Friday 8 March 2013

சொல்லாமல் சொன்ன உவமை

by Vijay Kumar on Friday, December 14, 2012 at 5:59pm ·


அதோ! அங்கே ஒரு திரள்கூட்டம். முன்னே ஒருவர் ஒரு சிறு பாறையின் மீது நின்று பிரசங்கித்துக் கொண்டிருக்கிறார். அவரைச் சுற்றி அவரது நெருங்கிய நண்பர்கள் (சீஷர்கள்) நின்றுகொண்டு ஜனங்களுக்கு ஊழியம் செய்து கொண்டிருக்கிறார்கள்.  நாம் மேலே பார்க்கும் படம் இயேசுவின் வாழ்வில் அனுதின நிகழ்வாகும்.  ஆண்டவராகிய இயேசு கூறிய அநேக உவமைகள் வேதத்தில் பதிவு செய்யப்பட்டிருக்கிறது.  ஆனால் வேதத்தில் பதிவுசெய்யபட்டுள்ள இந்தக் காட்சி எதிர்காலத்தில் உதயமாகப்போகும் இரண்டு மார்க்கங்களைப் பற்றிய உவமையைச் சொல்லாமல் சொல்லுகிறது.

மார்க்கம் 1: திரள் கூட்டத்தாரின் மார்க்கம்:

அங்கே ஒரு வழிப்போக்கன் வருகிறான். பெருங்கூட்டத்தைக் கண்டு அங்கே என்ன நடக்கிறதென்ற ஆவலில் கூட்டத்தில் நின்றுகொண்டிருக்கும் ஒருவனிடம்  விசாரிக்கிறான். இப்போது அங்கே கூட்டத்தில் நின்று கொண்டிருந்த மனிதன் இயேசுவைப் பற்றி தனக்கு தெரிந்த சுவிசேஷத்தை(!) சொல்ல ஆரம்பிக்கிறான்.

"அவர் நல்லவர், மிகுந்த வல்லமையுள்ளவர். அற்புதங்கள் பல செய்கிறார், மிகுந்த அன்பும், மனதுருக்கமும் உடையவர். எல்லோரையும் ஏற்றுக்கொள்ளுபவர், எல்லோருக்கும் நண்பர், பல நல்ல காரியங்களை உபதேசிக்கிறார், தேடிவரும் யாவர் குறையையும் தீர்த்து வைக்கிறார். என்னுடைய வியாதியைக் கூட சுகமாக்கினார்." 

இந்த வார்த்தைகளால் ஈர்க்கபட்ட அந்த வழிப்போக்கன் தனது பயணத்தை மறந்து தனக்கும் இயேசுவால் ஏதாவது நன்மை கிடைக்குமா என்று அங்கேயே கூட்டத்தோடு கூட்டமாக உட்காந்துவிடுகிறான். எதிர்பார்த்தபடியே நன்மையையும் இயேசுவிடமிருந்து பெற்றுக்கொண்டு அகமகிழ்கிறான். சிலமணி நேர பிரசங்கத்துக்குப் பின் கூட்டம் கலைகிறது. அவரவர்கள் தங்கள் இடங்களுக்கு பிரிந்து செல்லுகிறார்கள். இயேசுவும் அந்த திரள் கூட்டத்தை விட்டுப் பிரிந்து தன் சீஷரோடு அடுத்த பயணத்தைத் துவங்குகிறார்.

இயேசு அவர்களைத் தேடிவந்து அவர்கள் மத்தியில் நின்று அவர்களுக்கு உபதேசித்தார். அவர்கள் தேவைகளை தீர்த்துவைத்தார். இதிலிருந்து என்ன தெரிகிறது?

