக்கு தரும் பரிதானமா? ஒரு 100 ரூபாய்க்காக தேவனை எப்படி மட்டுப்படுத்துகிறார்கள் பாருங்கள்!

உங்கள் தேவனாகிய கர்த்தர் தேவாதி தேவனும், கர்த்தாதி கர்த்தரும், மகத்துவமும் வல்லமையும் பயங்கரமுமான தேவனுமாயிருக்கிறார்; அவர் பட்சபாதம் பண்ணுகிறவரும் அல்ல, பரிதானம் வாங்குகிறவரும் அல்ல. (உபாகமம் 10:17 )

இவர்கள் மாதந்தோறும் 100 ரூபாய் தரக்கூடிய பங்குதாரர்களை எழுப்புவேன் என்று தேவன் சொன்னதாக இவர்கள் சொல்லுவது பொய். அநேகர்  இந்தத் திட்டத்தில் இணைந்து ஆசீர்வாதங்களைப் பெற்றுள்ளார்கள் என்பதும் பொய். “இது 10 கோடி மக்களின் நம்பிக்கையைப் பெற்ற சோப்” என்று சொல்லுவது போன்றது. இந்தியாவில் உள்ள 120 கோடிப்பேரில் அந்த 10 கோடிப்பேர் யார் என்று யாரும் ஆராய்ச்சிசெய்து பார்க்கப்போவதில்லை. இத்திடத்தில் இணைந்தால் பலத்த பாதுகாப்பு, செழிப்பு, ஜெபத்துக்கு பதில் போன்ற ஆசீர்வாதங்கள் கிடைக்கும் என்று சொல்வதும் பொய். மேற்கண்ட ஆசீர்வாதங்கள் எப்படிப்பட்டவர்களுக்கு, என்னென்ன கட்டளைகளுக்கு கீழ்ப்படிபவர்களுக்கு கிடைக்கும் என்று வேதம் தெளிவாக சொல்லுகிறது. அந்தக் காரியங்களை அறிந்து கொள்ள நீங்கள் பரிசுத்த ஆவியானவர் உதவியோடு வேதத்தை தியானிக்க வேண்டும்.  ஒருபோதும் இது போன்ற பத்திரிக்கை விளம்பரங்களை வாசித்து ஏமாந்து போகாதீர்கள்.
எல்லாவற்றிற்கும் மேலாக விளம்பரத்தின் கடைசி பத்தியில் சொல்லியிருக்கும் “நாங்களும் எங்கள் குழுவினரும் தினந்தோறும் உங்களுக்காக ஜெபிக்கிறோம்” என்பதையும் நம்பாதீர்கள். அவர்கள் ஜெபிப்பது ஒருவேளை உண்மையாய் இருக்கலாம். ஆனால் உங்கள் தேவைகளுக்காகவும் அதைவிட முக்கியமாக உங்களை சுற்றியுள்ளவர்களின் தேவைக்காகவும் பிரதானமாக ஆவிக்குரிய தேவைகளுக்காக நீங்களே ஜெபியுங்கள். அடுத்தவர்களை ஒருபோதும் சார்ந்து இருக்காதீர்கள். பணம் கொடுத்தவர்களுக்கு மாத்திரமே ஜெபிப்பேன் என்பது மோசமான முன்னுதாரணம். அப்படி விளம்பரப்படுத்துபவர்களிடம் காசைக் கொடுத்து ஜெபத்தை விலைக்கு வாங்குவது அதைவிட மோசமான முன்னுதாரணம். உங்கள் வேலையை அவுட்சோர்ஸ் செய்யலாம் ஜெபத்தை அவுட்சோர்ஸ் செய்யாதீர்கள். 
கடைசியாக ஊழியர்களுக்கு ஒரு காரியத்தை தெரிவிக்க விரும்புகிறோம். தேவ ஊழியர்கள் என்று சொல்லிக்கொண்டு நாம் செய்யும் ஒவ்வொரு காரியமும் தேவனுக்கு மகிமையையோ அல்லது கனவீனத்தையோ கொண்டுவரும் என்பதை மறக்கக்கூடாது. காணிக்கை பெறுவது தவறல்ல. வேதம் அதை அனுமதிக்கிறது. ஆனால் நாம் தேவனைத்தான் சார்ந்துகொள்ள வேண்டுமே தவிர இதுபோன்ற மலிவான மார்க்கெட்டிங் யுத்திகளை அல்ல. இதுபோன்ற மனுஷீக யுத்திகளை கையாண்டு தேவனை கனவீனம் செய்வதை விட நாம் வேலைசெய்துகொண்டே ஊழியம் செய்யலாம். நமது பெலன் எவ்வளவோ அவ்வளவு மட்டும் உண்மையாய் உத்தமமாய் செய்வது நல்லது. தேவனுடைய இராஜ்ஜியம் நம்மை மட்டும் நம்பி இல்லை. அவரால் எந்த மனிதனையும் பிரகாசிப்பித்து பயன்படுத்த முடியும். தேவன் நல்லது உண்மையும் உத்தமமுமான ஊழியக்காரனே! என்றுதான் சொல்லுகிறரே தவிர  “நிறைய சாதித்த ஊழியனே!” என்று சொல்லவில்லை.
கீழ்க்கண்ட பவுலின் முன்மாதிரியைப் சிந்தித்துப் பாருங்கள்:
இப்பொழுதும் சகோதரரே, நீங்கள் பக்திவிருத்தியடையவும், பரிசுத்தமாகப்பட்ட அனைவருக்குள்ளும் உங்களுக்குச் சுதந்தரத்தைக் கொடுக்கவும் வல்லவராயிருக்கிற தேவனுக்கும் அவருடைய கிருபையுள்ள வசனத்துக்கும் உங்களை ஒப்புக்கொடுக்கிறேன்.
ஒருவனுடைய வெள்ளியையாகிலும் பொன்னையாகிலும் வஸ்திரத்தையாகிலும் நான் இச்சிக்கவில்லை. நீங்கள் அறிந்திருக்கிறபடி, எனக்கும் என்னுடனேகூட இருந்தவர்களுக்கும் வேண்டியவைகளுக்காக இந்தக் கைகளே வேலைசெய்தது.
இப்படிப் பிரயாசப்பட்டு, பலவீனரைத் தாங்கவும், வாங்குகிறதைப்பார்க்கிலும் கொடுக்கிறதே பாக்கியம் என்று கர்த்தராகிய இயேசு சொன்ன வார்த்தைகளை நினைக்கவும் வேண்டுமென்று எல்லாவிதத்திலேயும் (ஒரு நல்ல முன்மாதிரியை) உங்களுக்குக் காண்பித்தேன் என்றான். (அப் 20:32-3)
-வாட்ச்மென்

No comments:

Post a Comment