இந்த மார்க்கம் இயேசுவை பிரதானமாகக் கொண்டதா? "ஆம்"
இந்த மார்க்கத்தில் உள்ளவர்கள் இயேசுவின் பிரசன்னத்தை உணர்ந்தார்களா? "ஆம்"
இயேசுவின் குரலைக் கேட்டார்களா? "ஆம்"
அற்புதங்களையும் நன்மைகளையும் பெற்றுக் கொண்டார்களா? "ஆம்"
இயேசுவின் அன்பை ருசித்தார்களா? "ஆம்"
இவர்களது விண்ணப்பங்கள் கேட்கபட்டதா? "ஆம்"
இவர்கள் தாங்கள் இயேசுவிடம் பெற்றுக்கொண்டதை அடுத்தவர்களுக்கு சொல்லுகிறார்களா? "ஆம்"
இவர்கள் இயேசுவை தரிசித்தார்களா? "ஆம்" (அவருக்கு அருகில் நின்று அவரைத் தொட்டுக்கூடப் பார்த்தார்கள்)

ஆனால்....
இந்த மார்க்கத்தில் உள்ளவர்கள் இயேசுவைப் பின்பற்றினார்களா?
அது மட்டும் "இல்லை"

இந்த மார்க்கம் சரியான மார்க்கமா? இந்தத் திரள் கூட்டத்தாரின் முடிவு என்ன?

இது சரியான மார்க்கமில்லை. இவர்களின் அறுதிப் பெரும்பான்மையினர் நரகத்தில் தள்ளப்பட்டார்கள். இவர்களிடம் இயேசு சொன்ன வார்த்தை "அழிந்துபோகிற போஜனத்திற்காக அல்ல, நித்தியஜீவன்வரைக்கும் நிலைநிற்கிற போஜனத்திற்காகவே கிரியை நடப்பியுங்கள்; அதை மனுஷகுமாரன் உங்களுக்குக் கொடுப்பார்" (யோவான் 6:27)


மார்க்கம் 2: சீஷர்களின் மார்க்கம்

அங்கே இன்னொரு வழிப்போக்கன் வருகிறான். பெருங்கூட்டத்தைக் கண்டு அங்கே என்ன நடக்கிறதென்ற ஆவலில் கூட்டத்தின் உள்ளே முண்டியடித்துக்கொண்டு  இயேசுவின் அருகில் சென்று அவருடைய சீஷர்களில் ஒருவனிடம் விசாரிக்கிறான். அந்த சீஷன் இயேசுவைப் பற்றி இப்போது முற்றிலும் வித்தியாசமான ஒரு சுவிசேஷத்தைச் சொல்ல ஆரம்பிக்கிறான்.

இவர் தேவனுடைய குமாரனாகிய இயேசு கிறிஸ்து, இவர் சர்வலோகத்தின் பாவங்களைச் சுமந்து தீர்க்கும் தேவ ஆட்டுக்குட்டி. நம்முடைய பாவங்களை மாத்திரமல்ல உலகம் நம்மீது வைத்த பாரமான நுகத்தை உடைத்தெரிந்து நமக்கு இளைப்பாறுதல் கொடுக்க வந்த இரட்சகர். இவரே தாகமுள்ளவனுக்கு ஜீவதண்ணீரைக் கொடுக்கும் ஜீவாதிபதி. இவரே கடைசிநாளில் உலகத்தை நியாயந்தீர்க்கப் போகும் நியாயாதிபதி. தம்மிடத்தில் வரும் ஒருவனையும் புறம்பே தள்ளாத அன்புள்ள நேசர். 

சகலத்தையும் விட்டுவிட்டு இவரை முழு இருதயத்தோடு  பின்பற்றாவிட்டால் நமக்கு நித்திய ஜீவன் இல்லை. இவரைப் பின்பற்றவேண்டுமானால் முதலாவது பாவங்களை அறிக்கையிட்டு மனந்திரும்பவேண்டும். தன்னைத்தானே வெறுத்து நம் சிலுவையைச் சுமந்து கொண்டு அவரைப் பின்பற்ற வேண்டும். மாம்சத்தின்படி நடவாமல் ஆவியின்படி நடக்க வேண்டும், உலகத்துக்கு ஒத்த வேஷந்தரியாமல் பரலோக இராஜ்ஜியப் பிரஜையாக நடந்து கொள்ள வேண்டும். இம்மைக்குரிய காரியங்களுக்கும், மறுமைக்குரிய காரியங்களுக்கும் இவரையே சார்ந்து கொள்ள வேண்டும். இவரில் நிலைத்திருந்து இவருக்கு கனி கொடுக்க வேண்டும். இவரைப் பின்பற்றுவதால் உலகத்தில் நமக்குக் கிடைக்கும் பரிசு "உபத்திரவம்". ஆனால் இப்போது இவரோடு பாடுபட்டால் இவரோடு ஆளுகையும் செய்வோம்….

இப்படி அந்த சீஷன் இன்னும் அநேக வார்த்தைகளை அடுக்கிக் கொண்டே போக..இந்த வார்த்தைகளால் உலுக்கப்பட்ட அந்த வழிப்போக்கன் தனது பயண திட்டங்களையெல்லாம் தூக்கியெறிந்துவிட்டு தன்னையும், தனக்குரிய சகலத்தையும் இயேசுவிடம் ஒப்புக்கொடுக்கிறான். அவர் பிரசங்கத்தை முடித்து அவ்விடம் விட்டு புறப்படும்போது அவனும் அவரைத் தொடர்ந்து சென்று அவரைவிட்டு விலகாமல் தன் வாழ்நாளை அவரோடு கூடவே செலவிடுகிறான்.

திரள் கூட்டத்தாரின் மாக்கத்தாருக்கும் இவர்களுக்கும் உள்ள வித்தியாசம் என்ன?

இவர்கள் வாரத்தில் ஒருநாள் அல்ல, எப்போதும் இயேசுவோடு இருப்பவர்கள், அவர் எங்கு சென்றாலும் அவருக்குப் பின் சென்றவர்கள். அவரோடு பாடுபட்டவர்கள். அவர் நிமித்தம் துன்பப்படவும், அவருக்காக மரிக்கவும் எப்போதும் ஆயத்தமாக இருப்பவர்கள்.

இது சரியான மார்க்கமா? இந்த சீஷர்களின் முடிவு என்ன?

இதுவே இயேசு திறந்து வைத்த புதியதும் ஜீவனுள்ளதுமான மார்க்கம். இந்த மார்க்கத்தார் அனைவரும் ஜெயங்கொண்டவர்களாக வாடாத கிரீடத்தை சுதந்தரித்து கொண்டு கர்த்தருடைய சந்நிதியில் என்றென்றும் மகிழ்ந்திருக்கிறார்கள்.

பிரியமானவர்களே!

உங்களுக்கு இயேசுவைப் பற்றி சொன்னவர் எங்கிருந்து வந்தவர்? திரள் கூட்டத்திலிருந்து வந்தவரா? அல்லது  சீஷர்களில் ஒருவரா? நீங்கள் ஒரு ஆத்துமாவிடம் போய் யாரைப்போல பேசுகிறீர்கள்? திரள் கூட்டத்தில் ஒருவர் போல பேசுகிறீர்களா? அல்லது சீஷனாகப் பேசுகிறீர்களா?

இன்று உலகத்தில் மெஜாரிட்டியாக இருக்கும் கிறிஸ்தவத்தை அக்கால திரள் கூட்டத்தாருடன் ஒப்பிடலாம். அவர்களின் மீது இயேசு எப்படி அன்பு செலுத்தி அவர்களது தேவைகளை சந்தித்தாரோ அப்படியே இந்த திரள் கூட்டத்துக்கும் இயேசு நல்லவராகவே இருக்கிறார். வியாதிகளை தீர்ப்பதும், தேவைகளை சந்திப்பதும், அவரது சுபாவம்.

அவர் தீயோர் மேலும் நல்லோர் மேலும் தமது சூரியனை உதிக்கப்பண்ணி, நீதியுள்ளவர்கள் மேலும் அநீதியுள்ளவர்கள் மேலும் மழையைப் பெய்யப்பண்ணுகிறார். (மத்தேயு 5:45).

இயேசுவிடம் சரீர நன்மைகளைப் பெற்றுக்கொண்டு அதை அடுத்தவர்களுக்கு அறிவிக்கலாமா? தாராளமாக அறிவிக்கலாம், ஆனால் அது சுவிசேஷம் ஆகாது. அப்படி அறிவித்து ஜனங்களை திரள் கூட்டத்தில் சேர்ப்பது பிரதான கட்டளையை நிறைவேற்றியதும் ஆகாது. காரணம் பிரதான கட்டளை இப்படிச் சொல்லுகிறது.

அப்பொழுது இயேசு சமீபத்தில் வந்து, அவர்களை நோக்கி: வானத்திலும் பூமியிலும் சகல அதிகாரமும் எனக்குக் கொடுக்கப்பட்டிருக்கிறது.  ஆகையால், நீங்கள் புறப்பட்டுப்போய் சகல ஜாதிகளையும் சீஷராக்கி, பிதா குமாரன் பரிசுத்த ஆவியின் நாமத்திலே அவர்களுக்கு ஞானஸ்நானங்கொடுத்து,நான் உங்களுக்குக் கட்டளையிட்ட யாவையும் அவர்கள் கைக்கொள்ளும்படி அவர்களுக்கு உபதேசம் பண்ணுங்கள்; இதோ, உலகத்தின் முடிவுபரியந்தம் சகல நாட்களிலும் நான் உங்களுடனேகூட இருக்கிறேன் என்றார். ஆமென். (மத்தேயு 28: 18-20)

இன்றைய கிறிஸ்தவர்கள் சொல்லும், இயேசுவிட நன்மையைப் பெற்றுக்கொள்ளுதல், அவருடைய உபதேசத்தைக் கேட்பது, அவரிடம் செய்யும் ஜெபத்துக்கு பதில் கிடைப்பது, அவருடைய பிரசன்னைத்தை உணர்வது, இயேசுவின் அன்பை ருசிப்பது,  இயேசு செய்த நன்மைகளை அடுத்தவர்களுக்கு சொல்வது இவை யாவும் அந்த திரள் கூட்டத்தாரின் வாழ்விலும் இருந்ததைப் பாருங்கள். அழைக்கபட்டவர்கள் அநேகர்தான் ஆனால் தெரிந்து கொள்ளப்பட்டவர்களோ சிலர் (மத் 6:16). அந்த அநேகருக்கு நித்தியத்துக்குரிய வாக்குத்தத்தம் இல்லை. இடுக்கமான வாசலுக்குள் நுழைந்த சிலர் மாத்திரமே அதற்கு பாத்திரவான்கள்!

திரள் கூட்டத்துக்கு ஆள் சேர்ப்பவர்களுக்கு ஒரு எச்சரிக்கை

நீங்கள் செய்வது நல்ல காரியமாக இருக்கலாம், ஆனால் அது ஊழியம் அல்ல. இயேசுவுக்கு சீஷர்கள் மாத்திரமே வேண்டும். அவருக்கு சீஷனாயிராதவன் அவருக்கு பகைஞன் என்று வேதம் சொல்லுகிறது. ஒன்று நாம் அவருக்கு சீஷராயிருக்க வேண்டும், அல்லது பகைவராயிருக்க வேண்டும். இயேசுவுக்கு சீஷர்களை உருவாக்குவதே ஊழியம் ஆகும். மற்றதெல்லாம் சிதறடிக்கும் செயலேயன்றி வேறெல்ல

என்னோடே இராதவன் எனக்கு விரோதியாயிருக்கிறான், என்னோடே சேர்க்காதவன் சிதறடிக்கிறான்.(லூக்கா 11:23 )


ஒருவேளை இன்று நீங்கள் திரள்கூட்டத்தில் ஒருவராக இருந்தாலும் இன்னும் இடுக்கமான வாசலின் கதவு அடைக்கபடவில்லை. நமக்கு இன்னும் நம்பிக்கை இருக்கிறது. நம்மை அன்புடன் ஏற்றுக்கொண்டு அரவணைக்க ஆண்டவர் ஆயத்தமாகவே இருக்கிறார்.  இதோ, இப்பொழுதே அநுக்கிரககாலம், இப்பொழுதே இரட்சணிய நாள் (2 கொரி 6:12).

-வாட்ச்மென்

No comments:

Post a Comment